ஒடிசா மாநிலத்தின் நியமகிரி மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் சுரங்கப் பணிகளைச் செய்துவருகிறது. இதை எதிர்த்து கோண்ட் பழங்குடிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பழங்குடிகளை ஒருங்கிணைத்து நியமகிரி சுரக்ஷா பரிசத் என்ற அமைப்பின் மூலம் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் லிங்கராஜ் ஆசாத்.

வேதாந்தா நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துவரும் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு, சட்டவிரோதமாக செயல்பாட்டாளர் லிங்கராஜ் ஆசாத்தை கடந்த ஆறாம் தேதி கைது செய்துள்ளது. பழைய போராட்ட வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டதாக தொடக்கத்தில் தெரிவித்த போலீசு, இப்போது அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருப்பதாக சொல்லியிருக்கிறது.
பழங்குடிகளின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் போராடிவந்த லிங்கராஜ் ஆசாத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி மக்கள் இயக்கங்களுக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் மேதா பட்கர், அருணா ராய், டாக்டர் பினாயக் சென் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“கடந்த மூன்று பத்தாண்டுகளாக போராட்டக்களத்தில் இருக்கும் ஆசாத்துக்கு கைது நடவடிக்கை என்பது புதிதல்ல. இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை எதிர்த்தும் அரசு ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கிறார். உடல் ரீதியிலான தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
நியமகிரி பகுதியில் தொடர்ந்து உரிமைகள் மீறப்பட்டு வருவதைக் கண்டித்து மார்ச் 11-ம் தேதி அவர் தலைமையில் பேரணி நடக்கவிருந்த நிலையில், தேர்தல் நெருங்குவதையொட்டி பயந்த அரசு, அவரைக் கைது செய்துள்ளது.
எனவே, அவருடைய உரிமைகள் காக்கப்படும் வகையில் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். நியமகிரி மலைப்பகுதியில் நடந்துவரும் கார்ப்பரேட் மற்றும் அரசின் கூட்டு பயங்கரவாதத்தை நிறுத்தும்படி கேட்கிறோம்” என மக்கள் இயக்கங்களுக்கான தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படிக்க:
♦ அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
அனிதா
நன்றி: கவுண்ட்டர் கரண்ட்ஸ்