சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமாரை விசாரிக்க கொல்கத்தா வந்தது சி.பி.ஐ.  உத்தரவுகளோ முன் அறிவிப்புகளோ இன்றி சி.பி.ஐ, காவல் ஆணையரை கைது செய்ய வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அரசியல் பழிவாங்களில் பாஜக அரசு சிபிஐ-யை ஏவிவிடுவதாக குற்றம்சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக-வும் எதிர்க்கட்சிகளும் சிபிஐ நடவடிக்கைகளை தேர்தல் நேர அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வரும் நிலையில், உண்மையில் சிபிஐயி-ன் செயல்பாடு கூட்டாட்சி முறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.  இதுகுறித்து லீஃப்லெட் இணையதளத்தில் எழுதிய பத்தியில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிபிஐ-க்கு அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மையை அழிக்கும் அதிகாரம் இருப்பதாக கருதுகிறது என விமர்சித்துள்ளார்.

“சட்டம் மற்றும் ஒழுங்கு மாநில பிரச்சினையாக சொல்லிக் கொண்டோம். ஆனால், அரசியல் லாபத்துக்காக மாநிலத்தின் செயல்பாட்டில் தலையிடும் விதமாக, சிபிஐ ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறது. ஒருமுறை நீதிபதி லோதா, சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என சொன்னார். கூண்டில் அடைக்கப்பட்ட கிளியை திறந்துவிட்டால் அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மையை அது அழித்துவிடும் என அவர் கற்பனை செய்யவில்லை.” என்கிறார் இந்திரா ஜெய்சிங்.

இந்தியாவில் ‘கூட்டாட்சி குற்றங்கள்’ இல்லை. கூட்டாட்சி விசாரணை அமைப்பு மட்டுமே உள்ளது என்கிற அவர்,  சிபிஐ-யின் அதிகாரம் ஒரு மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட குற்றங்களை விசாரிக்க அம்மாநிலத்தின் ஒத்துழைப்புக்கு உட்பட்டவை என்கிறார்.  மாநிலங்களைக் கடந்து நடக்கும் குற்றங்களை விசாரிக்க சிபிஐ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து விளக்கமளிக்கிறார் இந்திரா.

“இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய ஒரு குற்றத்தை விசாரிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மாநிலம் ஒரு நபரை கைது செய்து விசாரிக்க நினைத்தால், அந்த நபர் தொடர்புடைய மாநில காவல்துறைக்கு காவல் உதவி தேவை என கோர வேண்டும். எந்த இடத்தில் குற்றம் விசாரிக்க வேண்டுமோ அங்கிருக்கும் நீதிமன்றத்தில் வாரண்ட் பெற வேண்டும்.

இந்திரா ஜெய்சிங்.

சிறப்பான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றம், எந்த மாநிலத்திலும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடலாம்.  சாரதா நிதி மோசடி வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் சிபிஐ-யை விசாரிக்க உத்தரவிட்ட ஆணை இருக்கிறது. ஆனால், அந்த விசாரணை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இல்லை. அதோடு, மேற்கொண்டு போடப்படும் வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

அதாவது, உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, மேற்கு வங்க அரசும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பதாக எழுதியது. சிபிஐ-யும் சி.ஆர்.பி.சி பிரிவு 60-ன் படி சம்மனை அனுப்பியது.  மாநில அரசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தனது அதிகாரிகளின் சம்மனுக்கு எதிராக வழக்கு போட்டது.  கொல்கத்தா நீதிமன்றம் சம்மனை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை வாரண்ட் ஏதுமின்றி கொல்கத்தா காவல் ஆணையர் அலுவலகத்தை சோதனை செய்யும்பொருட்டு சி.பி.ஐ வந்தது.  உயர்நீதி மன்றத்தால் சம்மன் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, சிபிஐ இப்படி நடந்துகொள்கிறதென்றால், அந்த அமைப்புக்கு கொல்கத்தா காவல் ஆணையர் அலுவலகத்தை சோதனை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதே புலனாகிறது.  விதிமுறையின்படி, காவல் ஆணையரை கைது செய்யும் முயற்சி சட்டவிரோதமானது, தீய நோக்கமுடையது.

படிக்க:
♦ மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
♦மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !

அரசியலமைப்பின் படி, நம்மை ஆள கடமைப்பட்டவர்கள், தங்கள் கடமையிலிருந்து தோற்றுவிட்டார்கள். ‘மக்களின் விருப்பத்தின் பேரில்’ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் உள்ளதாக சொல்லிக்கொள்ளும் அரசு, கூட்டாட்சி அரசியலமைப்பில் மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடையவை என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டது. இதுபோன்ற தாக்குதல்கள் பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் நடத்தப்பட்டதில்லை. ”

அரசியல் ஆதாயத்துக்காக காவல் அமைப்புகள் செயல்படுத்தப்படும்போது, நாம் போலீசின் ஆட்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற இந்திரா ஜெய்சின், சமீபத்தில் உச்சநீதிமன்ற கொடுத்த கால அவகாசத்தை பொருட்படுத்தாது ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்ட நினைவு கூறுகிறார். எனவே, சிபிஐ-யின் நடவடிக்கை எதிர்ப்பை கட்டுப்படுத்த ஏவப்பட்டதில் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை எனவும் தன்னுடைய பத்தியில் சொல்கிறார்.

சிபிஐ-யின் அதிகாரமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது; உச்ச நீதிமன்றத்தில் அதனுடைய சட்ட ரீதியிலான தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. தொடர்ச்சியாக இது கேள்விக்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் வழக்கறிஞர் இந்திரா.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமார்

“ரஃபேல் வழக்கு, அலோக் வர்மா வழக்கு இப்போது மேற்கு வங்க வழக்கு என உச்சநீதிமன்றமும்கூட தொடர்ந்து சோதனைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. அது தன்னை அரசியலமைப்பின் பாதுகாவலன் என நிரூபிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” தேர்தல் நெருங்கும் நேரத்தில் நீதிமன்றங்கள் மீதும் அரசியலமைப்பின் மீதும் இன்னும் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்.

இறுதியாக, “ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.


அனிதா
நன்றி: த லீஃப்லெட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க