தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் சதியின் ஒரு பகுதியாக நேற்று (17-01-2019) மதியம் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் மாணவர் சந்தோஷை வீடு புகுந்து தாக்கி அடித்து இழுத்துச் சென்றது சீருடை அணியாத போலீசு கும்பல்.
அதனைத் தொடர்ந்து பண்டாரம்பட்டி மக்கள், கடத்திச் சென்ற போலீசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை சந்தோசை எங்கே வைத்திருக்கிறோம் என்பதை அறியத்தராத போலீசு, அவரை கடுமையாக தாக்கியிருக்கிறது. பின்னர் இரவு, அவரை ரிமாண்ட் செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.
இந்நிலையில் பண்டாரம்பட்டி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரிராகவன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர் மைக்கேல் ஆகியோரும் இப்போராட்டத்தில் பண்டாரம்பட்டி மக்களுடன் இணைந்து விடிய விடிய பங்கேற்றனர். இன்று (18-01-2019) அதிகாலை சுமார் 5:30 மணியளவில் பண்டாரம்பட்டியில் அவர்கள் இருவரையும் கைது செய்தது தூத்துக்குடி போலீசு.
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து, அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்ததன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஜனவரி மாதத்தில் திறக்கவிருப்பதாக அறிவித்தது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
அதற்கான ஆயத்தப் பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வந்த நிலையில், ஆலை திறப்பை எதிர்த்துப் போராடும் முன்னணியாளர்களைக் குறிவைத்து கைது செய்து வருகிறது போலீசு.
படிக்க:
♦ தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்
♦ தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் !
ஸ்டெர்லைட் – மோடி – எடப்பாடி – போலீசு கூட்டணியை முறியடித்து ஸ்டெர்லைட்டை இழுத்து மூட மீண்டும் ஒரு டெல்லிக்கட்டு போராட்டத்திற்கு தயாராவோம் !