புல்மாவாவில் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியான நிலையில், அதை வைத்து எந்தெந்த வழிகளில் ‘பிழைப்பை’ நடத்தலாம் என இந்துத்துவ கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது.
காஷ்மீர் மாணவர்கள் மீது நாடெங்கிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல், சமூக ஊடகங்களில் முசுலீம்களுக்கு எதிராக விசம பிரச்சாரம் என இந்துத்துவ கும்பல் தேர்தல் நெருங்குவதையொட்டி வெறியாட்டம் போடுகிறது. வெறுப்பைத் தூண்டி கலவரங்களை நிகழ்த்த காத்திருக்கும் இந்துத்துவ கும்பல் தலைவர்கள் விசத்தை கக்கத் தொடங்கியுள்ளனர்.
விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சாமியார் பிராச்சி, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஒரு யோசனை கூறுகிறார். கூடவே, மோடி முன்பு நிகழ்த்திய படுகொலைகளையும் ‘பெருமை’யுடன் நினைவு கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் பிரதமருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் பிராச்சி, “பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” என்கிறார். விசுவ இந்து பரிசத்தின் ‘யுவ வாஹினி’ பெண்கள் குண்டர் படையை தலைமையேற்று நடத்திவரும் பிராச்சி, உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர்.
“ராவல்பிண்டி மற்றும் கராச்சியை எரித்தால்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும்” என்றும் அந்த வீடியோவில் பிரதமருக்கு ‘யோசனை’ சொல்கிறார் பிராச்சி.
2002 -ல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று குவித்தது இந்துத்துவ கும்பல். அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர் 60 பேர் கோத்ரா ரயில் பெட்டிக்குள் வைத்து எரிக்கப்பட்டனர். இதை செய்தது முசுலீம்கள் எனக் கூறி, பெரும் கலவரத்தில் ஈடுபட்டது இந்துத்துவ கும்பல். ‘ஒரு வினை நிகழ்ந்தால் அதற்கு எதிர்வினையும் இருக்கும்’ என்றார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி.
படிக்க:
♦ இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
♦ மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, “தடயவியல் ஆய்வு கோத்ரா ரயிலுக்கு உள்ளே இருந்துதான் தீ பற்ற வைக்கப்பட்டது என்பதைச் சொன்னது. 60 லிட்டர் பெட்ரோலும், விசுவ இந்து பரிசத் அமைப்பினர் இருந்த பெட்டிக்குள் ஒரு முசுலீமால் நுழையவே முடியாது. தங்களுடைய சுய லாபத்திற்காக தங்களுடைய சொந்த அமைப்பினரை கொல்லத் துணிந்தவர்கள் அந்த அமைப்பின் தலைவர்கள். என்னை நம்புங்கள்; எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்று பேட்டியளித்திருந்தார்.
தடயவியல் ஆய்வு, எந்தவித எரியும் திரவமும் வெளியே இருந்து உள்ளே ஊற்றப்பட்டதற்கான தடயம் இல்லை எனக் கூறியது.
அந்த வழக்கில் சில முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தீர்ப்பு வந்துவிட்டது. தொடக்கம் முதலே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என பலரும் சொல்லிவரும் நிலையில், நீதிமன்றம் பல்வேறு சாட்சியங்களை புறம்தள்ளிய நிலையில், படுகொலை நிகழ்த்திய கும்பலே தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
BJP leader Sadhvi Prachi made two things clear:
A) Modi govt will do some drama in the north western border of India in the run up to election.
B) She said in open who orchestrated Godhra carnage
— Ravi Nair (@t_d_h_nair) February 18, 2019
“மோடி அரசு வடமேற்கு எல்லையில் சில நாடகங்களை தேர்தலுக்காக நடத்த இருக்கிறது என்பதும், கோத்ரா சம்பவத்தை நிகழ்த்தியது யார் என்பதும் பிராச்சியின் மூலமாக தெரியவருகிறது” என்கிறார் பத்திரிகையாளர் ரவி நாயர்.
படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது. குஜராத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான முசுலீம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், அதன்பின் இரண்டு முறை முதல்வராகிறார், அதன் பின் நாட்டையே ஆளும் பிரதமராகிறார்.
குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு காரணமான காவி கும்பல் தண்டிக்கப்படவில்லை என்பதும் தற்போது மோடி அரசின் அறிவிக்கப்படாத பாசிச அபாயம் வந்து கொண்டிருப்பதும் வேறு வேறு அல்ல!
அனிதா
நன்றி: ஜன்தா கா ரிப்போர்ட்டர்