உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 3


ண்டைச் சந்தடித்தால் குகையிலிருந்து எழுப்பப்பட்டிருந்த கரடி பசித்திருந்தது, எரிச்சல் கொண்டிருந்தது. ஆனால் பிணங்களின் இறைச்சியைக் கரடிகள் உண்பதில்லை. பெட்ரோல் நெடி சுள்ளென்று அடித்த அசைவற்ற உடலை நெடுக மோந்த கரடி சோம்பலுடன் திறப்பு வெளிக்குப் போயிற்று. முனகலும் சரசரப்பும் அதைத் திரும்பி வரச் செய்தன. அது இப்போது அலெக்ஸேயின் அருகே குந்தியிருந்தது. பிண மாமிசத்தின் பால் அருவருப்பும் வயிற்றை கிள்ளும் பசியும் அதற்குள் போராடிக் கொண்டிருந்தன. பசியே வெற்றி பெறலாயிற்று. கரடி பெருமூச்செறிந்தது, வெண்பனிக் குவியலில் கிடந்த மனிதனைப் பாதத்தால் புரட்டி திருப்பிற்று, விமானி உடையின் “பேய்த் தோலை” நகங்களால் கிழிக்க முற்பட்டது. விமானி உடை அதற்கு மசியவில்லை.

கரடி வாய்க்குள்ளாக உறுமிற்று. கண்களைத் திறக்கவும், அப்பால் விலகவும், கூச்சலிடவும், தன் மார்பின் மேல் சாய்ந்து அழுத்தும் அந்தக் கனத்த பேருடலை நெட்டித்தள்ளவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொள்ள அந்தக் கணத்தில் அலெக்ஸேய் அரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆவேசமும் சீற்றமும் பொங்கத் தற்காத்துக் கொள்வதற்கு அவனது உடலும் உள்ளமும் ஒருங்கே துடித்தன. ஆனால் அவனோ, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக, கரடிக்குத் தெரியாமல் கையைப் பைக்குள் விட்டு ரிவால்வரின் உறைகளிட்ட கைப்பிடியைத் தொட்டுணர்ந்து பெருவிரலால் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டுவந்து ஆயுதந்தரித்த கையைக் கரடி காணாதவாறு வெளியே எடுத்துவிட்டான்.

கரடி முன்னிலும் வலுவாக விமான உடையைப் பற்றிக் கிழிக்க முயன்றது. அழுத்தமான துணி முடமுடத்தது, எனினும் மறுபடியும் தாக்கு பிடித்தது. கரடி வெறித்து உறுமியது. உடையைப் பற்களால் பற்றி மென்மையாயிருக்கும் பஞ்சுப் பற்றைக்கும் ஊடாக உடலை நசுக்கியது. பெருமுயற்சி செய்து உடல் வலியைப் பொறுத்துக் கொண்டான் அலெக்ஸேய். கரடி தன்னை வெண்பனிக் குவியலிலிருந்து வெளியே இழுத்த தருணத்தில் ரிவால்வரைச் சட்டென உயர்த்திக் குதிரையை அழுத்தினான். மந்தமான வெடியோசை சடாரென்ற ஒலிப்புடன் பரவியது.

கரடி இரையை மெதுவாகப் பிடியிலிருந்து விட்டது. அலெக்ஸேய் பகை விலங்கின் மேலிருந்து பார்வையை அகற்றாமல் வெண்பனியில் விழுந்தான். விலங்கு பின்கால்களில் குந்தியிருந்தது. சிறுமயிர் அடர்ந்த அதன் பீளை சாடிய கருவிழிகள் விளங்காமையைத் தோற்றுவித்தன. கொழுகொழு வென்ற குருதி அதன் வெட்டுப் பற்களின் இடைவழியாகக் கலங்கிய தாரையாகப் பெருகி வெண்பனிமேல் சொரிந்தது. கம்மலாக, பயங்கரமாகக் கத்தி, உடற்சுமையை சிரமத்துடன் தாக்கியவாறு பின்னங்கால்களில் எழுந்த கரடி, அலெக்ஸேய் மறுமுறை சுடுவதற்குள்ளேயே, மரண மூர்ச்சையடைந்து வெண் பனியில் துவண்டு விழுந்துவிட்டது. இளநீல வெண்பனிப் புறணியில் மெதுவாகச் செம்மை பரவிற்று. உருகத் தொடங்கிய வெண்பனியிலிருந்து கிளம்பி ஆவி விலங்கின் தலையருகே படலமாகக் கிளம்பிற்று. கரடி இறந்து விட்டது.

அலெக்ஸேயின் இறுக்கம் தளர்ந்தது. பாதங்களில் சுரீரென்ற காந்தும் வலியை அவன் மீண்டும் உணர்ந்தான். வெண்பனியில் தொய்ந்து விழுந்து உணர்விழந்தான் ….

அவனுக்கு நினைவு வந்தபோது சூரியன் உயரே எழுந்து விட்டிருந்தது. பழுப்புச்சடை அடர்ந்த அலங்கோலமான அழுக்கு உடல் அருகே இளநீலப் பனிமீது கிடந்தது. காடு ஆரவாரித்தது. மரங்கொத்தி மரப்பட்டையை ஒலிப்புடன் கொத்திற்று. மஞ்சள் வயிறுகளும் துடிதுடிப்பும் கொண்ட சிட்டுக்குருவிகள் புதர்களில் தத்தியவாறு கீச்சிட்டன.

“உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன்” என்று மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான் அலெக்ஸேய். உயிர் வாழ்வின் அற்புதமான, விறல்மிக்க, போதையூட்டும் உணர்வால் நிறைந்தது, அவனுடைய அகம் அனைத்தும், உடல் முழுவதும் களி துள்ளியது. மரண அபாயத்தை எதிர்பட்டு மீளும் ஒவ்வொரு தடவையும் மனிதனுக்கு ஏற்படுவதே இந்த உணர்வு.

வலிமைமிக்க இவ்வுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவன் துள்ளி எழுந்து நின்றான். ஆனால் அப்போதே முனகலுடன் கரடியின் உடல் மேல் தொப்பென உட்கார்ந்துவிட்டான். உள்ளங்கால்களில் உண்டான வலியால் அவன் உடல் முழுதும் காந்தியது. மண்டைக்குள் மூளையை அதிரச்செய்யும் கடகடப்புடன் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று ஆழ்ந்த, கனத்த ஓசை நிறைந்திருந்தது. இமைகளுக்கு மேல் யாரோ விரலால் அழுத்துவது போலக் கண்கள் வலித்தன. சுற்றிலும் இருந்தவை யாவும் ஒரு கணம் ஆதவனின் தண்ணிய மஞ்சள் கதிரொளியில் மூழ்கித் துலக்கமாகப் பளிச்செனத் தென்பட்டன. மறுகணமே, தீப்பொறிகள் மினுமினுக்கும் சாம்பல் நிறப் போர்வையால் மூடப்பட்டு பார்வைக்கு மறைந்திருந்தன.

“மோசம்… விழும்போது அடிப்பட்டிருக்கிறது போலிருக்கிறது. கால்களுக்கும் ஏதோ நேர்ந்துவிட்டது” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். வரைபடப் பெட்டியை அவன் விழும்போது தவறவிட்டு விட்டான். ஆனால் வரைபடம் இல்லாமலேயே கூட அன்றைய வழியை அலெக்ஸேய் தெளிவாக எண்ணிப் பார்த்தான். தாக்கு விமானங்களின் இலக்கான ஜெர்மனியப் போர்த்தள விமானநிலையம், போர்முனை வரிசையிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் மேற்கே இருந்தது. ஜெர்மனியச் சண்டை விமானங்களை விமானப் போரில் ஈடுபடுத்தி, விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவு கிழக்கே இட்டு வருவதில் அவனுடைய விமானிகள் வெற்றி பெற்றார்கள். ”இரட்டை இடுக்கியில்” இருந்து தப்பி வெளியேறிய பின் அலெக்ஸேய் இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்றிருப்பான்.

ஆகவே, முனை முகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் முன்னணி ஜெர்மன் டிவிஷன்களின் முதுகுப்புறம் வெகு தூரத்தில், கருங்காடு என அழைக்கப்பட்ட விசாலமான வனப்பிரதேசத்தில் எங்கோ அவன் விழுந்திருக்க வேண்டும். அருகாமையிலிருந்த ஜெர்மன் பின்னணிகளின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற வெடி விமானங்களுக்கும் திடீர்த் தாக்கு விமானங்களுக்கும் துணையாக அவன் இந்த வனப் பிரதேசத்தின் மேலாக எத்தனையோ தடவை பறந்திருந்தான். மேலிருந்து பார்ப்பதற்கு இந்தக் காடு முடிவற்ற பச்சைக் கடல் போன்றே எப்போதும் அவனுக்குத் தோற்றமளித்தது. நல்ல வானிலையில் இந்தக் காடு, பைன் மர முடிகளின் மகுடங்கள் அணிந்து இலகும். மோசமான வானிலையில் சாம்பல் நிற மூடுபனியில் ஆழ்ந்து, சிற்றலைகள் படிந்த சுருண்ட நீர் பரப்பு போலக் காணப்படும்.

இந்த அடர்ந்த காட்டின் மைதானத்தில் அவன் விபத்துக்கு உள்ளானது ஒரு வகையில் நல்லதுதான், இன்னொரு வகையில் மோசம். வழக்கமான சாலைகளையும் குடியிருப்புகளையுமே நோக்கிச் செல்லும் ஹிட்லர் படையினர் இந்தக் கன்னிக்காட்டில் எதிர்படுவது அரிதுதான் என்பதால் இது நல்லது. ஆனால் மனிதனுடைய உதவியையோ ஒரு துண்டு ரொட்டியையோ, தங்கிடத்தையோ, ஒரு மடக்குக் கொதி நீரையோ எதிர்பார்க்க வகையற்ற அடர்காட்டுப் புதர்கள் வழியாக, வெகு நீண்டதாக இல்லாவிட்டாலும் கடினமான நடைப்பயணம் அவன் செய்ய வேண்டியிருந்தது என்பதால் இது கெட்டது. தவிர, கால்கள்… கால்கள் கிளம்புமா? அவை நடக்குமா?

கரடியின் உடல் மேலிருந்து அவன் மெதுவாக எழுந்தான். உள்ளங்கால்களில் உண்டான அதே சுரீரென்ற வலி கீழிருந்து மேல்வரை அவன் மேனியெங்கும் துளைத்துப் பரவியது. அவன் வீரிட்டான். மறுபடி உட்கார வேண்டியதாயிற்று. மென்மயிர்த் தோல் நீள் பூட்சைக் கழற்ற முயன்றான். அது கழலவில்லை. ஒவ்வொரு தடவையும் அதைச் சுண்டி இழுத்த போது வலி தாங்காமல் முனகினான். அப்போது அலெக்ஸேய் பற்களை கடித்துக் கொண்டு, கண்களை இடுக்கியவாறு, தன் பலத்தை எல்லாம் திரட்டி இரு கைகளாலும் பூட்சை வெட்டி இழுத்தான் – அக்கணமே நினைவிழந்தான்.

உணர்வு திரும்பியதும் அவன் காலில் சுற்றியிருந்த பிளானால் துணியை ஜாக்கிரதையாகப் பிரித்தான். பாதம் முழுவதும் வீங்கி ஒரு மொத்தமாக நீலம் பாரித்திருந்தது. அது மழுவாய்க் கொதித்தது. கணுக்கணுவாய்த் தெரிப்பது போல வலித்தது. அலெக்ஸேய் பாதத்தை வெண்பனி மேல் வைத்தான். வலி கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் பல்லைத் தானே பிடுங்குவது போன்ற ஆவேசத்துடன் இரண்டாவது பூட்சையும் வெட்டி இழுத்துச் கழற்றினான்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் !
ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

இரண்டு கால்களும் எதற்கும் பயன்படாத நிலையில் இருந்தன. பைன் மரமுடிகள் மீது விமானத்தின் மோதலால் அவன் தனது அறையிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது பாதங்களை எதுவோ நசுக்கி விரலடியும் விரல்களும் சேர்ந்த சிற்றெலும்புகளை நொறுக்கிவிட்டது போலும். சாதாரண நிலைமைகளில் முறிந்து வீங்கிய இந்தக் கால்களால் எழுந்து நிற்க அவன் நினைத்துக்கூட இருக்க மாட்டான்தான். ஆனால் அவன் இந்தக் காட்டின் உள்ளே, பகைவனின் பின்புலத்தில் தன்னந்தனியாக இருந்தான். எனவே இங்கே மனிதனை சந்திப்பது என்பது துன்பம் குறைவதற்கு அல்ல, சாவையே ஏற்படுத்தும். எனவே நடப்பது, கிழக்கு நோக்கி நடப்பது என்று அவன் தீர்மானித்தான். வசதியான பாதைகளையும் குடியிருப்புகளையும் தேடாமல் காடு வழியாகவே நடப்பது, என்ன ஆனாலும் சரியே, நடப்பது என்று முடிவு செய்தான்.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் கரடியின் உடலிலிருந்து எழுந்தான், ஐயோ என்று முனகினான், பற்களை நெறுநெறுத்து முதல் அடி எடுத்து வைத்தான். சற்று நின்று மற்றக் காலை வெண்பனியிலிருந்து வெளியில் எடுத்து இன்னோர் அடி வைத்தான். தலைக்குள் இரைச்சல் உண்டாயிற்று. காடும் திறப்பு வெளியும் அசைந்தாடின, ஒருபுறமாக மிதந்து சென்றன.

மெத்தென்ற வெண்பனி மேல் நடப்பது ஓரளவு சகிக்க கூடியதாக இருந்தது. ஆனால் வீசுக் காற்றால் துப்புரவாக்கப்பட்டிருந்த, கடினமான பனிக்கட்டிப் பாதையில் கால் வைத்ததுமே வலி பொறுக்கமாட்டாமல் அவன் நின்றுவிட்டான். மேற்கொண்டு ஓர் அடி எடுத்து வைக்கக் கூட அவனுக்கு தயக்கமாயிருந்தது.

அலெக்ஸேய் வெண்பனிமேல் உட்கார்ந்தான். முள் போன்ற உறுதியான சிறு வெட்டிழுப்புக்களால் பூட்சுகளைக் கழற்றினான். நகங்களாலும் பற்களாலும் அவற்றைப் புறங்கால் பக்கம் கிழித்தான் – அவை நொறுக்கிய பாதங்களை இறுக்காதிருப்பதற்காக. அங்கோர ஆட்டு ரோமத்தால் நெய்த பெரிய, மென்மையான லேஞ்சியைக் கழுத்திலிருந்து எடுத்து இரு பாதியாகக் கிழித்துப் பாதங்களில் சுற்றிக்கொண்டு, பூட்சுகளைப் போட்டுக் கொண்டான்.

இப்போது நடப்பது முன்னிலும் எளிதாக இருந்தது. நடப்பது என்பது சரியல்ல: நடப்பது அல்ல, இயங்குவது, சதுப்பு நிலத்தில் நடப்பது போன்று குதிகால்களை ஊன்றி, முன் பாதங்களை உயரத் தூக்கியவாறு எச்சரிக்கையுடன் இயங்குவது. வலியும் இறுக்கமும் காரணமாக, சில அடிகள் முன்னேறியதும் தலைச் சுற்றத் தொடங்கியது. ஏதேனும் அடி மரத்தில் முதுகைச் சாய்த்தபடி, கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டிவந்தது. அல்லது, இரத்த நாளங்களில் கடுமையான நாடித்துடிப்பை உணர்ந்தவாறு வெண்பனிக் குவியலில் சற்றே அமர்ந்து இளைப்பாற நேர்ந்தது.

அந்த மாதிரியாக அவன் சில மணி நேரம் நடந்தான். ஆயினும் அவன் திரும்பிப் பார்த்தபோது காட்டுப் பாதைக் கோடியில் அவனுக்குப் பரிச்சயமான திறப்பு வெளி இன்னும் தென்பட்டது. இது அலெக்ஸேய்க்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தியது, ஆனால் அச்சமூட்டவில்லை. இன்னும் விரைவாக செல்ல அவனுக்கு விருப்பம் ஏற்பட்டது. வெண்பனி குவியலிருந்து எழுந்து பற்களை இறுகக்கடித்தவாறு முன்னே சென்றான். தனக்கு முன்னே சிறு குறிக்கோள்களை வைத்துக் கொண்டு, கவனத்தை அவற்றில் மையப்படுத்தியபடி நடந்தான் – ஒரு பைன் மரத்திலிருந்து மற்றொன்றுக்கு, ஒரு வெண்பனி குவியலிலிருந்து மற்றொன்றுக்கு என்று. ஆள் நடமாட்டம் அற்ற வெற்றுக் காட்டுப் பாதையின் கன்னி வெண்பனியில் அவனது பின் கால்களை பதிந்து கோணல்மானலான, தளர்வுள்ள, தெளிவற்ற அடித்தடம் – காயமடைந்த விலங்கின் அடித்தடம் போல.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க