அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? – மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
அவசரநிலை காலத்தில், இந்திரா காந்தியின் மத்திய அரசு அரசமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்திருந்தது (suspended fundamental rights); விசாரணை இன்றி சிறையில் அடைக்கும் “மிசா” சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட ஆயிரக் கணக்கானோரை சிறையில் அடைத்தது; சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சட்டப்படி அடைக்கப்பட்டார்களா என்ற கேள்வியை ஆட்கொணர்வு ரிட் மனுவில் உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ விசாரிக்க முடியுமா என்ற வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அதில் நான்கு நீதிபதிகள், அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். ஆனால், நீதிபதி H.R.கன்னா மட்டும் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையும் தனிநபர் சுதந்திரமும் ஒவ்வொரு மனிதனும் பெற்ற இயற்கையான உரிமைகள் என்பதால் மற்ற அடிப்படை உரிமைகளை அவசரநிலை காலத்தில் நிறுத்தி வைக்கலாமே ஒழிய, மனித சமூகம் பெற்ற இந்த இயற்கையான உரிமைகளை எந்த அரசும் நிறுத்தி வைக்க முடியாது என்றார். இதனால் மூத்த நீதிபதியான அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டு அவருக்கு இளைய நீதிபதி தலைமை நீதிபதியாக்கப்பட்டார்.
இதனை கண்டிக்கும் விதமாக H.R.கன்னா உச்சநீதிமன்ற நீதிபதி பதவியையே துறந்தார். மனித உரிமை காப்பாளர் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக உறுதியாக நின்றவர் என சமூகம் — குறிப்பாக நீதித்துறையை சார்ந்தவர்கள் — அவரை இன்றும் கொண்டாடுகிறது. 42 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதி H.R.கன்னாவின் தீர்ப்பே சரியானது என்று வரலாற்று சிறப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 10-01-2019 அன்று தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு (collegium) பரிந்துரைத்தது என்றும், உடனே 16-01-2019 அன்று மத்திய அரசு அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
சஞ்சய் கன்னா, மேற்சொன்ன H.R.கன்னாவின் சகோதரரின் மகன். டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 மூத்த நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டு, நான்காவது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவிற்கு இப்பதவி கொடுக்கப்படுகிறது. இது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை துறந்த H.R.கன்னாவிற்கு செய்யும் அவமரியாதை.
இந்த 3 மூத்த நீதிபதிகளில் இருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக உள்ளனர். சஞ்சய் கன்னா தலைமை நீதிபதியாகவே ஆகவில்லை.
படிக்க:
♦ நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு ! நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
முதல் நிலையில் இருக்கும் பிரதீப் நந்ராஜோக்-ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 12-12-2018 அன்று கூடிய தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு முடிவெடுத்தது. அந்த ஐவரில் ஒருவரான மதன் B. லோகூர் 12-12-2018-க்கு பின்னர் ஓய்வு பெற்தால் தேர்வுக்குழுவில் 5-வது நீதிபதியானார் அருண்மிஸ்ரா.
அருண்மிஸ்ராவை உள்ளடக்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக்குழு 12-12-2018 முடிவை கைவிட்டது. அருண்மிஸ்ரா தவிர்த்து மற்ற நால்வரும் 12-12-2018 மற்றும் 10-01-2019 ஆகிய இரு தேர்வுக்குழுக்களிலும் இருந்தனர்.
முன்னாள் தலைமை நீதிபதி லோதா, ஒரு தேர்வுக்குழு எடுத்த முடிவை, அதில் ஒருவர் ஓய்வு பெற்றார் என்ற நிலையில் அடுத்த தேர்வுக்குழு மாற்றுவது சரியில்லை என்று கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு அடுத்த நிலையில் இருந்த 4 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் — செல்லமேஸ்வர், தற்போதைய தலைமை நீதிபதி, குரியன் ஜோசப், மதன் B. லோகூர் — ஊடகத்தை சந்தித்தது நீதித்துறை வரலாற்றில் முதல்முறை நடந்த நிகழ்வு. மத்திய அரசு விரும்பும் வகையில், அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை தீர்மானிக்க அனுப்புவதில் அவர்களுக்கு ஆட்சேபனை உள்ளது என்று ஊடக சந்திப்பில் கூறினர்.
டில்லி உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி சஞ்சய் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதை ஆட்சேபித்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்னர் பணியாற்றி தற்சமயம் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டும். இந்திய பார் கவுன்சிலும் இதை கண்டித்துள்ளது.
இந்த நேரத்தில், கேரளத்தை சேர்ந்த K.M.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் மத்திய அரசின் நிலைபாட்டை கவனிக்க வேண்டும். அவர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர். அவர் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரும் மத்திய அரசின் உத்தரவை அவர் ரத்து செய்தார். எனவே அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்தது.
K.M.ஜோசப்பை நிராகரிப்பதற்கு அவர் அகில இந்திய சீனியாரிட்டியில் 42-வது இடத்தில் இருப்பதாக காரணம் காட்டிய மத்திய அரசு, அகில இந்திய சீனியாரிட்டியில் 33-வது இடத்தில் இருக்கும் சஞ்சய் கன்னாவின் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தந்துள்ளது.
அகில இந்திய சீனியாரிட்டியைக் காட்டிலும் மிக முக்கியமானது, உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர் முதலில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியா என்பதே ஆகும்.
இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்படாத அவசரகாலநிலை (undeclared emergency) இருப்பதையும் நீதித்துறையின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதையும் தெளிவாக்குகிறது.
முகநூலில்: மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்