மனிதர்கள் பல்வேறு சூழல்கள், கலாச்சாரங்கள் நாடுகள், தேசங்கள் என பிரிந்து இருந்தாலும் சில தேவைகள், ரசனைகள் அவர்களை ஒன்றிணைக்கிறது. அதற்கு மிகச் சிறந்ததொரு சாதாரண உதாரணம் நாளிதழ்கள், பத்திரிகைகள் படிப்பது, இலக்கியங்கள் ரசிப்பது, சஞ்சிகைகள் வாசிப்பது. இவற்றுள் ஒருசில புகழ்பெற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து பல்வேறு தரபட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஜனரஞ்சமானவையாக இருக்கிறன.
இவைகள் சாதாரண படித்த பொது வாசகர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படுபவை. அதுபோன்று உலக அளவில் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகக்கூடியவை. ஆனால் குறிப்பிட்ட ஒரு வாசகர் வட்டத்தை, துறைசார் படித்த மட்டத்தை நோக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில அறிவுசார் சஞ்சிகைகளும் உலக அளவில் பிரசித்தம் வாய்ந்தவை. இவைகள் ஆய்வுபூர்வமான, மற்றும் ஆழமான வாசிப்புக்களை கொண்டவர்களை மாத்திரமே இலக்காக கொண்டவை.
தமிழ் இலக்கிய வாசகர்களுக்காக வெளியிடப்படும் கனதி மிகு ஆக்கங்களை கொண்ட கணையாழி. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு கட்டுரைகள் தாங்கிய IEEE. விஞ்ஞான ஆராய்ச்சி, அது தொடர்புடைய ஆய்வுகளை கொண்ட, இதில் தமது ஒரு கட்டுரை வெளிவருவது தான் தமது பிறவிப்பயன் என ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போற்றுகின்ற நேச்சர் (NATURE) போன்றவை இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுகள். அதே போன்று மருத்துவத்துறையிலும் ஓர் இதழ் உள்ளது. அதுதான் த லான்செட் The Lancet. இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்தது என அறியப்பட்ட பொது மருத்துவ (General Medicine) இதழ்களில் ஒன்றாகும். இதன் அண்மைய பிரதி நமக்கு அதிர்ச்சி தரும் ஆய்வொன்றைத் தாங்கி வந்திருக்கிறது.
சமீபத்திய பத்தாண்டுகளில் தெற்காசியாவில் அதாவது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக 2-ம் வகை நீரிழிவு (Type 2 Diabetes ) வேகமாக வளர்ந்திருக்கிறது என்ற பீடிகையுடன் அந்த கட்டுரை தொடங்குகிறது.
“இந்த நவீன காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம், தொழில்மயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன இவ்வாறான தொற்றா நோய்கள்(non communicable) அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இனம் காணப்பட்டிருக்கின்றன” என்று தொடர்ந்து செல்லும் கட்டுரை போகப்போக வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றுகிறது.
இதில் :
- ஊட்டச்சத்துமிக்க உணவுகளின்( nutritious food) பாவனையின் அளவும் தரமும் குறைதல்.
- உடற்பயிற்சி (Exercise), உடல் உழைப்பு (Physical labor) குறைதல்.
- அதிகரித்து வரும் சோம்பேறித்தனமான வாழ்கை முறை, தொழில்தன்மை. (Sedentary lifestyle and Non active working environment).
- உடற்பருமன் , உடல்நிறை அதிகரிப்பு ஆகியவை இந்த நாடுகளில் 2-ம் வகை நீரிழிவு மற்றும் அது தொடர்புடைய நோய்கள் அதிகரிப்பதற்கான ஆபத்து மிக்க காரணிகளாக அடையாளப்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.
படிக்க:
♦ “பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்
2017-ம் ஆண்டில் நேபாளம் முதல் இந்தியா வரை 4% முதல் 8% வரையில் (அண்ணளவாக பத்துப் பேரில் ஒருவர்) நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி இந்த நோயின் பரவ(ம்ப)லை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
அதே நேரத்தில் நேபாளத்தில் 16.7 சதவிகிதம் பேர் (நூற்றுக்கு பதினாறு பேரும் ) இலங்கையில் 26.1% ஆனோர் (நூற்றுக்கு இருபத்தாறு பேரும் )அதிகமான உடல் பருமனைக் கொண்டவர்களாக மாறி இருக்கின்றனர் என்பது நாம் கவனம் செலுத்த தவறிய ஒரு நோயாகவே மாறி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள், இளம்பருவ வாலிபர்கள் மற்றும் பெண்களில் அதிகரித்துவரும் அதிக உடற்பருமன் விகிதம் (obesity or BMI) இந்த 2-ம் வகை நீரிழிவு நோய்த்தாக்க அபாயத்திற்கு வழிவகுக்கின்ற மிகப்பெரும் காரணியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற் கூறியவைகள் எல்லாமே தவிர்க்க கூடிய, மாற்றம் செய்யக்கூடிய காரணிகள் (Modifiable Risk Factors) தான் என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நாம் யாரும் தப்ப முடியாத, மாற்றம் செய்ய முடியாத(Non modifiable risk factor ), நம்மோடு ஒட்டிப் பிறந்த, நமது உடலமைப்பின் (body composition) மூலமாக வரக்கூடிய ஆபத்து தான் நாம் அதிகம் பயம் கொள்ள வேண்டிய, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரணியாக இருக்கிறது. அது தான் the south Asian phenotype அதாவது தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர் என்கிற காரணி. (அரபிகள், வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மை விட எவ்வளவோ அதிகமாக சாப்பிடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரி வருத்தம் எல்லாம் வருவதில்லையே என்ற உங்களின் அங்கலாய்ப்பிற்கும் இதுதான் காரணம்.)
பிற இன குழுக்கள், பிற நாட்டு மக்களை காட்டிலும் தென் ஆசிய மக்களுக்கு இந்த 2ம் வகை நீரிழிவு பெரும்பாலும் இளவயதில் வருவதற்கும், மிக சிக்கலான நிலமைகள் உதாரணமாக சிறுநீரகக் கோளாறு (kidney failure ), மாரடைப்பு (heart attack ), ஆறாத நாட்பட்ட புண்களினால் கை, கால் வெட்டி அகற்றப்படுதல் (limb amputation ) போன்றவை விரைவாக ஏற்படுவதற்கும் இந்த உடல் அமைப்பு (body composition) தான் ஆபத்துமிக்க காரணியாக அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. இதனால் தென் ஆசிய மக்கள் இது தொடர்பில் மிக கரிசனத்துடன் இருக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது. அது போல இந்த உகந்த ஒரு உடல் அமைப்பு காரணமாக இந்த நோய் தெற்காசியர்களிடம் அதிகரித்து செல்வதனால் தீவிரமாக நோய் தடுப்பு இலக்குகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த கட்டுரை முற்றுப்பெறுகிறது.
ஆக மொத்தத்தில் இந்த இரண்டாம் வகை நீரிழிவு நம் எல்லோருக்கும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்கனவே நமது உடம்பில் இருக்கின்றன. நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.
அப்படியானால் என்ன செய்வது? நமக்கு முன்னால் சில தெரிவுகள் இருக்கின்றன. அவைகளை கவனமாக கையாள்வது தான் இதிலிருந்து தப்பிப்பதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையாக இருக்கும். மாற்றக் கூடிய காரணிகளை (modifiable risk factors) முறையாக கட்டுப்படுத்தி வைப்பதில் நாம் இன்று அடைகின்ற வெற்றி தான் நாளைய நோயற்ற வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.
இதற்காக இன்றிலிருந்து சிறுவர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள், தாய்மார்கள் உட்பட வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம். ஆரோக்கிய சத்துணவுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள பழகுவோம். உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் பேணுவதற்கு உறுதி கொள்வோம். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தங்களது உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை குறைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்வோம்.
அதே போன்று நமது வாழ்க்கை முறைகளை முற்றாக மாற்றுவோம், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரிரு கிலோமீட்டர்களாவது நடந்து செல்ல பழகுவோம். தொடரான உடற்பயிற்சிகள் செய்வதற்கு முயற்சி செய்வோம். ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது உடல் வியர்க்கும் அளவுக்கு ஏதாவது வீட்டு வேலைகளையோ அல்லது வேறு எந்த வகையான வேலைகளையோ செய்வதற்கு பழகிக்கொள்வோம்.
நமக்கு முன்னாலே உள்ள மிகச் சிறந்த தெரிவு இவைகள் மட்டும்தான். நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால் இன்னும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ நாமும் இந்த கொடிய நீரிழிவு நோயினால் பாதிக்கப் படப்போவது வெள்ளிடை மலை. நம் மொத்த எதிர்கால சமூகமும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பின்குறிப்பு :
“நீரிழிவு என்ற நோயே கிடையாது, அவ்வாறு கூறுவது ஒரு பொய்; வைத்தியர்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் தங்கள் வியாபாரத்திற்காக சொல்லுகின்ற ஒரு மோசடி” என்று நம்புகின்ற, சொல்லுகின்ற கூகுள் விஞ்சானிகள், பேஸ்புக் போராளிகள், வாட்ஸ்-அப் சயாரிகள் யாராவது இருப்பீர்கள் என்றால் நீங்களும் இந்த முறைகளை பயன்படுத்தி உங்களை தற்காத்துக் கொள்ள எந்த தடைகளும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.
நீரிழிவு நோயை ஒரு மாதத்தில் முற்றாக குணப்படுத்துகிறேன் பேர்வழி இதோ மருந்துகள், இந்த கசாயத்தை, இந்த தண்ணியை குடியுங்கள்; இந்த வல்லப்பட்டை, இந்த கொட்டையை சாப்பிடுங்கள் என்று கண்டதையெல்லாம் பகிரும் (share ) அறிவுசீவிகள் ஒரே ஒரு நீரிழிவு நோயாளியை முற்றாக குணப்படுத்திக் காட்டுங்கள். அடுத்த வருட மருத்துவம், இரசாயனவியல் போன்றவற்றிக்கான இரண்டு நோபல் பரிசுகளும் உங்களுக்குதான்.
மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics,
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka
இதையும் பாருங்க …
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll