‘கிளர்ச்சி’ தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஜம்மு காஷ்மீர் போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட பள்ளி முதல்வர் காவல் நிலையத்தில் மரணமடைந்துள்ளார். விசாரணைக்காக அழைத்துச் சென்று தன்னுடைய மகனை கொன்றுவிட்டதாக அவருடைய குடும்பம் கதறுகிறது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபொராவைச் சேர்ந்த ரிஸ்வான் ஆசாத் பண்டிட், மார்ச் 17-ம் தேதி போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில் ஸ்ரீநகர் போலீசு நிலையத்தில் இருந்த ரிஷ்வான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. பின்பு, போலீசும் அதை உறுதிபடுத்தியது.

போலீசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அவந்திபொராவைச் சேர்ந்த ரிஸ்வான் பண்டிட், உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசு அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. அவருடைய உடலையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. காவலில் ஏற்பட்ட மரணம் காரணமாக, சட்டப்படி இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக மட்டும் போலீசு அறிக்கை கூறுகிறது.
இது ஒரு திட்டமிட்ட படுகொலை என ரிஷ்வானின் தந்தை ஆசாத் உல்லா பண்டிட் கூறுகிறார். கடந்த ஞாயிறு அன்று காலை 10.30 மணியளவில் தங்கள் வீட்டுக்கு வந்த போலீசு, வீட்டை சோதனை செய்ததோடு, ரிஸ்வானையும் அழைத்துச் சென்றதாக அவர் கூறுகிறார்.
“அடுத்த நாள் காலையிலேயே விடுவித்து விடுவதாகக்கூறி, அவர்கள் என்னுடைய மகனை அழைத்துச் சென்றார்கள். ஆனால், இன்று என்னை தொலைபேசியில் அழைத்து மகன் இறந்துவிட்டதாகச் சொல்கிறது போலீசு. இது திட்டமிட்ட படுகொலை. என் மகனைக் கொன்றுவிட்டு, உடலை வீட்டுக்கு எடுத்து போங்கள் என எப்படி அவர் சொல்லலாம்?” என கண்ணீரோடு கேட்கிறார் ரிஸ்வானின் தந்தை. ஓய்வுபெற்ற அரசு அலுவலர் இவர்.
டேராடூனில் முதுகலை வேதியியல் பட்டம் பெற்ற ரிஸ்வான், காஷ்மீர் பல்கலையில் ஆய்வு படிப்புக்கு விண்ணப்பிக்க இருந்ததாக அவருடைய சகோதரர் முபாசீர் தெரிவிக்கிறார். முன்னதாக ரிஸ்வான் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வராக பணியாற்றியதாகவும் அங்கு அவர் வேதியியல் பாடத்தை கற்றுக் கொடுத்ததாகவும் அவர் கூறுகிறார். தனியாக டியூசன் பயிற்சி மையம் ஒன்றையும் ரிஸ்வான் நடத்தியிருக்கிறார்.

இதற்கு முன்பாக ரிஸ்வானை 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் போலீசு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டு ஆண்டுகள் பிணை வாங்க முடியாத பொது பாதுகாப்பு சட்டத்தின் (Public Safety Act – PSA) கீழ் வழக்கு போடப்பட்டதாகவும் அவருடைய உறவினர் ஒருவர் சொல்கிறார்.
“என்னுடைய சகோதரர் சட்ட – ஒழுங்கு காரணம் காட்டி தவறாக காட்டப்படுகிறார். அவர் ஆசிரியராக இருப்பது ஒன்று மட்டுமே அவர் செய்த தவறு. ஆறு மாதங்கள் ஜம்முவில் உள்ள கதுவா சிறையில் இருந்துவிட்டு கடந்த பிப்ரவரியில்தான் விடுதலையானார்” என்கிறார் முபாசிர். இவரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
“மகனே, வந்து எனக்கு ஒளி கொடு. நான் உனக்காக உணவு பரிமாற காத்திருக்கிறேன்” என அழுகிறார் ரிஸ்வானி தாய். “இதைத்தான் காஷ்மீரில் உள்ள அம்மாக்கள் தினமும் எதிர்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அருகில் உள்ள ஒரு பெண்.
ரிஸ்வானின் வீட்டிற்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர் வந்தபடியே உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளம் பெண்கள். பலர் அவர் பணியாற்றிய பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்.

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்ற காஷ்மீர் அரசியல்வாதிகளும் மிர்வைஸ் உமர் பாரூக் போன்ற கிளர்ச்சி குழு தலைவர்களும் ரிஸ்வானின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உரிய விசாரணை வேண்டும் எனவும் கோருகின்றனர்.
மக்களவை தேர்தலையொட்டி, ஜம்மு காஷ்மீர் போலீசு, கிளர்ச்சி தலைவர்களிடமும் ஜமாத்துகள் மீதும் கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் காவல் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த ரிஸ்வானின் மரணம் காஷ்மீர் பகுதியில் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது.
படிக்க:
♦ தனியார் கல்லூரியிலிருந்து ஒரு துணைப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை !
♦ காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை
ரிஸ்வானின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாதபடி போலீசும் மத்திய ரிசர்வ் படையும் தடுப்பதாக அவந்திபொராவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள். “காஷ்மீரில் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடிவதில்லை” என்றார் குலாம் அசன் மிர் என்ற உள்ளூர்காரர்.
அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் இதனை நியாயப்படுத்தும் இந்திய அரசு, இத்தகைய கயமைகளைக் கண்டும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கொலைக் குற்றத்தில் கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது !
கலைமதி
நன்றி: The wire