சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 3


காட்சி – 5
இடம் : நந்தவனம்
உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்து, மோகன்

(இந்துமதி மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தாஜி வந்து…)

சாந்தாஜி : இந்து இன்னும் மாலை முடியவில்லையா?

இந்து : இதோ, முடிந்து விட்டதப்பா.

(மாலையைத் தருகிறாள். சாந்தாஜி மாலையைப் பார்த்து விட்டு …)

சாந்தாஜி : என்ன இந்து மாலையில் மலரைவிட தழைதான் அதிகமிருக்கிறது. தேவனுக்கு இப்படியாமா மாலை சூட்டுவது?

இந்து : அப்பா நீங்கள் தினம் தினம் தேவனை தரிசிக்கிறீர்களே தவிர அவருடைய திவ்யமான குணத்தை தெரிந்து கொள்ளவில்லையே. பக்தியோடு பச்சை ஓலையை மாலையாகச் சமர்ப்பித்தாலும் பகவானுக்கு அதுவே பாரிஜாதமாயிருக்கும்.

சாந்தாஜி : ஆமாம் பேசத் தெரிந்து கொண்டாய். என்ன இருந்தாலும், இந்து கோவிலுக்குக் கொண்டு போகிற மாலை இப்படி இருக்கக் கூடாது.

இந்து : ஆமாம் கோவிலிலேயே இருந்து விடப்போகிறது, நீங்கள் தேவனுக்கு என்று மாலையைத் தருகிறீர்கள். நீங்கள் தரும் போதே பட்டாச்சாரி அதைத் தன்னுடைய தேவதாசிக்குத் தர தீர்மானிக்கிறான்.

சாந்தாஜி : துஷ்டப் பெண்ணடி நீ!

இந்து : உம்… அப்பா! மாலையைத் தரும்போது தேவனிடம் சொல்லுங்கள். இது, இந்து தயாரித்தது என்று. ஆமாம்! நீங்கள் சொன்னால் எங்கே அவர் காதில் விழப்போகிறது. அர்ச்சகருடைய அபசுரத்தைக் கேட்டு கேட்டு காது செவிடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது. (என்று கூறிவிட்டு ஓடுகிறாள். இன்னொரு மாலை கீழே விழுகிறது.)

சாந்தாஜி: இந்து இந்த மாலை ஏது : இவ்வளவு கள்ளியாகிவிட்டாயா? நல்ல மாலையை ஒளித்து வைத்து விட்டு, இலையை மாலையாக்கி இறைவனுக்குத் தருகிறாய்! ஏன் இந்த மாலையை ஒளித்து வைத்தாய்?

(இந்து மெளனமாயிருக்கிறாள்)

பதில் சொல்! யாருக்கு இந்த மாலை? யாருக்காக இந்த மாலை சொல்லு?

(சந்திரமோகன் வருகிறான். இந்த வெட்கத்துடன் தலைகுனிகிறாள். சாந்தாஜி அதைக் கவனியாமல் )

தேவனுக்கு மாலை தயாரிக்க சொன்னால் நீ இப்படி திருட்டுத்தனமா செய்கிறாய்? தேவனுக்குத் தழை! யாருக்கு இந்த மாலை? சொல்லு…

மோகன் : எனக்காக…

(சாந்தாஜி திடுக்கிட்டுத் திரும்பிக் கோபமாக)

சாந்தாஜி : என்ன! எனக்காக மாலை என்றா சொல்கிறாய்?

(மோகன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து)

மோகன் : மாலையா? எனக்காக? ஏன்?

சாந்தாஜி : என்னடா மோகன் என்னிடமா வேடிக்கை செய்கிறாய். நான் யாருக்கு மாலை என்று இந்துவைக் கேட்டால், நீ எனக்காக என்று சொல்லிவிட்டு…

மோகன் : ஓ.. அதுவா? நான் மாலை எனக்காக என்று சொல்லவில்லையே. எனக்காகத் தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் சுந்தர், அதற்காக வந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்.

(சாந்தாஜி மாலையை அவனிடம் வீசி எறிந்து)

சாந்தாஜி : இந்தா! நீ கேட்டாயோ இல்லையோ! இந்து இந்த மாலையை உனக்காகத்தான் தயாரித்திருப்பாள். நான் தேவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னால்…

(மோகன் மாலை அணிந்து கொள்ள, இந்த அவனை வணங்குகிறாள். சாந்தாஜி பார்த்து விடுகிறார். மோகன் அப்படியே பாம்பு போல கையை ஆட்டுகிறான்)

என்னடா மோகன் கையை ஆட்டுகிறாய்?

மோகன் : பாம்பாட்டம் காட்டுகிறேன்.

சாந்தாஜி : பாம்பாட்டமல்ல; நீங்கள் இரண்டு பேரும் வரவர, குரங்காட்டம் ஆடுகிறீர்கள்.

இந்து : அப்பா! பாதி ராமாயணமே அது தானே.

(இந்துவை அடிக்க சாந்தாஜி ஓடுகிறார். இந்து ஓடிவிடுகிறாள். சாந்தாஜி சிரித்துக் கொண்டே)

சாந்தாஜி : இந்து மகா குறும்புக்காரி. அவள் அம்மாவும் அப்படித்தான். சரி, சந்திரமோகன்! உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?

மோகன் : தெரியாதே

சாந்தாஜி : தெரிந்துக் கொள். இனி இந்துவை நீ பார்க்கக்கூடாது. அவளைப்பற்றி நினைக்கவும் கூடாது.

(மோகன் திகைத்து, பிறகு விளையாடுகிறார் என்று எண்ணி )

மோகன் : கனவிலே அவள் வந்தால்…?

சாந்தாஜி : அது கனவாகவே போகும்!

(மோகன் பயந்து)

மோகன் : தாங்கள் என்ன பேசுகிறீர்கள்?

சாந்தாஜி : பேசுவது புரியாத நிலை பிறந்து விட்டது உனக்கு… புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீயும் இந்துவும்

மோகன் : நானும் இந்துவும் கண்ணும் ஒளியும் போல.

சாந்தாஜி : பேசுவது நான் மோகன்… சகுந்தலையிடம் பேசும் துஷ்யந்தனாக இராதே இந்துவை நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன்.

மோகன் : ஏன்?

சாந்தாஜி : அவளுடைய தகப்பனாக நானிருப்பதால்

மோகன் :  குமரியைக் கொடுமை செய்வது தந்தையின் கடமைகளிலே ஒன்றா?

சாந்தாஜி : கடமைகள் எனக்கு மறந்து போகாததால் தான் என் மகளை … அவளை ரட்சிக்கக்கூடிய ஒருவனுக்குத் தாரமாக்கத் தீர்மானித்து விட்டேன்! உனக்கு எதற்கப்பா மனைவி … மக்கள். குடும்பம்? எதுவும் உனக்கு வேண்டியதில்லை நீ வீரன் மகா வீரன் போர் வீரன் போர் வீரனுக்கு மனைவி எதற்கப்பா?

மோகன் : மராட்டிய மண்டலத்திலேயே யாரும் பேசாத மொழி பேசுகிறீரே! நான் போர் வீரன் என்பதற்காகவா எங்கள் புனிதக் காதலை தடை செய்கிறீர்கள்? தாங்கள் பூஜிக்கும் ராமன் ஓர் போர்வீரன்.

சாந்தாஜி : நான் மட்டும் ஜனகனாக இருந்திருந்தால்; ராமனுக்குச் சீதையைக் கொடுத்திருக்கவே மாட்டேன். போர் வீரனை மணந்து கொண்டதால் ஜானகி கண்ட பலன் என்ன? ஆரண்யவாசம் இராவணனிடம் சிறைவாசம்! கர்ப்பிணியாகவே கானகவாசம். பிறகு பாதாளப் பிரவேசம். இதுதானே? இது தெரிந்துதான் சொல்கிறேன். இந்துவை உனக்குக் கல்யாணம் செய்து தர முடியாது என்று.

மோகன் : விசித்திரமான பேச்சாக இருக்கிறதே! – வீரர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிட வேண்டுமா? கோழைகளுக்குத்தான் கோமளவல்லிகள் வேண்டுமா? தங்கள் சித்தாந்தமே எனக்குப் புரியவில்லையே.

(மோகன் அருகே சென்று, தோள் மீது கை வைத்து அமைதியாக)

சாந்தாஜி : மோகன் கிழவன் நான். என் கிளி இந்து. அடேயப்பா! நீ சதா போர், போர் என்று போர்க்களத்திலேயே திரிய வேண்டும் என்கிறாயே. அவளை நான் உனக்குத் தந்துவிட்டு ஒவ்வொரு கணமும் உயிர் வேதனை அடைய வேண்டுமா?… நீயே சொல்லு! போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. பயங்கரமானது. அவள், இந்து, பூங்கொடி நீ புயல் காற்று. அவள் மெழுகு ; நீ அனல் …

மோகன் : அவள் மலர்; நான் மந்தி. அதையும் கூறிவிடுமே.

சாந்தாஜி : கோபிக்காதே மோகன் நீ மந்தியா? மந்தகாசமான முகம். மராட்டிய தேஜஸ் உடையவன். இந்துவுக்கேற்ற இளவரசன் எல்லாம் சரிதான். ஆனால் நீ போரிடப் போய்விடுவாயே அதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறதே.

மோகன் : வீணான பயம் வேண்டாம். நான் போர் வீரன் என்று தெரிந்த பிறகுதான் இந்து என்னைக் காதலித்தாள். அவளுடைய சுகத்திலே தங்களுக்கு அக்கரை இல்லையா? போர் வீரன் என்ற பட்டம் புகழின் சின்னம். அதைப் பெற எத்தனையோ குடும்பங்கள் தவம் கிடக்கின்றன.

சாந்தாஜி : என்னமோ, அப்பா உன் சொல் என் செவி புகாது. இந்துவின் தகப்பன் வீட்டோடு – குடும்பத்தோடு, சுத்தி கட்டாரி தூக்காத கண்யமாக வாழும் ஒரு மருமகனைத் தேடுகிறேன். அவ்வளவுதான் தெரியும் எனக்குப் பேச . நான் சொல்வதைக் கேளடா மோகன். சண்டாளத் தொழிலடா இந்தச் சண்டை போடும் தொழில், கொலை வேலை! ரத்தக்கறை படிந்த கையால் இந்த ரதியைத் தொடலாமா? போனது போகட்டும். அவளைத் தொட்டுத் தாலி கட்டிய பிறகாவது நீ இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன் என்று சத்தியம் செய்.

மோகன் : எந்தத் தொழிலை ?

சாந்தாஜி : பட்டாளத்து வேலையை.

மோகன் : அதுதான் தொழிலா? என் கடமை மராட்டிய வாலிபன் மராட்டியப் படையிலே சேர்ந்து பணியாற்றுவது, தொழிலல்ல; அவன் பிறப்புரிமை. நாட்டுத் தொண்டு ; ராஜ சேவை, தேசபக்தி.

சாந்தாஜி : அப்படியென்றால் இந்துவிடம் உனக்கிருக்கும் அன்பு வெறும் வேஷம். அவளுக்காக நீ வாளைத் துறந்து விடக் கூடாதா என்ன?

படிக்க:
“குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு !
பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

மோகன் : மராட்டிய நாட்டிலே இப்படி ஒரு முதியவர் இருப்பது தெரிந்தால் சிவாஜி ரத்தக் கண்ணீர் சொரிவார்.

சாந்தாஜி : சொரிவார் சொரிவார் ஜீஜி பாயின் கண்களிலே. ரத்தக் கண்ணீர் சொரிந்ததை அவர் அறியார். என் போன்ற ஏக்கங்கொண்ட கிழவர்களின் கண்ணீரையும் அவர் பார்த்ததில்லை .

மோகன் : நல்ல வேளையாகப் பார்த்ததில்லை. எதிரியின் வாள் உண்டாக்கிய காயத்திலிருந்து ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி போரிட்ட வீரர்களையே அவர் பார்த்தார். இந்துமதியைக் கேளுங்கள், வாளை நான் அவளுக்காகத் துறந்துவிட வேண்டுமா என்று?

(சாந்தாஜி மகிழ்ச்சியுடன் இந்துமதியைக் கூப்பிட, அவள் வீரன் உடையை அணிந்து வருகிறாள், மோகன் சிரிக்க..) (கோபத்தோடு)

சாந்தாஜி : இந்து ! இது என்ன கோலம் போ, உள்ளே .

மோகன் : மராட்டிய மாதாவின் போர்க்கோலம் அது.

சாந்தாஜி : போதும்! நீயும் போ இருவரும் சேர்ந்து எனக்குப் பைத்தியம் உண்டாகும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறது …. மோகன் போ நான் கோவிலுக்குப் போகவேண்டும் நாளைக்கு வா நாளைக்கு வேண்டாம்; நான்கு நாள் பொறுத்து வா வேண்டாம்; நீ வரவே வேண்டாம். என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.

இந்து : அப்பா!

சாந்தாஜி : ஆமாம் யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும்?

மோகன் : சாந்தாஜி இந்துமதி உமது மகள். நீர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டவள். நான் நாட்டு விடுதலைப் படையில் ஓர் வீரன். நீ வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்துமதியின் பேரழகுக்காக நான் பேடியாகி விட வேண்டுமென்று எண்ணாதீர். அவளை எனக்குத் தாரமாக்கினால் என் மாளிகையில் வசிப்பாள். எங்கள் காதலை உணராமல் அவளை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்தால், இந்து என் மாளிகையில் உலவ முடியாது. அப்போதும் என் மன மாளிகையில் வேறு மங்கை உலவமாட்டாள். நான் வருகிறேன்.  (கோபமாகப் போகிறான்.)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க