பா.ஜ.க.வின் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் (2001) வெளியான நூல். பதினெட்டு ஆண்டுகள் கடந்திருந்தாலும், மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.

… இந்துத்துவத்திற்கும் பாசிசத்திற்குமான ஒப்புமைகள் தற்செயலானவை அல்ல என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை ஒன்றையும் இந்துத்துவ ஆட்சியை ஆய்வு செய்கிற கட்டுரைகளுடன் ‘இணைத்துத் தனி நூலாக வெளியிடலாம் என முடிவுசெய்தோம். அதுவே இந்த ‘ஆட்சியில் இந்துத்துவம்’, இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வின் இரண்டாம் பாகம்.

ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவம் தனது கவனத்தைக் குவித்துச் செயற்படுத்துகிற ஒரு துறை கல்வி. தேசிய அளவிலான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எதுவுமின்றிப் புதிய கல்விக் கொள்கைகளை அறிவித்து நிறைவேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ‘கடுமையான எதிர்ப்புகளும் மாற்றுக் கருத்துக்களும் நாடெங்கிலும் உருவாகியுள்ளன. அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரிய – மாணவ அமைப்பினர் எனப் பலரும் இவற்றை எதிர்த்துள்ளனர். இவை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது நடுவண் அரசு. இப்படி அறிவியலாளர்கள் எல்லாம் கடுமையாக அறிக்கை கண்டனங்களையும் விடுத்துள்ளனரே, அவர்களைக் கூப்பிட்டுப் பேசித்தான் பார்ப்போமே என இந்துத்துவவாதிகளிடையே மென்மையானவராகத் தோற்றம் காட்டுபவரும், பிரதமர் பொறுப்பில் இருப்பவருமான வாஜ்பேயியும் கூடச் சிரத்தை காட்டவில்லை.

சீனாவையும் பாகிஸ்தானையும் பிரதான எதிரிகளாக நிறுத்தி அமெரிக்காவுடன் அணுக்கம் காட்டுகிற வெளியுறவுக் கொள்கை, ஒரு பக்கம் சுதேசியம் பேசிக் கொண்டே மிகப் பெரிய அளவில் பொருளாதாரத் திறப்பையும், தனியார்மயத்தையும் மேற்கொள்கிற பொருளாதாரக் கொள்கை, பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவியல், இவற்றின் விளைவான ஊழல் – ஆகியவற்றிற்கும் இந்துத்துவக் கோட்பாடுகளுக்குமான உறவுகளும் சிந்திக்கத் தக்கன. சனநாயக அடிப்படைகளில் இவர்களுக்குள்ள நம்பிக்கையின்மையும் அதிகாரக் குவியலில் இவர்களுக்குள்ள நம்பிக்கையுமே இத்தகைய நடைமுறைகள் பலவற்றிற்கு அடிப்படைகளாக உள்ளன, சனநாயக நெறிமுறைகளும் நிறுவனங்களும் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த முன்னுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது தென் ஆப்ரிக்காவில் உள்ள தர்பனில் வரும் செப்டம்பரில் (2001) நடைபெற உள்ள ‘இன வாதத்திற்கு எதிரான உலக மாநாட்டில்’ இன வேறுபடுத்தல்களுக்கு இணையாகச் சாதிய வேறுபடுத்தல்களையும் இணைத்து விவாதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தலித் இயக்கங்கள் வைத்துக் கொண்டுள்ளன. இந்துத்துவ அரசு இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இத்தகைய விவாதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என முடக்குவதில் குறியாய் இருக்கிறது. சொல்கிற காரணம்: சாதியும் தீண்டாமையும் ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாம். ‘ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’ என்ற வாதத்தை இந்துத்துவவாதிகள் தொடர்ந்து முன் வைத்து வருவதும் சிந்திக்கத் தக்கது.

படிக்க:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

பல்கலைக் கழகங்கள் நடத்தும் கருத்தரங்குகளில் வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கு பெறுவார்களேயானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும், பக்கத்து நாடுகளிலுள்ள ஆய்வறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள் என்றால் அவர்கள் வருகைக்குச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். வெளிநாட்டார்கள் யாரும் உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் அவர்கள் முறையான விசா முதலிய பயண ஆவணங்களை வைத்திருந்தாலுங்கூட அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இந்துத்துவ அரசு நாளொரு ஆணைகள் பிறப்பித்து வருகிறது. எல்லாவற்றிலும் அந்நிய
முதலீடுகளுக்குக் கதவை அகல விரிக்கும் இவர்கள் அந்நியப் பத்திரிகைகள், அந்நிய ஆய்வாளர்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சுதல் என்பது குறித்தும் நாம் சிந்தித்தல் அவசியம். (முன்னுரையிலிருந்து நூலாசிரியர் அ.மார்க்ஸ்)

… ICHR இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற குரோவரின் பெயர் பரவலாக அறியப்பட்டது, விசுவ இந்து பரிசத் ராம ஜன்ம பூமிப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதுதான். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்கிற பரிசத்தின் கருத்தை ஒரு வரலாற்று ஆசிரியர் என்கிற பெயரில் ஆதரித்தார் குரோவர். 1994-ல் உலகத் தொல்லியல் மாநாடு (WAC) புதுடெல்லியில் நடைபெற்றபோது இதற்காக அவர் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், மே 98-ல் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற கையோடு பி.எல்.குரோவர் ICHR ன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உலகத் தொல்லியல் மாநாடுகளிலும், இந்திய வரலாற்றுக் கழக மாநாடுகளிலும் வகுப்புவாதத்திற்கு எதிரான தீர்மானங்களை எதிர்ப்பது குரோவரின் முக்கிய பணி.

எடுத்துக்காட்டாகக் குரோஷியாவில் உலகத் தொல்லியல் மாநாடு நடைபெற்றபோது (1998) ‘வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்கேற்ற வகையில் தொல்லியல் சான்றுகளைத் திருத்தக்கூடாது’ என்கிற தீர்மானத்தை மாநாட்டில் நிறைவேற்றியபோது அதை எதிர்த்து பி.பி.லால் உள்ளிட்ட சில இந்துத்துவச் சார்பான வரலாற்றாசிரியர்களை அழைத்துக் கொண்டு வெளி நடப்புச் செய்தார் குரோவர். அண்ணாமலை நகரில் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் கழக மாநாட்டில் (1984) வகுப்புவாதத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது அதையும் குரோவர் எதிர்த்தார். மான்ட்ரலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் (ஆக, 2000) இவ்வாறு ஒரு கருத்தரங்கத்தையே குழப்பியவர் இவர் (ப்ரன்ட்லைன், டிசம்பர், 2000). – இவ்விருவர் தவிர இன்னொரு மோசமான நியமனத்தையும் செய்தார் ஜோஷி. NCERT- யின் கல்வித் துறைகளில் பணி நியமனங்கள் செய்வதற்கான தேர்வுக் குழுவில் கே.ஜி. ரஸ்தோகி என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவருடைய சுயசரிதை 1998-ல் வெளிவந்தது. இந்நூலை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குச் சமர்ப்பித்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தவர் இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.சி.சுதர்சன். தான் ‘பிரச்சாரக்’ ஆகப்பணியாற்றிய காலங்களையும் அப்போது வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதையும் விலாவாரியாக அதில் அவர் விவரித்துள்ளார். ஒரு சம்பவம்: புரண் கலியார் என்னுமிடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஓர் அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி இந்துத்துவ வெறிக் கும்பல் வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை என்பதைக் கண்டு கொண்ட ரஸ்தோகி,

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்க வந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போனார்கள்” (சுயசரிதை பக் 46)

என்றெழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் இது போலப் பல அபத்தங்களும் அக்கிரமங்களும் நிரம்பிய ஒரு நூலை எழுதியவனுக்குத் தான் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கொடுத்தார் ஜோஷி. (நூலிலிருந்து பக்.47-48)

நூல்: ஆட்சியில் இந்துத்துவம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு: அடையாளம் பதிப்பகம்,
எச்15, 193, இரண்டாம் தளம், கருப்பூர் ரோடு, புத்தாநந்தம், திருச்சி – 621 310.
தொலைபேசி: 04332 73444

பக்கங்கள்: 160
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க