“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற தலைப்பில், 2019, பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில்  நடைபெறவிருக்கும் மாநாட்டிற்காக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் நான்கு பேரை நேற்று பிப்-20 மாலை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் அறந்தாங்கி போலீசார்.

இத்தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த DYFI, வி.சி.க, தி.மு.க, மே 17 இயக்கம் , தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் மற்றும் வழக்கறிஞர்கள் அலாவுதீன், கார்த்திக், சேக் உள்ளிட்டோர் போலீசிடம் வாதிட்டனர். “உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று சட்டப்படி நடக்கும் ஒரு மாநாட்டிற்கான பிரச்சாரத்திற்காக கைது செய்தது தவறு, இது சட்டப்படி குற்றம்” என்பதைச் சுட்டிக் காட்டினர்.

“இது மேலிடத்து உத்தரவு எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்ற ஒற்றை பதிலை மட்டும் கூறி தோழர்களை ரிமாண்டு செய்வதற்கான வேலைகளில் இறங்கினார், அறந்தாங்கி போலீசு பொறுப்பு உதவி ஆய்வாளர். அதன்படி, அவசர அவசரமாக இரவு 8.00 மணிக்கு அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் தோழர்களை ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

அறந்தாங்கி நீதித்துறை நடுவரிடம் போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர், வழக்கறிஞர்கள். நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் மாநாட்டு பிரச்சாரத்தின் பொழுது, மக்களை  இடையூறு செய்யும் விதமாக எந்த சம்பவமும் நடைபெறாத நிலையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையே பொய்யாக புனைந்திருப்பதையும் உணர்ந்த நீதித்துறை நடுவர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை (FIR) நிராகரித்து தோழர்களை சிறையிலடைக்க மறுத்துவிட்டார். உரிய பிணையோடு இன்று (21/2/2019) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நான்கு தோழர்களையும் விடுவித்தார்.

படிக்க:
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

இம்மாநாடு நடைபெறவிடாமல் தடுப்பதற்கான தமக்கு சாத்தியமான எல்லா வகையிலும் முயன்று வருகிறது போலீசு. தஞ்சை பேருந்து நிலையத்தில் பிரசுரம் கொடுத்ததற்காக 9 பேரை கைது செய்திருக்கிறது, தஞ்சை போலீசு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் கடைவீதியில் வியாபாரிகளிடம் மாநாட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களை கும்பலாகச் சென்று தாக்கியிருக்கிறது காவிக் கும்பல். போலீசின் பொய்வழக்கு, காவிக் கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
அறந்தாங்கி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க