கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம் !
போலீசு மட்டுமல்ல, நீதிமன்றங்களும் ஸ்டெர்லைட் முதலாளியின் கூலிப்படைதான் என்பதைத் தமிழக மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு. ஸ்டெர்லைட்டை மூடுவதற்குத் தமிழக அரசு போட்ட அரசாணை வெறும் சோளக்காட்டு பொம்மைதான் என்ற போதிலும், அந்த அரசாணையைக் கூடச் சட்ட விதிமுறைகளை மீறித்தான் ரத்து செய்திருக்கிறது, தீர்ப்பாயம்.
“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுத்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்திற்குக் கிடையாது; உயர்நீதி மன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோதான் அவ்வழக்கை விசாரிக்க முடியும்” என்பதை ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் மட்டுமின்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, அதில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தீர்ப்பையும் அளித்திருக்கிறது.
இவ்வழக்கில் திட்டமிட்டே தமிழக அரசைத் தவிர வேறுயாரும் எதிர்த்தரப்பாகத் சேர்க்கப்படவில்லை. பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. ஆகியோர் தலையீட்டாளர்கள் என்ற வகையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்தலையீட்டாளர்கள் வல்லுநர் குழுவின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அல்லது நீதிபதி சிவசுப்பிரமணியத்தை நியமிக்க வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகமோ தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவரும் இவ்விவகாரத்தில் பக்கச் சார்பாக நடந்துகொள்வார்கள் எனப் பழிபோட்டு, அவர்களை நியமிக்க மறுப்புத் தெரிவித்தது. தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் ஸ்டெர்லைட்டின் மறுப்புக்குப் பணிந்து, ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலை வல்லுநர் குழுவின் தலைவராக நியமித்தார். இந்நியமனத்தை எதிர்க்காமல் அமைதி காத்து, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடந்து கொண்டது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் நிர்வாகம் வல்லுநர் குழுவிடம் அளித்த ஆவணங்களின் நகலைத் தலையீட்டாளர்களுக்கும் அளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவின் தலைவர் நீதிபதி தருண் அகர்வால் அந்த ஆவணங்களை தலையீட்டாளர்களுக்கும் கொடுக்குமாறு உத்தரவிட மறுத்தார். இதனால் பக்கச் சார்பற்ற விசாரணை என்பதற்கே இடமில்லாமல் போனது. அது மட்டுமின்றி, இவ்விசாரணைக் குழு தனது வரம்புகளை மீறி, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என இறுதித் தீர்ப்பு போலவே அறிக்கையை எழுதித் தீர்ப்பாயத்திடம் அளித்தது. தமிழக அரசின் அரசாணையைத் தீர்ப்பாயமே விசாரிக்க முடியாது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், வல்லுநர் குழுவிற்கு இந்த வானளாவிய அதிகாரம் எங்கிருந்து வந்தது?
வல்லுநர் குழு அளித்த அறிக்கையைத் தமிழக அரசு, தலையீட்டாளர்கள், ஸ்டெர்லைட் ஆகிய மூன்று தரப்புக்குமே அளிக்க மறுத்தார், தீர்ப்பாயத் தலைவர். நடுநிலை போலத் தெரியும் இந்த முடிவு உண்மையில் ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமானது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, இரண்டு தரப்புக்கு மட்டுமே வல்லுநர் குழு அறிக்கையை அளித்த தீர்ப்பாயம், தலையீட்டாளர்களுக்கு அந்த அறிக்கையைத் தர மறுத்தது. இறுதியாக, வல்லுநர் குழு கூறியதையே, “ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது” என மண்டபத்தில் எழுதப்பட்ட மணிவாசகத்தையே தீர்ப்பாகவும் அளித்துவிட்டது.
படிக்க:
♦ தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
♦ அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !
மேலும், ஸ்டெர்லைட் எப்படியெல்லாம் காற்றையும், நீரையும், உப்பாற்றையும் மாசுபடுத்தியிருக்கிறது என விசாரணையில் எடுத்துக்காட்டப்பட்டதோ, அக்குற்றங்களில் இருந்தெல்லாம் ஸ்டெர்லைட்டை விடுவித்தும்விட்டது, தீர்ப்பாயம். தூத்துக்குடி நகர மேம்பாடு என்ற பெயரில் ஸ்டெர்லைட் தர முன்வந்திருக்கும் 100 கோடி ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிற்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறது. இது உதவியல்ல, இலஞ்சம்! ஸ்டெர்லைட் தனது குற்றங்களைக் கழுவிக் கொள்ள தீர்ப்பாயம் கூறியிருக்கும் பரிகாரம்.
இத்தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. அத்துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும், இதில் பாதிப்பேர் பின்புறமாகச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது.
ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத் தமிழக போலீசு செயல்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் வழியாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. எனினும், இப்படுகொலைகளை விசாரிப்பதாகக் கூறிவரும் சி.பி.ஐ., கொலைக் குற்றமிழைத்த எந்தவொரு போலீசுக்காரனையும் இதுநாள் வரை கைதும் செய்யவில்லை, வழக்கும் பதியவில்லை. அதேபொழுதில், இக்கொலைகளின் சூத்திரதாரியான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆலையை மீண்டும் திறந்து நடத்திட அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
“ஆலையை மூடும் அரசாணையை வெளியிடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்” எனத் தனது ஆணையில் ஸ்டெர்லைட்டின் வக்கீலாக நின்று வாதாடியிருக்கிறது, தீர்ப்பாயம்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமைக்காக இந்தளவிற்கு வாதிட்டிருக்கும் தீர்ப்பாயம், “காற்றையும், நீரையும் நச்சுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்” எனக் கோரிவரும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் குரலுக்கு என்ன மதிப்பு அளித்திருக்கிறது? 100 கோடி பணத்தை வீசி அவர்களின் வாயை அடையுங்கள் எனக் கீழ்த்தரமாக வழிகாட்டியிருக்கிறது.
தீர்ப்பாயத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக உதார்விட்டு வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி. அந்த உதார் உண்மையானால்கூட, தீர்ப்பு மக்களுக்குச் சாதகமாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால், தீர்ப்பாயத்தின் முன்னோடியே உச்சநீதி மன்றம்தான். நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து, 100 கோடி அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்திக் கொள்ள அனுமதியளித்த இழிபுகழ் கொண்டதுதான் உச்சநீதி மன்றம்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருவதாகப் பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருந்ததைக் கலைத்துப் போட்டது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. தீர்ப்பாயத்தின் ஆணையோ, சட்டத்தின் ஆட்சியெல்லாம் இனி இல்லை, நடைபெறுவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதைப் பாமரனும் புரிந்துகொள்ளும்படி தெளிவுபடுத்திவிட்டது. இன்றைய அரசியல், பொருளாதாரக் கட்டுமானம் பொதுமக்களுக்கு எதிரானது, விரோதமானது என்பதை ஐயந்திரிபுற நிரூபித்திருக்கிறது ஸ்டெர்லைட் விவகாரம்.
பொதுமக்களுக்கு விரோதமான, எதிரான இந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தேர்தல்கள் மூலமோ ஆளுங்கட்சிகளை மாற்றுவதன் மூலமோ வீழ்த்திவிடலாம் என்பதெல்லாம் வீண் கனவு. மாறாக, பொதுமக்களை அணிதிரட்டி, அமைப்பாக்கி, கீழிலிருந்து கட்டப்படும் மக்கள் அதிகார அமைப்புகள் மூலமே கார்ப்பரேட் கும்பலின் அதிகாரத்தைத் தடுத்து நிறுத்த முடியும், வீழ்த்த முடியும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் இருந்து எந்தளவிற்கு வீச்சாகவும் சமரசமின்றியும் எழுகிறதோ, அப்போராட்டத்தின் ஊடாக மட்டுமே நமது வெற்றியை உறுதி செய்யமுடியும்.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |