சமீபத்தில் நடந்த குடியரசு தின விழா தொற்றா நோய்கள் விழிப்புணர்வு மருத்துவ முகாமில், கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு சிற்றூரிலிருந்து வந்திருந்த 25 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
ரத்தப் பரிசோதனை செய்ய அனுமதித்த நூறு பேருக்கு ரத்த சர்க்கரை அளவு சோதிக்கப்பட்டது.
மிகவும் அதிர்ச்சி தரும் விசயமாக ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்ட சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்களில் 50% நபர்களுக்கு ரத்த அழுத்தம் சராசரி சரியான அளவை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் சுமார் 50 பேருக்கு ரத்த கொதிப்பு நோய் இருப்பது அதுவரை தெரியாது.
100-க்கு மேற்பட்டவர்களுக்கு தாங்கள் எடுக்கும் ரத்த கொதிப்பு மாத்திரைகள் சரியாக எடுக்காததாலும் / தேவையான அளவுள்ள மாத்திரை எடுக்காததாலும் ரத்த அழுத்தம் சரியாக இல்லை என்று கண்டறியப்பட்டது
ரத்த சர்க்கரை அளவுகள் சோதித்ததில் சுமார் 100 பேரில் 48 நபர்களுக்கு சரியான அளவை விட அதிகம் இருந்தது. அதில் 33 நபர்களுக்கு தங்களுக்கு நீரிழிவு இருப்பது அதுவரை தெரியாது.
இந்த சிறிய முகாம் மூலம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வானது தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அம்மா ஆரோக்கியத் திட்டம் எனும் முழு உடல் பரிசோதனை முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.
ஆம்.. தமிழகத்தில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் பேருக்கு ரத்த கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20-30 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது தெரியவருகிறது.
நிலம் / தொழில் / பொருளாதாரம் இவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை…
ஏழை, பணக்காரன், நன்றாக உழைப்பவன், அசமந்தமாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவன், ஆண், பெண் என்ற பெரிய பாகுபாடுகள் எல்லாம்
இல்லை..
எங்கு காணிணும் நீரிழிவும் ரத்தக்கொதிப்பும் வியாபித்திருக்கிறது. மூன்று புறத்தில் நீராலும் அனைத்து புறத்திலும் நீரிழிவால் சூழப்பட்ட தேசமாய் தமிழகம் மாறி வருகிறது.
படிக்க :
♦ சர்க்கரையின் அறிவியல்
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
நாங்கள் சென்ற மலைவாழ் கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நீரிழிவு ரத்தக்கொதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.
இதே நிலை தமிழகத்தின் கிராமங்களிலும் ஏன் பல நகர்ப்பகுதிகளிலும் உண்டெனலாம். நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எங்கு மக்கள் கூடிப்பிரிந்தாலும் இந்த இரு நோய்கள் குறித்து பேசப்பட வேண்டும்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
இளைஞர்களுக்கு – இளைஞிகளுக்கு ஆரோக்கிய உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நூற்றாண்டு “தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு”.
தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது ஆனால் ஒரு சமூகத்தை ஒரு நாட்டை ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தை அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.
அரசு கட்டாயம் தனது உணவு சார்ந்த கொள்கைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. கொழுப்புணவை கெட்டது என்றும் மாவுச்சத்து கட்டாயம் என்றும் பேசியதால் இன்று அனைத்து மக்களும் மாவுச்சத்து / இனிப்பு / சீனி என்று அடிமையாகி நீரிழிவிற்கும் ரத்தக்கொதிப்புக்கும் இரையாகின்றனர்.
இன்னும் மருத்துவர்கள் கூடும் ஒரு கலந்தாய்வாகட்டும், ஒரு முக்கிய கூட்டமாகட்டும் அங்கும் சீனி கலந்த டீ காபி மட்டுமே வழங்கப்படுகிறது இது வேதனையான விசயம்.
எனது கனா யாதெனில் சீனி சர்க்கரை மற்றும் இவை கலந்த பானங்கள் பண்டங்களை விசமாகப்பார்க்கும் காலம் மலர்வதே…. பிறகு புகை மதுவை பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் நம் வீட்டில் உள்ள சீனி / நாட்டு சக்கரை / போன்ற அனைத்து இனிப்புகளையும் குப்பையில் போட வேண்டாம்… எரித்து விடுவோம் குப்பையில் போட்டால் நாயோ மாடோ பூனையோ கூட அதை திண்ணக்கூடும். அவற்றுக்கும் அவை விசம்தான்…
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.