கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய ”கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் “ மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு ஆகியோர் உரையாற்றினர்.
ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில் “சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை விசிக கடந்த ஜனவரி மாதம் நடத்தியது. பிப்ரவரியில் மக்கள் அதிகாரம், காவி கார்ப்பரேட் பாசிசம் என இந்தச் சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைப் பற்றி மாநாடு போட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பலரும் மோடி ஆட்சிக்கு வந்தால் முசுலீம்களுக்கு ஆபத்து என்றனர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டும்தான், மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை இந்துக்களுக்கும் ஆபத்து என்று கூறியது.
படிக்க:
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ நீதிமன்றத்தில் அல்ல ! போராட்டத்தில்தான் தீர்வு ! | வழக்கறிஞர் பாலன் உரை | காணொளி
மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு. பணமதிப்பழிப்பு சமயத்தில், அதானி , அம்பானி, முதல் சேகர் ரெட்டி ஓபிஎஸ் வரைக்கும் இவர்களிடத்தில் புதிய பணம் கட்டுக்கட்டாக குவிந்தது எப்படி?
விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அவர்களைத் திரும்பிக் கூட பார்க்க மறுத்தார் மோடி. தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒரு போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் சிறப்புறச் செய்திருக்கிறது. தூத்துக்குடியில் போராட்டத்தைத் தூண்டினார்கள் என்கிறார்கள். ஆம் தூண்டுவதுதான் எங்கள் வேலை. அது மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வதற்கு அவசியமானது.
இந்த கார்ப்பரேட் காவி பயங்கரவாத சூழலை எதிர்கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து காவிக் கும்பலை எதிர்க்க வேண்டும்.” என்றார். (முழுமையான உரையைக் காண )
இம்மாநாட்டில் பேசிய தோழர் தியாகு, தனது உரையில், சங்க பரிவாரத்தினர் எவ்வாறு புல்வாமா தாக்குதல்களை தங்களது தேர்தல் பிரச்சார யுத்தியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தி பேசினார். மேலும் காஷ்மீர் சிறுமி ஆசிபாவை பாலியல் வன்முறை செய்து கொன்ற கயவர்களைக் காக்க பாஜக நேரடியாக களத்தில் இறங்கியதைக் குறிப்பிட்டு, காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்க இத்தாக்குதலை ஆளும் பாஜக அரசு பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மக்களின் போராட்ட வரலாறு குறித்தும், இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் அதன் தலையில் இல்லை என்பதையும் நினைவூட்டினார்.
காஷ்மீர் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதில் பாஜக, காங்கிரசு, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கின்றன என்றார். ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைக் காக்க நாம் அனைவரும் உயிர் பயம், சிறை பயமின்றி ஓரணியில் நிற்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். (முழு உரையைக் காண)