விரதம் நல்லது !
நமது மூதாதையர்களிடம் யாராவது “நீங்க எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க? ஏன் காடு கழனில கிடந்து மாடா தேயிறீங்க?” என்று கேள்வி கேட்டிருந்தால் அவர்கள் உடனே;

“இந்த அரை சாண் வயித்துக்கும் பசிக்கும் தான் இப்டி வேலை பாக்குறேன். மூனு வேளை பசி தெரியாம சாப்ட்டா போதும்னு இருக்கு” என்று கூறியிருப்பார்கள்
இப்போது நம்மிடம் யாராவது வந்து ஏன் இப்படி உழைக்கிறீர்கள் என்று கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும். “எனது பிள்ளைகள நல்ல பள்ளிகூடத்துல படிக்க வைச்சு டாக்டராவோ கலெக்டராவோ ஆக்கணும். இடம் கொஞ்சம் கெடக்கு. அதுல பெருசா ஒரு வீடு கட்டோணும்” என்று அவரவர் இருப்பிடம் பொறுத்து கூறுவோம்
காரணம் என்ன ?
ஒரு காலத்தில் சோற்றுக்கு அல்லல்படும் நிலைமை இருந்தது உண்மை. இப்போது அது மெல்ல மெல்ல மாறி வருகிறது. மிக மிக குறைவான சம்பளம் / கூலி வாங்கும் மக்கள் வீட்டில் கூட பட்டினி இல்லை. மூன்று வேலையும் உணவு கிடைத்து விடுகிறது. (தமிழகத்தில் அரிசியை இலவசமாகத் தரும் அரசுகளுக்கு இதற்குரிய நன்றிகள் உரித்தாக வேண்டும்)
உணவின்றி தவித்த நாம் இப்போது அளவின்றி அரிசியை உண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதில் இருந்து மெல்ல மெல்ல சரியாகி நாம் அரிசி உண்ணும் அளவை குறைக்கும் கட்டத்துக்கு நகர்ந்து செல்வோம்.
இருப்பினும் வாரம் ஏழு நாளும் மூன்று வேளையும் உணவு எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது? பசி, பட்டினி பற்றி நாம் கொஞ்சம் அறிந்திருந்தால் தான் என்ன? ஏன் ஒரு தலைமுறையை பசியே தெரியாமல் வளர்த்து வருகிறோம்?
திடீரென போர்கள் / உலக பொருளாதார சூழல் இவற்றால் செயற்கையாக பஞ்சம் உருவாக்கப்படுமானால் அப்போது பசியை எப்படி திடீரென கட்டுப்படுத்துவது?
உண்மையில் பட்டினி கிடப்பது நல்லதா? கெட்டதா?
பட்டினி கிடப்பது நல்லது. உடலுக்கும் மனதுக்கும் வலிமையை ஏற்றும் தன்மை கொண்டது பட்டினி. இதைத்தான் விரதம் என்று பல சமயங்களிலும் மார்க்கங்களிலும் கடைபிடித்து வருகிறோம்.
தினமும் ஒரு வேளை உணவை உண்ணாமல் இருப்பது விரதத்தின் மிகக்குறைந்த நிலை. தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பது என்பது விரதத்தில் உட்ச நிலை.
உங்களது நாட்குறிப்பில் வாரம் ஒரு நாள் மட்டும் விரதத்திற்கு ஒதுக்குங்கள். உதாரணம் சனிக்கிழமை அன்று விரதம் என்று வைத்துக்கொள்வோம். வெள்ளி அன்று இரவு உணவோடு அடுத்த உணவை சனிக்கிழமை இரவு உண்ண வேண்டும்.
படிக்க:
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்
இடையில் தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். ப்ளாக் டீ/ ப்ளாக் காபி / க்ரீன் டீ ( சீனி/ சர்க்கரை மற்றும் எந்த இனிப்பும் இல்லாமல் பருகலாம்) இது மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படும்.
எடை கூடாமல் பாதுகாக்கப்படும். ஜீரண மண்டலம் புத்துணர்வு பெறும். உடலின் எதிர்ப்பு சக்தி தன்னை மீளுருவாக்கம் செய்ய இந்த 24 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.
நமது போனில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடைசியாக “Restore factory settings or Reset” என்ற ஆப்சனை பயன்படுத்துவோம் தானே… அதைப்போல இந்த வாரம் ஒரு முறை 24 மணிநேர தண்ணீர் விரதம் செயல்படும்.
நீங்கள் எந்த உணவு முறையில் இருந்தாலும் சரியே. வாரம் ஒரு முறை இந்த விரதத்தை கடைபிடியுங்கள். மாற்றங்களை உணர முடியும். நல்ல உடல் நிலையில் இருக்கும் யாரும் தாராளமாக விரதம் இருக்கலாம்.
யாரெல்லாம் 24 மணிநேர விரதத்தை கடைபிடிக்கக்கூடாது ?
1. மாத்திரைகளால் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோயாளிகள்.
2. இன்சுலின் ஊசி போடும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள்.
3. மிக அதிக ரத்த அழுத்தம் இருந்து அதற்கான மாத்திரை எடுப்பவர்கள்.
4. இதய நோயாளிகள்.
5. சிறுநீரக நோயாளிகள்.
6. கர்ப்பிணிகள்.
7. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்.
8. 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
9. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
10. கீமோ தெரபியில் இருக்கும் கேன்சர் நோயாளிகள்.
11. வயிறு மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள்.
12. வயிற்றுப்புண்(gastric ulcer) இருந்து அதற்கு சிகிச்சை எடுப்பவர்கள்.
13. மனநல சிகிச்சை எடுப்பவர்கள்.
14. குழந்தைப்பேறுக்கு முயல்பவர்கள்.
15. நீண்ட தூர வண்டி ஓட்டுநர்கள்.
இவையல்லாமல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் இந்த விரதத்தை இருக்கலாம்.
24 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் போதுதான் நம் முன்னோர்கள் பசியில் அடைந்த கஷ்டங்களை நம்மால் உணர முடியும். இன்னும் பசியில் தவிக்கும் ஏழைகளின் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.
ஏன் அரசாங்கம் அரிசியை இலவசமாகத்தருகிறது? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும். ஏன் சத்துணவு என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு இலவசமாக உணவு வழங்குகிறது? என்பதும் நாம் பசியோடு ஒரு முழு நாள் கழித்தால் மட்டுமே உணர முடியும். பசியை உணர்வோம். பசி நம்மிடம் இருக்கும் அத்தனை கெட்டதையும் அழித்தொழிக்கும். உடல் மனம் இரண்டில் இருந்தும்.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.