அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 600 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவைகளில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசுக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீட்டின் மூலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள்.
இந்த மாணவர்களின் படிப்பை, எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, முதலாண்டு தேர்ச்சி பெறாத பாடங்களை அடுத்த ஆண்டு செமஸ்டரில் தான் எழுத முடியும். அதுவும் சி.பி.சி.எஸ் கிரிடிட் முறைபடி மூன்று பாடங்களை மட்டுமே ஒரு செமஸ்டரில் அரியராக விண்ணபித்து எழுத முடியும். இம்முறையினால் தற்போது முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்கள் படிப்பை உரிய காலத்தில் முடிக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தரமான ஆசிரியர்கள், தரமானக் கல்வி கிடைப்பதற்கான கல்விச் சூழல், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் பொறியியல் கல்வியை குப்பையாக்கிய அண்ணா பல்கலைக்கழகம், இப்போது, மாணவர்களுக்கு சுமைக்கு மேல் சுமையை ஏற்றி படிப்பை முடிக்க முடியாத சூழலை உருவாக்கி இடையிலேயே விரட்டுகிறது.
இதனை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்வு முறையை உடனே இரத்து செய்ய வேண்டும். அந்தந்த ஆண்டே அரியர் தேர்வுகளை முழுவதும் எழுதும் பழைய முறையையே அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
தொடர்புக்கு: 9445112675