இன்று வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் சாலையோரத்தில் காத்திருக்கிறார்கள் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
காலை 8 மணி. இருபதுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சென்னை, கிண்டி மடுவங்கரை பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். அருகில் சென்றதும், நம்மை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறார்கள். என்ன வேலை சார் என்று அரைகுறை தமிழில் ஒரு குரல். பெயர் ரஜேஷ். அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“நான் இங்கே வந்து 8 வருஷம் ஆச்சு சார்… இவங்களெல்லாம் (அருகில் உள்ளவர்களைக் காட்டி) 1 வருஷந்தான் ஆகுது. எங்கள மாதிரி கிட்டதட்ட 300, 400 பேரு இந்த ஏரியாவுல உள்ள மெஸ்ல தங்கி இருக்காங்க. (ஒடிசாக்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை மெஸ் என்றுதான் அழைக்கிறார்கள்) எங்க மாநிலக்காரர் ஒருவர் ஒரு இடத்த வாடகைக்கு எடுத்து எங்களுக்காகவே மெஸ் நடத்தி வருகிறார். அங்கேயே நாங்களும் தங்கிக்குவோம். தங்குறதுக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கும் வாரத்துக்கு 500 ரூபா. வேலைக்கு யாரும் கூப்பிடாதப்ப, காலையில 10 மணிக்கே சொல்லிட்டோமுன்ன பகல் சாப்பாடும் கொடுப்பாங்க.
500 ரூபாய்க்கு சாப்பாடும் தங்குறதுக்கு இடமுமான்னு ஆச்சர்யப்படாதீங்க. இங்கே உள்ள பணக்காரங்க நெறைய பேரு ரேசன் அரிசி வாங்குறதில்ல. அவங்களோட கார்டுக்கு அரிசி வாங்கி தமிழ்காரங்க விக்கிறாங்க. கிலோ 4, 5 ரூபாதான். அப்புறம் என்ன, ஒரு ரூம்லேயே 10, 12 பேர் தங்கிப்போம், இது போதாதா!
இங்க இருக்க மாதிரி எங்க ஊர்ல தொழில் எதுவுமில்ல. அரிசி, பருப்பு… இப்படி விவசாயம் மட்டும்தான் செய்யிறோம். அப்படி விவசாயம் பாக்க எங்களுக்கு நிலமும் ஏதுமில்ல. எங்கேயாவது போயி பொழைக்கலாமுன்னுதான் இங்கே வந்திருக்கோம்.
கம்பெனி வேலை, வீட்டு வேலைகளுக்கு லோடிங், அன்லோடிங், அப்புறம் ஹெல்பர் வேலைகளுக்கு போவோம். வேலைக்கு ஏத்த மாதிரி 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும். எந்த வேலைக்கு கூட்டிகிட்டு போறாங்களோ அத முடிக்கிறதுக்குத்தான் இந்த சம்பளம். நாள் கணக்கோ மணி கணக்கோ பார்க்க முடியாது. எங்க ஊர்ல இதுகூட கிடையாது.
ஒரு நாளு 600 ரூபா கூலி பேசி ஒருத்தர் வேலைக்குக் கூட்டி போனாரு. வேலை முடிச்ச பிறகு சம்பளம் கேட்டா, 400 ரூபாய எடுத்து நீட்டினாரு. 600 ரூபா தர்றதா பேசினீங்களே என்று சொன்னதுதான், “போடா… ***மவனேன்னு” (அதை மட்டும் தெளிவாகப் பேசுகிறார்) கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்.
வருஷத்துக்கு ரெண்டு தடவதான் ஊருக்கு போகமுடியும். கொஞ்ச நாளுகூட அங்கே இருக்க முடியாது, தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்து விடுவோம். வீட்டுக்கு பணம் அனுப்பனுமுன்னா, சேத்துவச்ச பணத்த, கூட வேலை செய்யும் ஒருவரிடம் கொடுப்போம். ஊரில் இருக்கும் அவரோட சொந்தக்காரர் ஆயிரத்துக்கு 20 ரூபாய் கமிஷன் எடுத்துகிட்டு எங்க வீட்டிற்கே கொண்டு போயி கொடுத்துவிடுவார். முன்ன எல்லாம் 50 ரூபாயாயிருந்த இந்த கமிஷன், நெட் ஒர்க் டீம் அதிகமா ஆனதுனால இப்ப 20 ரூபாயா கொறைஞ்சிருச்சு என்றார்.”
ரஜேஷிடம் பேசிக்கொண்டே அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தோம். பகல் 10.30 மணி. அந்த சிறிய அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நெருக்கியடித்துப் படுத்திருக்கிறார்கள். அன்று அவர்களுக்கு வேலையில்லை.
அங்கிருந்து திரும்பி வரும்போது, எங்களையே கவனித்துக் கொண்டிருந்த வேன் ஓட்டுநர் கூறினார்: “இன்ன வேலைன்னு இல்ல சார்! இவங்கள கூட்டிப் போயி எந்த வேலைய வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்; கிட்னியை எடுத்துகிட்டு விட்டாக்கூட கேக்க நாதியில்லை…” என்றார்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம், காட்சிகள் மறைந்துவிட்டது. ஆனாலும், எங்கேயோ ஓரிடத்தில், ஐந்தாறு தொழிலாளிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம், வேன் ஓட்டுநரின் அந்த மெல்லிய வார்த்தைகள் பேரிரைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
