திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம்-2
(கதாநாயகர்கள் – திருபனந்தாள் காசிமடம் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் )
நண்பர்களே…..
நண்பர்களே பல்கலைக் கழக வட்டாரங்களில் மேற்குறிப்பிட்ட நூல்களின் முதற்பதிப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வு பேராசிரியர்களில் பலருக்கு இல்லாமல் போனது. இதன் விளைவாக அண்மையில் வந்துள்ள புத்தகங்களை வைத்து தங்களுடைய ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தி விட்டனர். அவர்களில் பலர் பிற்காலங்களில் வந்த நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து தங்களுடைய ஆய்வுகளை நிகழ்த்தி விட்டனர். பட்டங்களும் பெற்று விட்டனர் என்ற தகவல்களும் உலவுகின்றன.
அதாவது பட்டுச்சாமி ஓதுவார் பதிப்பித்த நூலினுள் கடுகளவு கூட மாற்றம் செய்யாமல் “மதுரகவி திருமுறைச்செம்மல் புலவர் பேராசிரியர் தா.ம. வெள்ளைவாரணம்” (செந்தமிழ்க் கல்லூரி, திருபனந்தாள்) அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு ஆய்வை நிகழ்த்தியுள்ளனர். நிகழ்த்தி வருகின்றனர். திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்க பதிப்பில் மிகச் சிறந்த நூலாகிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பில் 133 அதிகாரங்களில் அறத்துபாலுக்கும் பொருட்பாலில் இரண்டொரு அதிகாரங்கள் தவிர பிற எல்லாவற்றுக்கும் வை.மு. கிருஷ்ணமாச்சாரியாரின் உறவினர் சடகோப ராமானுஜாச்சாரியாரும் சே. கிருஷண்மாச்சாரியாரும் உரை விளக்கம் எழுதியுள்ளனர். காமத்துப் பாலுக்கு வை.மு.கோ. உரை எழுதியிருக்கிறார். இதனை வை.மு.கோ. தன்னுடைய முகவுரையில் தெளிவாக விளக்கி எழுதியும் உள்ளார்.
படிக்க:
♦ திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்
♦ திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி
ஆனால், வை.மு.கோ வின் மகன் திரு நரசிம்மன் காலத்தில் வந்த பதிப்பில் திருக்குறள் முழுமைக்கும் உரை விளக்கம் எழுதியது வை.மு.கோ என்று பதிப்பித்து விட்டார். இதனை நம்பி வை.மு.கோ எழுதாத விளக்கத்தை அவர் எழுதியதாக ஆராய்ந்த நூல்களுக்கு M.Phil.,Ph.D., போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும் சொல்லப்படுகின்றது. இத்தகைய பிழையான நிகழ்வுகளுக்கு இடம் தருவது தமிழ்மொழியின் சிறப்பை உலகளவில் குறைத்து விடும். இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….? என்பது தான் கவலையாக இருக்கிறது.
நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி