பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பாதுக்காக்கும் நடவடிக்கையில் போலீசு மற்றும் ஆளும்கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
இதுகுறித்து சென்னை மக்களிடையே கருத்து கேட்டோம். பலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்கள். “எப்படி தண்டிப்பது..? யார் தண்டிப்பார்கள்…?” என்றால் அமைதியாகிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் பாதிக்கபட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு “கொலை செய்வேன்” என்று ஆவேசமாக சொல்கிறார்கள். “நீங்கள் இந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள்…” என்று கேட்டாலும் அமைதியாகிறார்கள்……!
உண்மையில், கருத்துக்கூறியவர்கள் வக்கிர மனம் படைத்த பாலியல் குற்றவாளிகளிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் எப்படி ஒரு கையறு நிலையில் இருந்தார்களோ அதே போன்றுதான் இருக்கின்றார்கள். குற்றவாளிகளை இந்த சமூக அமைப்பு தண்டிப்பது குறித்து அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இதைத்தாண்டி அவர்களது வாழ்க்கையும் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே வழித்தடத்தில் சென்று கொண்டிருப்பதால் இத்தகைய பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக சிந்திக்க வழியில்லாமலும் இருக்கிறார்கள்.
பிரதீப்
“யாரையும் யாரும் நம்ப முடியல… குறிப்பா போலீசுகிட்ட இந்த கேச விடக் கூடாது. பொதுமக்கள்தான் முடிவெடுக்கனும். ஏன்னா பாதிக்கப்பட்டவங்க அவங்கதான். பேருக்கு நாலு பேர காமிச்சிட்டு முடிக்க பாக்குறாங்க. இதுக்கு பின்னால் நெறைய பேர், பெரிய இடத்த சார்ந்தவங்க இருக்காங்க. அதை மறைக்க அரசியல்வாதிங்களுக்கு துணையா அதிகாரிகளும் போலீசும் வேலை செய்யிறாங்க.”
வின்செண்ட், ஐடி ஊழியர்.
“சம நீதி- சம உரிமை என்பதெல்லாம் ஏமாத்து. பெரிய இடம்னாவே ஒரு மாதிரி விசாரணைய கமுக்கமா நடத்துறாங்க. சட்டமும் அவங்களுக்கு துணை போகுது. நீதிமன்றம் எத்தனையோ கேசுல உப்பு சப்பு இல்லாத தீர்ப்ப வழங்குது… இப்பவே இதுல தலையிடுற எஸ்.பி- லிருந்து டி.எஸ்.பி வரைக்கும் பொம்பள பொறுக்கிங்கதான். இதுக்கு பின்னாடி அரசியல்வாதிகள் இல்லன்னு போலீசு அதிகாரிங்க அவசரமா வாக்குமூலம் தராங்க. ஏன்?
மு.க.ஸ்டாலின் இப்போ தலையிடுகிறார். பரவாயில்ல.. ஆனா அவரு ஆட்சியில இருந்தா இதே மாதிரிதான் நியூசை அமுக்கப் பார்ப்பார். பணம்தான் எல்லா ஆட்சிக்காரங்களையும் சரிப்படுத்துது. இதுக்கு ஒரே தீர்வு ஜல்லிக்கட்டு மாதிரி நாம மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவர்களை தண்டிக்க போராடனும். குற்றவாளிங்கள மொத்தமா தண்டிக்கனும். எவ்ளோ பெண்களுடைய வாழ்க்கையை சீரழிச்சிருக்கானுங்க!”
தருமன்
“சட்டம், நீதிமன்றம் எல்லாம் இப்ப என்ன செய்யுதுன்னு தெரியல. ஹெல்மெட் போட்டுக்காதது பெரிய ஆபத்துன்னு சுவோ-மோட்டோ போட்டு தனியா வழக்க எடுத்தாங்க. இதுக்கு இவ்ளோ நாள் ஆவுது. கண்டுக்கவே இல்லை. இதுல இருந்து கோர்ட்டு எப்படி சரியான தீர்ப்பு சொல்லும்னு நம்பறது? இதுல என்ன விசாரணை வேண்டி இருக்கு. அவனுங்களே வீடியோ எடுத்து சொல்லுறானுங்க, நாங்கதான் செஞ்சோம்னு. அதுல எல்லா ஃப்ரூப்பும் இருக்கு.”
ராஜ்குமார், ஜி.எம். தனியார் கம்பனி.
“தப்பு நடந்திருக்கிறத விசாரிச்சு குற்றவாளிகளை கடுமையா தண்டிக்கனும். சிங்கப்பூர் துபாயில் எல்லாம் சட்டம் கடுமையா இருக்கு. அந்த மாதிரி இங்கேயும் இருக்கனும். எதுக்கெடுத்தாலும் தடை வாங்குறது, ஜாமீன்ல வெளியே விடுறதுன்னு விடக்கூடாது.. ஒரு மாசத்துல இத விசாரிச்சி தண்டனை வழங்கனும். ஆனா அப்படி நடக்கிறது இல்ல. திரும்பவும் மேல் விசாரணை, கீழ் விசாரணைன்னு இப்படியே மறச்சிடுவானுங்க. குற்றவாளிங்க திரும்ப வந்து இதே வேலைய செய்வானுங்க.”
கன்னிவேல், டர்னர்.
“பிடிச்ச ஆளுங்க எல்லாம் MLA சொந்தகாரனுங்க, தெரிஞ்சவனுங்க. அவனுங்க அப்பன் எல்லாம் பெரிய அதிகாரத்துல உள்ளவனுகன்னு சொல்லுறாங்க. சாதாரண மக்களால அவனுங்கள கடைசி வரைக்கும் எதிர்க்க முடியாது. அப்படியே எதிர்த்தாலும் வருஷம் முழுக்க அலைய தெம்பு இருக்காது. கடைசியில இதை அப்படியே மூடி மறைச்சிடுவானுங்க. போலிச இதுல நம்பக் கூடாது. நேரடியா மக்கள்தான் இதுக்கு தண்டனை வழங்கனும். இல்லேன்னா மாட்டினவன் எல்லாம் நாளைக்கு ‘நல்ல புள்ளையா’ வெளியில வெளியே வந்து 200 பொண்ணுங்களை கெடுத்துட்டு திரிவானுங்க.”
ஜெயச்சந்திரன், எஸ்.ஐ. ஓய்வு.
“குற்றவாளிகளை தண்டிக்கனும். அது சரிதான். ஆனா இது சம்பந்தப்பட்ட பொம்பள பசங்களும் சரியில்ல… உஷாராயில்ல… இவங்க ஏன் ஃபேஸ்புக், வாட்சப்புன்னு அவனோட தொடர்பு வச்சிக்கினு தெரியாதவனோட பழகிட்டு அவன் கூட போயிட்டு எல்லாத்தையும் பன்றாங்க. இப்போ போட்டோ எடுத்துட்டான். பிரச்சனை ஆகிடுச்சி அப்படின்னு சொன்னா இது சரியா? நேரடியா பழக்கம் இல்லாதவன்கிட்ட இவங்க எப்படி நெருக்கம் ஆகலாம்?
இது ஜனநாயக நாடு. பொதுவா போலீசுமேல குறை சொல்லலாம். ஆனா அவங்க சட்டத்தின்படிதான் நடக்க முடியும்னு புரிஞ்சிக்கனும். பெரிய பணக்காரனுக்கு சட்டம் உடந்தையா போகலாம்னு சொல்லாலாம். ஆனா எல்லா கேசும் அப்படித்தான் நடக்குதுன்னு நாம கண்ண மூடிக்கினு சொல்ல முடியாது.”
சுந்தர், தனியார் நிறுவனம்.
“சட்டம் கடுமையா இருந்தாலும் அதை யாரும் சரியா பயன்படுத்தறது இல்ல. இப்போ இந்த மாதிரி நேரத்துல மீடியாவும் இந்த விஷயங்களை ஊதிப் பெருக்குது. இந்தப் பிரச்சனை தீர விசாரிச்சி குற்றவாளியை தண்டிக்கணும். ஆளும் கட்சி ஒன்னு சொல்லுது. எதிர்கட்சி அப்படி இல்லன்னுது. போலீசு விசாரணை சரியா நடக்கும்னு நம்பிக்கை இல்ல. தனி ஆணையம் அமைக்கனும். என் வீட்டுல இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது.”
செல்வநாயகி–காயத்ரி, தாம்பரம்.

“அம்மா, அப்பா முன்ன பசங்கள கண்காணிச்ச மாதிரி இந்த காலத்துல கண்காணிக்கிறது இல்ல. எல்லோரும் வேலைக்கு ஓடிடுறாங்க. அவங்களுக்கும் நேரம் இல்ல. அதிகம் போனா பசங்க கையில ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்து பேசிக்கீறாங்க. இப்போ யார குறை சொல்றது. குடும்பம் நல்லா இருக்கனும்னா பெண்கள வேலைக்கு போகாம இருக்கனும். புருஷங்க சம்பாரிக்கனும். பொம்பளங்க வீட்டப் பாத்துகனும். அப்பதான் பசங்கள பாத்துக்க முடியும். சரியா நடக்கறாங்களான்னு சோதனை பண்ண முடியும்.”
ஜெனிபர், ஆரோக்கிய லியோ, நிர்ஷா, எம்.சி.சி கல்லூரி, தாம்பரம். (புகைப்படம் தவிர்த்தனர்)
“எல்லாத்துக்கும் பெரியவங்கள தான் காரணம் சொல்லனும். பெண்களை மட்டும்தான் அடக்க ஒடுக்கமா நடந்துக்கனும்னு சொல்றாங்க. பசங்ககிட்டயும் சொல்லனும். அதுவும் நம்ம வீட்ல இருக்க பெண்கள் மாதிரிதான் மத்த பெண்களும்னு சொல்லி வளக்கனும். ஆம்பள பசங்கன்னாவே தனியா அவங்களுக்கு செல்லம் கொடுத்து வளக்கிறது. எது செஞ்சாலும் கண்டுக்காம விட்டுடறது. இதுதான் இந்த மாதிரி செய்தியா வர்றதுக்கு காரணம்.
பொதுவா வெளில போற பொம்பள பசங்களப் பத்தி குறை சொல்றாங்க. அது மாறனும். போனுலயே பேசி போனுலயே நட்பு வச்சிக்கிறது இப்ப அதிகமா இருக்கு. அவங்க உஷாரா இருக்கனும். இதுக்கு விழிப்புணர்வு உருவாக்கணும்.
போலீச, கோர்ட்ட நம்ப முடியாது. எந்த விஷயத்துலயும் சரியா செய்யல. ஜனங்கதான் இதுக்கான தீர்வு சொல்லனும். ஆனா நான்-வயலன்ஸ் மூலமாதான் இந்த பிரச்சனைய தீர்க்கனும். வெட்டு குத்து பிரச்சனைய தீர்க்காது. புரிதல் இல்லாதவங்களுக்கு எஜுகேட் பண்ணனும்.”
அஸ்வினி – மேத்தா, பொலிட்டிகல் சயின்ஸ் மாணவர்கள். எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.
“இப்டி நடக்கிறது சாதாரண விஷயம்தான். இந்த பொம்பள பசங்களே இப்படித்தான். பெரிய சிக்கல்ல மாட்டிக்கின பிறகுதான் பிரச்சனைய வெளியே சொல்லுவாங்க. லவ் பண்ணும்போதே உசாரா இருக்க மாட்டாங்க. கெடச்சவங்க கூட சுத்துவாங்க. அப்பால ஆயிரம் குறை சொல்லுவாங்க. எப்படியா இருந்தாலும் ஆம்பள திமிரு என்பது தனிதான். இவனுங்கள எல்லாம் கண்டிப்பா தண்டிக்கனும். இவனுங்களால எங்களுக்கெல்லாம் கெட்டப் பேர். பொண்ணுங்க எல்லாம் இப்ப எங்களையும் அதே மாதிரி பாக்குறங்க. எவனோ ஒரு மிருகம் அப்படி செஞ்சதால மொத்த ஆண்களுக்கும் கெட்ட பேர். அவனுங்களுக்கு சரியா பாடம் புகட்டனும். சாவர வரைக்கும் தண்டனை நினைப்பு இருக்கனும்.”
அபுல்யா, பொலிட்டிகல் சயின்ஸ் மாணவி. எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.
(புகைப்படம் தவிர்த்தார்)
“வடக்க தான் இந்த மாதிரி நடந்தது. நிர்பயா கேசு எல்லாம் பார்த்தோம். இப்போ இங்கேயும் இந்த மாதிரி கொடூரங்கள் நடக்க ஆரம்பிச்சிடுச்சி. சினிமாவுல முன்ன எல்லாம் திராவிடத்த வளர்த்தாங்க. “அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை என்பது திராவிட உடமையடான்னு கத்துக் கொடுத்தாங்க. இப்போ இந்த சினிமாகாரனுங்க ஆபாசத்த கத்து கொடுக்கிறாங்க” அப்படின்னு எங்க அப்பா சொன்னாரு.. அது சரிதான். சினிமாவுல பெண்கள ஃபேன்சி பொருளா ஆக்குறானுங்க. நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பாக்குறானுங்க. பொம்பள பசங்க நோ சொன்னா இந்த மாதிரி அசிங்கம் பன்றானுங்க. பொம்பள பசங்க நம்மை மாதிரி மனிதர்தான்னு யாரும் அவங்களுக்கு கத்துக் கொடுக்கல.
இப்போ நிர்மலாதேவி விவகாரத்துல ஜாமீன் வழங்கி இருக்காங்க. இதே மாதிரிதான் இந்த கேசும் நடக்கும். போலிசு கோர்ட் எதுலயும் நமக்கு சரியான நியாயம் கிடைக்காது. ஒரு நியாயமான ஆணையம் அமைக்கனும். நிரந்தமா கண்காணிப்பு இருக்கனும். தண்டனை கடைசி வரைக்கும் நியாபகம் இருக்க மாதிரி இருக்கனும். நடிகர் விக்ரம் பையன் தண்ணி அடிச்சி ஆக்சிடெண்ட் பண்ண விஷயத்தை தெரிய வெச்ச மாதிரி…. எம்.எல்.ஏ – எம்.பி பையனா இருந்தாலும் விடக்கூடாது. முக்கியமா அதிகாரத்துல இருக்கவங்க எப்போ பயப்படுவாங்கன்னா… தேர்ந்தெடுத்தவங்கள திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு வரும்போதுதான் பயப்படுவாங்க. அந்த மாதிரியான சிஸ்டம் கொண்டு வரனும்.
என் போட்டோ… எல்லாம் போடாதிங்க. அப்படிதான் ஒரு சூழல் இருக்குது. இதையும் சேர்த்து எழுதுங்க.”
ஆஷ்மித், பொலிட்டிகல் சயின்ஸ். எம்.சி.சி கல்லூரி தாம்பரம்.
“நம்மோட பிரண்ட்ஷிப் வந்து முதல்ல சரியா இருக்கனும். ஒருத்தன் நல்லவனா இருந்தா அந்த டீமே சரியா நடக்கும். இப்போ இந்த கேசுல மாட்டினவன் ஒருத்தன் கூட சரியில்லன்னு தோணுது. அதேமாதிரி சோசியல் மீடியாவுல இந்த விஷயத்த ஓயாது பரப்புறாங்க. ஆரம்பத்துலயே பிரச்சனைய சரி செய்யாததால பெரிய பிரச்சனையா மாறுது. எது எப்படியோ போலிசு ஒழுங்கா டீல் பண்ணும்னு நம்பக் கூடாது. ஜல்லிக்கட்டு மாதிரி போராடணும்.”
அரிகிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநர்.
“இவனுங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனைதான் கொடுக்கனும். மினிஸ்டர், எஸ்பி சொந்தக்காரன்னு சுதந்திரமா உலாத்துவானுங்க. இவனுங்கள நிக்க வெச்சி தோல உரிக்கனும். ஒரு பொண்ண இவ்ளோ இழிவா நடத்துறானுங்கன்னா அவனுங்க மனுஷனா இருப்பானுங்களா? சட்டப்படி எல்லாம் இவனுங்ககிட்ட பேசக்கூடாது. உயிரோட உடம்பு புல்லா பிளேடு போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நடக்க உடனும். அதைப் பார்த்தாதான் மத்தவன் திருந்துவான். போலிசுகிட்ட போனா… நம்மளயே குற்றம் சொல்லுவான். பொண்ணுங்க மேலயே கேசு போடுவான். நாம போராடினா நம்மளயே உள்ள தூக்கி போடுறானுங்க. இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு ஆதரவா இருக்க போலீசுக்கு எதிரா முதல்ல போராடணும்.
“பொண்ணுங்க மட்டும் யோக்கியமான்னு?” சிலர் கேக்குறாங்க….. சாதரணமா ஒருத்தன் கிட்ட பேசுறதோ பழகுறதோ தப்பா இன்னா..? கிடையாது. பழகும்போதே நான் மிருகம்னு சொல்லியா பேசுறானுங்க…… நம்பி போன பொண்ண நாசம் பண்றாணுங்க.. அப்போ அவங்கள மிருகம் மாதிரிதான் ஹாண்டில் பண்ணனும்.”
பாண்டியன், தனியார் நிறுவனத்தில் எச்.ஆர்–ராக பணிபுரிபவர்.
“இப்ப இந்த கேசை திடீர்னு சிபிஐக்கு மத்துறானுவ. ஏற்கனவே சிபிஐ என்ன பன்னும்னு தெரியும். கட்சிகாரணுங்க இன்னா சொல்லுறானுவளோ அதைத்தான் செய்யப் போவுது. பாதிக்கப்பட்டவங்க பாதி பேர் வெளியே வர்ல. வெளியே சொல்ல அவங்க பயப்படுறாங்க. எலக்சன் டைம். இன்னும் எத்தன நாள் பேசுவானுங்கன்னு தெரியாது. அதுக்குள்ள ஒரு புதுப் பிரச்சனைய பேச ஆரம்பிச்சிடுவோம். எல்லா பிரச்சனையையும் ஒரு புது பிரச்சனை எடுத்துனு வந்து மறைச்சிடுவானுங்க.’
அபிப், ஐ.டி டேட்டா என்ட்ரி ஊழியர்.
“தண்டனை கடுமையா இருக்கனும். அப்பதான் இதை எல்லாம் நிறுத்த முடியும். அவங்க சொந்தகாரங்க முதற்கொண்டு கவர்ன்மெண்ட் வேலையில இருந்தா அந்த வேலைய புடுங்கனும். அவங்க பெற்றொருக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கனும். இது எல்லாமே ஓப்பனா நடக்கனும். போலீசு என்னா செய்யுதுன்னே நமக்கு தெரியல. நாளைக்கு முக்கியமான ஆதாரம் இல்லன்னு விடுவிச்சிடுவானுங்க. இதுதான் வழக்கமா நடக்குது.”
போஸ் முத்து, மெட்ரோ சப்–கான்ட்ராக்டர்.
“இந்த குற்றத்துல சம்பந்தபட்ட எல்லோரும் பெரிய பணக்கார இடத்து பசங்க. பணத்திமிர்ல அந்தமாதிரி பண்றாங்க. எங்களை மாதிரி வேலைக்கு போயிட்டு சம்பாதிச்சா அதோட அருமை தெரியும். பந்தபாசம் தெரியும். அந்த கவலை எல்லாம் அவனுங்களுக்கு இல்ல. அதனால இந்த திமிருக்கு காரணமான அவங்களோட சொத்துக்களை பறிமுதல் செய்யனும். அவர்கள் கடுமையா தண்டிக்கப்படனும். நீதிமன்றம் போலீசு மூலம் மூலம் இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் போராட்டத்தின் மூலம் நீதியை பெற வேண்டும்.”
அஜித், ராம் – கூலித் தொழிலாளர்கள்
“நீங்க சொல்ற பிரச்சனை பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. காலையில வேலைக்கு போனோம்னா சாயங்காலம்தான் வருவோம். அதுக்குதான் நேரம் சரியா இருக்கும். ஆனா பேப்பர்ல போட்டிருந்தாங்கன்னு தெரியும். எங்களுக்கு படிக்கத் தெரியாது. விவரம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டோம். பட்டும்படாததுமா சொன்னாங்க. ஆனா நீங்க சொல்றத கேக்கும்போதே செம ஆத்திரம் வருது. அவங்களை விடக் கூடாது. இதுக்கு என்ன பன்றதுன்னே தெரியல…..”
பகதூர்தீன்.
“அந்த நியூஸ் கேட்டதுல இருந்து ஒரு புள்ளைக்கு அப்பனா என் ரத்தமும் கொதிக்குது. அந்த குழந்தைங்கள இன்னா சீரழிச்சிருக்கானுங்க. அதை கண் கொண்டு பாக்க முடியல. மனம் பதைக்குது. அதைப் பார்த்ததுல இருந்து சரியா தூக்கமும் இல்ல. மனசும் சரியில்ல. எவ்ளோ… கொடுமை அது.
இந்தமாதிரி அக்கிரமக்காரனுங்களுக்கு மதம், சாதி கிடையாது. அவனுங்க தனி மிருக ஜாதி. என்னோட சின்ன வயசுல இப்படி எல்லாம் ஒரு கதையும் கேட்டது இல்ல. நாங்க முசுலீமா இருந்தாலும் பொம்பள குழந்தைகள பாதுகாப்பா வெளியில அழைச்சினு போனதெல்லாம் எங்க ஊர்ல இருக்கும் இந்துக்கள்தான். அதுல ஆசாரி, செட்டியார்னு இருக்காங்க. உடம்பு சரியில்லனாக்கூட அவங்க வேலையா டவுனுக்கு போகும்போது அவங்க கூட அனுப்பி வைப்போம். அவங்க குழந்தைங்கள பத்திரமா வீட்டுல கொண்டு வந்து சேர்ப்பாங்க”
அவருடைய மனைவி….
“நாங்க சிறு வயசுல படிக்கும்போது கண்மாயில வந்து குளிக்கிறதுக்கு துணையா, பாதுகாப்பா இருந்தது இந்துக்கள்தான். அவ்ளோ பாசமா இருந்தாங்க. பிரிச்சி பார்க்க மாட்டாங்க. அதெல்லாம் இப்ப காணல…. மனுசங்க நெஞ்சு நஞ்சாகி போயிடுச்சி. இதை எப்படி போக்குறதுன்னு கவலையா இருக்கு. யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கு. குழந்தைங்கள வெளியில யாரையும் நம்பி அனுப்ப முடியல. இவனுங்களுக்கு கண்டிப்பா சரியான தண்டனைக் கொடுக்கனும். மத்தவங்க அதைப் பார்த்து திருந்தணும்.”

படிக்க:
♦ பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?