சுவீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி ரூ. 453 கோடி செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நான்கு வாரங்களுக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற ஆணையை மீறினால் வெறும் மூன்று மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கரிசனத்துடன் தீர்ப்பு எழுதியிருக்கிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் ஆர். எஃப். நாரிமன், வினீத் சகாரன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தனக்கு தரவேண்டிய பணத்தை தர ஒப்புக்கொண்டு இழுத்தடித்த காரணத்துக்காக எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானி மீது வழக்கு தொடுத்தது. வழக்கின் தொடக்கத்தில் எரிக்சனின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து வந்தது அனில் அம்பானி தரப்பு.  எரிக்சன் நிறுவனத்தின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ரபேல் விமானம் திட்டத்தில் இணைந்துகொள்ள பணம் இருக்கும் ரிலையன்சுக்கு, கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க முடியவில்லையா என வாதாடினார்.

“அனைத்து திட்டங்களிலும் தங்களை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு இவர்களிடம் பணம் உள்ளபோது,  நீதிமன்ற ஆணையை மதித்து, ரூ. 550 கோடியை தர பணம் இல்லை” என்றார் அவர்.

அம்பானியின் சார்பில் ஆஜரானவர், மோடி அரசின் அட்டர்னி ஜெனராக இருந்த முகுல் ரோத்தகி. துஷ்யந்த் தவே-யின் வாதத்துக்கு பதிலளித்த ரோத்தகி, “ஆர்-காமின் சொத்துக்களை ஜியோவிற்கு விற்பதன் அடிப்படையில் கிடைக்கும் தொகையை அளிப்பதாக அனில் அம்பானி கூறியிருந்தார். அதுதான் ஒப்பந்தமாக இருந்தது. ஆனால், 18 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்கள் வெறும் ரூ. 780 கோடிக்கு விற்பனையாயின. கடுமையாக முயற்சித்தபோதும் அவ்வளவுதான் வந்தது. மேலும், அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் இந்தத் தொகையை அளிப்பதாக எந்தவித வாக்குறுதியையும் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.

ஆனால், இந்தப் பணத்தை எரிக்சனுக்கு வழங்குவதற்கு பதிலாக தொலைத்தொடர்பு துறையிடம் அம்பானி அளித்ததாக தவே குற்றம்சாட்டினார்.

முன்னதாக, இந்த அமர்வு அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற இணையத்தில் ஏற்றப்பட்ட அந்த உத்தரவை, நீதிமன்ற பணியாளர்கள் இருவர் ‘நேரில் ஆஜராக தேவையில்லை’ என மாற்றினர். இது கண்டுபிடிக்கப்பட்டதால், பணியாளர்கள் இருவரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியிலிருந்து நீக்கினார். ஆனால், அவர்கள் யார் உத்தரவின் கீழ் இப்படி செயல்பட்டார்கள் என்பது குறித்த விசாரணைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

படிக்க:
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

மோடி அரசின் பரிபூரண ஒத்துழைப்போடு ‘தொழில்’ நடத்திக்கொண்டிருக்கும் அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவோ இலாபமோ இல்லை. இதே உச்சநீதிமன்றம் மோடி, அனில் அம்பானிக்காக செய்த மிகப் பெரும் இராணுவ ஊழலை விசாரிக்க மறுத்துவிட்டது என்பதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு மாதங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாத ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் அதே அமைப்பு, பல ஆயிரம் கோடியை கட்டத்தவறினால் வெறும் மூன்று மாதம் சிறையில் இருந்தால் போதும் என தீர்ப்பு எழுதுகிறது.


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


இதையும் பாருங்க:
ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க