இணைய உலகின் ஜாம்பவான் கூகிள் தனது பயனர்களிடம் ”மன்னிப்பு” கோரியுள்ளது. கூகிள் நிறுவனம் ’நெஸ்ட்’ என பெயரிடப்பட்ட வசிப்பிட தானியக்க சேவையை (Home Automation) சந்தைப்படுத்தி வருகின்றது. இதற்காக விற்கப்பட்ட வன்பொருளில் ஒலிவாங்கி ஒன்றையும் சேர்த்து விற்றுள்ள விவரத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்ததற்காகவே தற்போது கூகிள் மன்னிப்பு கோரியுள்ளது.
நெஸ்ட் நிறுவனத்தை ஐந்தாண்டுகளுக்கு முன் 3.2 பில்லியன் டாலருக்கு கூகிள் வாங்கி தன்னோடு இணைத்துக் கொண்டது. இந்நிறுவனம் தானியங்கி முறையில் வீடுகளின் தட்பவெப்ப நிலையை கட்டுப்படுத்துவது, புகை மற்றும் இரசாயனங்களைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்வதற்கான சேவையை வழங்கி வந்தது. இதில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் வசிப்பவர்கள் எந்தக் குறிப்பான சந்தர்ப்பத்தில் எந்தமாதிரியான தட்பவெப்ப நிலையை விரும்புகின்றனர் என்பது தொடர்பான விவரங்களை சேகரிப்பதன் மூலம் சுயமாக முடிவெடுக்கும் (Deep learning) செயலியை உருவாக்கியிருந்தனர்.

மேலும், நெஸ்ட் நிறுவனம் வீடுகளின் பாதுகாப்பு தொடர்பான சேவைகளையே மையப்படுத்தியிருந்தது. கண்காணிப்பு கேமராக்கள், எச்சரிகை மணி உள்ளிட்டவைகள் அதன் கட்டுப்பாட்டுக் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில் அதன் எச்சரிகை மணி அபாய அறிவிப்பு செய்யும்.
நெஸ்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய கூகிள், அதனை தன்னுடைய இன்னொரு சேவையான கூகிள் அசிஸ்டெண்டுடன் இணைத்தது. இதன் மூலம், வீடுகளின் மின்னணு மற்றும் மின்சார செயல்பாடுகள் அனைத்தையுமே தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் விதமாக அதன் சேவைகள் மேம்படுத்தப்பட்டன. விளக்குகளை எரியவைப்பது அல்லது அணைப்பது என்பதில் துவங்கி ஒரு வீட்டில் உள்ள அனைத்து விதமான மின்சார சாதனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் விதத்தை கூகிளின் நெஸ்ட் கற்றறியும் விதமாக வடிவமைத்துள்ளனர்.
உதாரணமாக, நீங்கள் மாலை நேரங்களில் எந்தமாதிரியான பாடல்களைக் கேட்பீர்கள், காலையில் எந்த செய்தித் தொலைக்காட்சியைப் பார்ப்பீர்கள், வீட்டின் பயன்பாட்டுக்காக இணையத்தில் எதைத் தேடுவீர்கள், தொலைக்காட்சிகளில் என்ன நிகழ்ச்சிகளைப் பார்ப்பீர்கள், என்ன படத்தைப் பார்ப்பீர்கள் என அனைத்தையும் கண்காணிப்பதன் ஊடாக, உங்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளுடைய வகைமாதிரியை உத்தேசிப்பது அதனடிப்படையில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எதை விரும்புவீர்கள் என்பதை கணித்து அதன் படியான நிகழ்ச்சிகளை உங்களுக்கு காட்சிப்படுத்தும் சாத்தியங்களை இத்தொழில் நுட்பம் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ ஒருவரின் தனியுரிமையில் நேரிடையாக தலையிடும் இச்சேவைக்கான வன்பொருட்களில் ஒலிவாங்கி ஒன்றை சேர்த்திருப்பதைக் குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க “மறந்து விட்டதாக” சொல்கிறது கூகிள். அதுவும் மேற்கத்திய நாடுகளில் இவ்வாறு ஒலிவாங்கியின் மூலம் தங்களது இரகசியங்களை கூகிள் ஒட்டுக் கேட்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னரே மன்னிப்பு கேட்க முன்வந்துள்ளது கூகிள்.
கூகிளின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது இந்த “மறதி” தற்செயலானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். கூகிளின் ஸ்ட்ரீட் வியூவ் கார்கள் கடந்த 2007ல் இருந்து 2010 வரை பயனித்த வழித்தடங்களில் இருந்த வைஃபை கடவுச் சொற்களை சேகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இலவச வைஃபை கணிப்பொறியகங்களை (Kiosk) நிறுவிய கூகிள் அதன் மூலம் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணித்துள்ளது.
அதே போல், சமீபத்தில் கூகிள் நிறுவனத்தின் உள்வட்ட கூட்டம் ஒன்றின் காணொளி இணையத்தில் கசிந்தது. அதில் கூகிள் அதிகாரிகள் தாம் சேகரித்துள்ள பயனர்களின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்களின் பண்புகளை “கூகிள் முன்வைக்கும் விழுமியங்களுக்கு ஏற்ப” மாற்றியமைப்பது குறித்து விவாதித்துள்ளனர்.
கார்ப்பரேட் முதலைகள் ஆளும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் மக்களின் மேலான தமது மேலாதிக்கத்தை நிறுவும் காலம் மெல்ல மெல்ல கடந்து சென்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நேரிடையாக தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மக்களை ஆட்சி செய்யும் ஒரு காலகட்டத்தினுள் மனித சமூகம் நுழைந்து கொண்டிருப்பதையே இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன.
– சாக்கியன்