பூமிப்பந்தை அழிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு 1983-ம் ஆண்டின் அதிகாலை பொழுதொன்றில் சோவியத் அதிகாரி ஒருவருக்கு வந்து சேர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் சோவியத் யூனியனை இன்னும் 25 நிமிடங்களில் தாக்கவிருப்பதாக அந்த அதிகாரியின் கணினிக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அந்த அதிகாரியின் பெயர் ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்.

ஸ்டானிஸ்லாவ் பெட்ரோவ்

ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்று கருதியதால் மேலதிகாரிகளுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் அந்த கீழ்நிலை கடற்படை அதிகாரி தெரிவிக்காமல் இருந்துவிட்டார். அதன் மூலம் ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது. பின்னர், கணினியில் ஏற்பட்ட கோளாறுதான் அச்செய்திக்கான காரணமென உறுதியானது. இது போன்ற இன்றியமையாத தகவலை தெரிவிக்காததற்கு பெட்ரோவ் கண்டிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் பணியிலிருந்து அவரே விலகிவிட்டார்.

இரண்டு தலைமுறைகளாக அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தி வந்த ஒரு கட்டமைப்பு சரிந்து விழும் நிலையில் கடந்த ஆண்டு 77 வயதான அவர் இறந்து விட்டார். சாத்தியமான அணு ஆயுத மோதல்கள் என்பது பனிப்போரின் தொடர்ச்சியாக தோற்றமளிக்கலாம் ஆனால் அவற்றைத் தடுப்பதற்கான கட்டமைப்பு சமீபத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து அது பேராபத்தில் இருக்கிறது.

1987-ம் ஆண்டு போடப்பட்ட ”மிதமான தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை”-யிலிருந்து (Intermediate-Range Nuclear Forces Treaty) வெளியேறப்போவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் 2018-ம் ஆண்டு கூறினார். இந்த உடன்படிக்கை ஐரோப்பாவில் அணு ஆயுதம் பெருகாமல் இருப்பதற்கு பெரும்பங்கு வகித்தது. தரைதள சீர்வேக ஏவுகணையை ரசியா சோதனை செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் முன்னாள் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ்

அடுத்ததாக 2010-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரசிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ் இருவரும் கையெழுத்திட்ட போர்த் தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty) காலாவதியாகக் கூடிய நிலையில் இருக்கிறது. வரும் 2021-ம் ஆண்டில் காலாவதியாக இருக்கும் இந்த ஒப்பந்தத்தை “மோசமான ஒப்பந்தம்” என்று விளாதிமிர் புதினுடனான தொலைபேசி அழைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த உடன்பாட்டை தகர்ப்பதற்கான ஆயத்தங்களை அமெரிக்கா செய்து வருகிறது என்று நம்புவதாக இரசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

மேலும் உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்களை கடந்த ஆண்டு இரசியா தயாரித்திருக்கும் நிலையில் 1972-ம் ஆண்டின் நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறியதே தற்போது புதிய ஆயுத போட்டியை உருவாக்கியிருப்பதாக புதின் குற்றம் சாட்டியிருந்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலிலிருந்து தாக்கும் அணு ஆயுத ஏவுகணை கொம்பு முனையை (Cape Horn) சுற்றி காலிபோர்னியாவை நோக்கி வடக்கே செல்வது போன்ற ஒரு அனிமேசன் காணொளி இரசிய நாட்டு மக்களுக்கான அவரது உரையின் போது ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.

“எங்களது நாடு சொல்வதை நீங்கள் கேட்கவில்லை” என்று 2001-ம் ஆண்டு நீண்ட தூர ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை கூறிய புதின் “இப்பொழுது நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறினார்.

பனிப் போரிலிருந்தும் பின்னரும் கிடைத்த படிப்பினைகளிலிலிருந்து ரசியாவும் அமெரிக்காவும் இது போன்ற பல்வேறு உடன்படிக்கைக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தன.

“இந்த உடன்படிக்கைகள் முழு நிறைவானது அல்ல” என்று இரு தரப்பு வல்லுனர்களும் கூறுகின்றனர். மேலும் இந்த உடன்படிக்கைகளை சமரசம் செய்வது முறித்து கொள்வதை விட மிகவும் கடினமானது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

படிக்க:
♦  ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
♦ பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

இடைப்பட்ட தூரம் பாயும் அணு ஆயுத ஏவுகணை தடுப்பு (INF) உடன்படிக்கையை நீட்டிப்பதற்கான உண்மையான விவாதங்கள் நடக்காதததால் புதியதொரு கண்மூடித்தனமான ஆயுத போட்டியில் நம்மை தள்ளியிருக்கிறது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அட்லாண்டிக் மன்றத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் போர்த்தந்திர ஆயுத குறைப்பு உடன்படிக்கை தூதராக பணியாற்றிய ரிச்சார்டு பார்ட் கூறினார்.

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாத சீனா மற்றும் இதர நாடுகளுடைய இராணுவ நடவடிக்கைகளை பார்த்தே இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறப் பார்க்கிறது என்று ரசிய கூட்டமைப்பின் போர்த்தந்திர ஏவுகணைப் படைப்பிரிவின் (Russian Federation Strategic Missile Force) முன்னாள் தலைவரான விக்டர் ஏசின் கூறியிருக்கிறார்.

இந்த அணு ஆயுத ஏவுகணை தடுப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால் தவிர்க்கவியலாமல் அதிகரித்திருக்கும் இந்த ஏவுகணை நெருக்கடியிலிருந்து அரசியல் ரீதியிலான முடிவுகள் மட்டுமே ரசியா மற்றும் ஐரோப்பாவை காப்பாற்றும் என்று அவர் மேலும் கூறினார்.

அந்த எச்சரிக்கைகள் சரியாக இருக்கின்றன. தரைவழி ஏவுகணைகளை கூடிய விரைவில் உருவாக்கி தயார்படுத்துமாறு பென்டகனுக்கு போல்டன் உத்தரவிடுவதை வாஷிங்டன் போஸ்ட் ஒரு பதிவில் அம்பலப்படுத்தி இருக்கிறது. உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கூறிய உடனேயே அதனை தடுக்க அதனுடைய ஐரோப்பிய கூட்டாளிகள் குறுக்கிட்டதற்கு பிறகே இந்த உத்தரவு வந்துள்ளது. இரசியாவிற்கு வாஷிங்டன் 60 நாட்கள் கெடு விதித்து உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாகவும் எச்சரித்துளளது. அதே நேரத்தில் உடன்படிக்கையை மீறியதாக ஒப்புக்கொள்ளாத இரசியா தன்னுடைய போக்கையும் மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறி விட்டது.

போல்டன்

இதற்கு பின்னணியில் போல்டன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆயுத தடுப்பு உடன்படிக்கைகளிலிருந்து வெளியேறுவதற்கு அவர் ஆர்வத்துடன் இருக்கிறார். 2001-ம் ஆண்டின் ஏவுகணை தடுப்பு உடன்படிக்கை மற்றும் தற்போது அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கை ஆகிய இரண்டும் முறியடிக்கப்பட்டதன் பின்னணியில் அவர் இருக்கிறார்.

உறுதிமிக்க தனிநபர்களால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியும். 1983-ம் ஆண்டில் தன்னுடைய உயரதிகாரிகளை எச்சரிக்கை செய்யாத பெட்ரோ அச்சூழல் தனது அடிவயிற்றில் புளியைக் கரைத்ததாக கூறுகிறார். இன்றோ போல்டனின் முடிவினால் ஏவுகணை உடன்படிக்கை மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா தன்னை துண்டித்துக் கொள்ளும்படி செய்துள்ளது.


தமிழாக்கம் : சுகுமார்
மூலக்கட்டுரை :  த  கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க