காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி மிரட்டும் காவிகள் : காஷ்மீரை புறக்கணிக்கச் சொல்லும் காவி கவர்னர் !

காஷ்மீரிகளை இந்தியர்களாகவே காவிகள் நினைப்பதில்லை என்பதை, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 22 ஆண்டுகளாக வசிக்கும் காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி மிரட்டியிருக்கிறது இந்துத்துவ கும்பல்.

புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தனது வெறுப்பரசியலுக்கு பயன்படுத்திவரும் காவி கும்பல், கொல்கத்தாவில் வசிக்கும் காஷ்மீரி மருத்துவரை ‘நகரத்தை விட்டு உடனடியாக கிளம்பவேண்டும். காஷ்மீரிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை பாகிஸ்தானுக்கு போ’ என சொன்னதோடு, கிளம்பா விட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர்.

பிப்ரவரி 15-ம் தேதி இருபதிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஐந்து ஆண்கள் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்னை மிரட்டியதாக பெயர் சொல்ல விரும்பாத அந்த மருத்துவர் தெரிவிக்கிறார்.

“அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, கடுமையான விளைவுகள் ஏற்படும் என மிரட்டினார்கள். தொடக்கத்தில் இந்த மிரட்டலை நான் கண்டு கொள்ளவில்லை. கடந்த 22 ஆண்டுகளில் இப்படியான சம்பவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை.  அடுத்த நாள், மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது, அந்த நபர்கள் என்னுடைய வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்கள். அப்போது, இந்த நகரத்தை விட்டு போகாவிட்டால், என்னுடைய மகள் அதற்கான விலையை தரவேண்டியிருக்கும் என மிரட்டினர்” என்கிறார் மருத்துவர்.

மிரட்டல் தீவிர தொனியில் இருந்ததால் நகரத்தை விட்டு கிளம்ப தயாரானதாக தெரிவிக்கிறார்.  கிளம்பும் முன் மேற்கு வங்க அரசை இறுதி முயற்சியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறார்.

படிக்க:
♦ இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
♦ இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

“முதலமைச்சர் மமதா பானர்ஜியிடம் இந்த விசயம் குறித்து சொல்ல விரும்பினேன். எனது முகநூலில் முதலமைச்சருக்கு நடந்ததை தெரிவித்தேன். முதலமைச்சரின் முகநூல் பக்கத்திலும் நடந்ததை விவரித்து எழுதினேன்” என்கிறார் மருத்துவர். அதன் பின், மாநில அரசின் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மருத்துவரை தொடர்பு கொண்டிருக்கிறார். தேவைப்படும் உதவிகள் செய்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். அவருடைய குடும்பத்துக்கு போலீசு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

“மிரட்டல் காரணமாக வெளியேற முடிவு செய்திருந்தேன். இப்போது அக்கம்பக்கத்தினரிடமிருந்தும் அரசிடமிருந்தும் ஆதரவு வந்துள்ளதால் இங்கேயே வசிக்க முடிவு செய்திருக்கிறேன். கொல்கத்தா மக்கள் இத்தனை அன்பும் அரவணைப்புமாக இருப்பார்கள் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை” என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் மருத்துவர்.

ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. பஜ்ரங் தள் குண்டர்கள், விசுவ இந்து பரிசத் குண்டர்கள், பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டத்தை கையிலெடுத்து காஷ்மீரிகள் மீது வெறியோடு தாக்குதல் நடத்திவருகின்றனர்.  இந்த மாநிலங்களை ஆளும் பாஜக அரசு வன்முறைகளை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது.

மேகாலய கவர்னர் டதாகடா ராய்

காவி கும்பலின் வன்முறையின் உச்சமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்படும் (ஆனால் ஒருபோதும் அரசியல் இல்லாமல் இருந்ததில்லை) கவர்னர் பதவியில் இருக்கும், தன்னை வலதுசாரி இந்து என அறிவித்துக் கொண்டு, ‘காஷ்மீரி பொருட்களை வாங்காதீர்கள், காஷ்மீருக்கு போகாதீர்கள், அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லாதீர்கள்’ என பகிரங்கமாக தனது ட்விட்டரில் அறிவிக்கிறார்.

கவர்னர் பதவிக்குள்ள குறைந்தபட்ச கண்ணியத்தைக்கூட காக்க நினைக்காமல் முழு சங்கியாகவே மாறி வெறுப்பை உமிழ்கிறார் இந்த கவர்னர். எனில், அதே வேலையாய் சூலத்தோடு திரியும் இந்துத்துவ குண்டர்கள் எத்தகைய படுபாதக செயல்களையும் நிகழ்த்துவார்கள்.  அதோடு, தெருவில் திரியும் காவிப்படைகள் முதல் கவர்னர் பதவியில் அமர்ந்திருக்கும் காவிகள் வரை காஷ்மீர் மக்களை இந்தியர்களாகவே கருதவில்லை என தெளிவாக தெரிகிறது. காஷ்மீரிகளும்கூட அதைத்தானே சொல்கிறார்கள்!


அனிதா
நன்றி: அவுட்லுக் இந்தியா, நியூஸ் க்ளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க