அடக்குமுறைதான் ஜனநாயகமா?
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்!

மாநாடு – கலைநிகழ்ச்சி
உழவர் சந்தை – திருச்சி
23 – பிப்ரவரி 2019
சனி மாலை 4 மணி

ந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் முஸ்லீம்கள், பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் அனைத்தையும் இழந்து வரும் தொழிலாளிகள், அறிவியலைப் பேசினாலே அச்சுறுத்தப்படும் அறிஞர்கள்… அனைவரின் விருப்பமும் ஒன்றுதான் – இந்த ஆட்சி ஒழிய வேண்டும். ஏனென்றால், இது கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் ஆட்சி.

இந்த ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு வெறுக்கிறார்களோ அந்த அளவுக்கு பன்னாட்டு முதலாளிகளும், தரகு முதலாளிகளும் இதனை நேசிக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையின் பாதிப்பேருடைய சொத்து ஒன்பது முதலாளிகளின் சொத்துக்குச் சமம் என்கிறது 2019 இல் வெளிவந்திருக்கும் ஆக்ஸ்ஃ பாம் ஆய்வு. மோடியின் ஆட்சி என்பது, ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்பும் இந்து ராஷ்டிரத்தின் டீஸர்.

ஸ்டெர்லைட் இதற்கோர் எடுத்துக்காட்டு. இந்த நச்சு ஆலையை எதிர்த்த குற்றத்துக்காக தமிழ்மக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்த ரத்த வாடை அடங்குவதற்குள் ஆலையை மீண்டும் திறக்க ஏற்பாடு நடக்கிறது. எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட போலீசு தடைவிதிக்கிறது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தூத்துக்குடியை சுடுகாடாக்கிய வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, தஞ்சை டெல்டாவைத் தாரை வார்க்கிறார் மோடி. ஆசிஃபாவைக் குதறியபின், அந்தச் சிறுமியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் காலிகளின் நடவடிக்கைக்கும், மோடி அரசின் இந்தச் செயல்பாட்டுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

படிக்க:
மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி
பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்

“செயல்படும் பிரதமர்” என்று புகழாரம் சூட்டி மோடியைப் பதவியில் அமர்த்தினார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இதுதான் அவர்கள் விரும்பிய செயல்பாடு. பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பெட்ரோல் வரி போன்ற எல்லா வழிகளிலும் மக்களிடமிருந்து வழிப்பறி செய்து, அந்தப் பணத்தை மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குகிறார் மோடி. நம்முடைய வரிப்பணம் மட்டுமல்ல, விவசாயிகளின் விளைநிலமும், ஆற்று நீரும், காடுகளும், கடற்பரப்பும் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களைக் கொள்ளையிடுகின்ற கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், உழைக்கும் சாதியினரை ஒடுக்குகின்ற பார்ப்பனியத்துடன் அமைத்திருக்கும் கூட்டணிதான் கார்ப்பரேட் – காவி பாசிசம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். -ன் சித்தாந்தம்.

ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறப்படும் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக எந்திரம், ஊடகங்கள் ஆகியவை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்களையும் பாடத்திட்டத்தையும் காவி மயமாக்கியிருக்கிறார்கள். பஜ்ரங் தள், துர்கா வாகினி, சனாதன் சன்ஸ்தா என்ற பல பெயர்களில் மதவெறிக் கொலைப் படைகளையும், இரகசிய ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் என்பது ஆட்சி மாறினால் தானாகவே அகலக் கூடிய லேசான அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்றுவிடும் தீமைகளல்ல.

எனவே, கார்ப்பரேட் கொள்ளையானாலும், காவி பாசிசமானாலும், அவற்றை நாம் நேருக்கு நேர் நின்று களத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. “மோடியே வெளியேறு!” என்று ஒரே குரலில் முழங்கிய தமிழகம், கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதிலும் முன்மாதிரியாக சாதித்துக் காட்ட முடியும், வீழ்த்திக் காட்டுவோம். வாருங்கள்!

பி.டி.எப். கோப்பாக தரவிறக்க இங்கு அழுத்தவும்.

♦ ♦ ♦ 

மோடியின் “எஸ்கேப் இந்தியா”!

2014 முதல் 2018 வரை வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற வங்கிக் கொள்ளையர்கள் 23,000 பேர். (எக்கனாமிக் டைம்ஸ், 19.3.2018)

நிதின் சந்தேசரா 5,000 கோடி, ஜதின் மேத்தா 6,712 கோடி, மெகுல் சோக்சி 405 கோடி, நீரவ் மோடி 22,000 கோடி.

அத்தனை பேரும் குஜராத் திருடர்கள்.

இதுதான் இந்து ராஷ்டிரம்!

கும்பமேளா 5,000 கோடி
மோடி உலகம் சுற்ற 4,000 கோடி
விளம்பரச் செலவு 3,000 கோடி
படேல் சிலை 3,000 கோடி
புல்லட் ரயில் 1.1 லட்சம் கோடி
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி 2.4 லட்சம் கோடி

கஜா புயல் நிவாரணம் 1,146 கோடி!

பெயரை மாற்று ஊரை ஏமாற்று!

அலகாபாத்துக்குப் பெயர் பிரயாக்ராஜ்!

ரேசன் அரிசியை ஒழிக்கும் சட்டத்தின் பெயர்
உணவு பாதுகாப்புச் சட்டம்!

கருப்பை வெள்ளையாக்கிய மோடியின் பணமதிப்பழிப்புக்குப் பெயர்
கருப்புப் பண ஒழிப்புத் திட்டம்!

ரிலையன்ஸ், எஸ்ஸார் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பெயர்
விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்!

காவி பாசிசம் வென்றால்

உணவு, உடை, பழக்க வழக்கம், காதல், நட்பு, கலை, இசை…
என உங்கள் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் காவி காட்டுமிராண்டிகள் தலையிடுவார்கள்!

இரண்டாயிரம் ஆண்டுகளாய் இந்திய மக்களைக் கொன்று வரும் பயங்கரவாதம், பார்ப்பன பயங்கரவாதமே!


தமிழ்நாடு – புதுவை
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை – 600 083.
தொடர்புக்கு: 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க