ஒரு புகைப்படக் கலைஞராக தான் பிறந்த மண்ணின் அழகை ஆவணப்படுத்தும் அதே நேரத்தில், தன்னுடைய தாய் மண் எதிர்கொள்ளும் அபாயங்களையும் ஆவணப்படுத்துகிறார் டோர் டுவோர்டா.
இயற்கையின் கொடைகளால் சூழப்பட்ட பைன் மரக்காடுகள் அதில் வாழும் பறவைகள், மலைகளின் ஊடாகத் தவழ்ந்து வரும் இதமான காற்று போன்றவற்றுக்கும், தங்களுக்கும் இடையேயான நீண்ட உறவு இருப்பதாக எண்ணுகிறார்.
சுவீடன் நாட்டின் வடக்கு பகுதியில் லாப்லேண்ட் மாகாணத்தில் உலகப் பாரம்பரிய சின்னங்களைப் பெற்றுள்ள ரண்டிஜார் என்ற நகரத்தில் வசித்து வருகிறார் டோர் டுவோர்டா. தலைமுறை தலைமுறையாய் சாமி பழங்குடியினர் வசித்து வந்த பூர்வீக நிலங்களும் இதே நகரத்தில்தான் உள்ளது.
தொடக்கத்தில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு வேட்டைத் தொழிலுக்கு மாறி, இறுதியாக கலைமான்கள் வளர்ப்பதையே பிரதான தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளனர் சாமி பழங்குடியினர்.
தான் ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதால், தன்னைச் சுற்றியுள்ள மலைகள், அருவிகளைப் புகைப்படங்கள் எடுத்து வைப்பது, குறிப்பாக சில நூறு வருடங்கள் பழமை வாய்ந்த க்விக்ஜாக்ச் என்ற கிராமத்தில் உள்ள பைன் மரக்காடுகளைப் படம்பிடிப்பதென்றால் டோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்தக் காடு கலைமான், கரடி, லிங்க்ஸ் எனப்படும் காட்டுப்பூனை, கடமான் போன்ற பல்வேறு உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு முறை நுழையும்போதும், ஒரு பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றில் முதல் முறையாக நுழைந்தபோது ஏற்பட்ட அனுபவம் கிடைக்கும். அவ்வளவு அழகான, பிரம்மாண்டமான காடு இது என்கிறார் டோர்.
நாங்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்கிறோம். மீன், பெர்ரி பழங்கள், இறைச்சி போன்றவற்றை நாங்கள் சந்தையில் வாங்கியதேயில்லை. எனக்குத் தேவையான ஆற்றலனைத்தையும் இயற்கையே கொடுக்கிறது. இப்படி வாழ்க்கையானது இயற்கையுடன் ஒன்றிப்போகும் நிகழ்வு தான் என்னைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒன்று என எண்ணுகிறேன் என்கிறார் டோர்.
ஒரு புகைப்படக் கலைஞனாகத் தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.

இயற்கையில் எழில் வனப்பு எப்படி சுற்றுலாப் பயணிகளை, சாமி பழங்குடியினரின் பூர்வீக பகுதிகளைச் சுண்டியிழுக்கிறதோ அதேபோன்று கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் தன்பால் ஈர்க்கிறது. எப்படி நியாம்கிரி மலையை போஸ்கோ நிறுவனம் குறிவைத்ததோ அதையொத்த ஒரு நிகழ்வும்தான் டோரின் பூர்வீக நிலத்திலும் நடக்கிறது. சாமி பழங்குடிகளின் பூர்வீக நிலங்களில் தாது வளங்களை வெட்டியெடுக்க சுவீடன் நாட்டு அரசு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.
2006-ம் பிரிட்டனைச் சேர்ந்த பியோவுல்ஃப் மைனிங் பி.எல்.சி என்ற நிறுவனத்திடம், சாமி பழங்குடியினர் வசித்துவரும் மலைக்குன்றுகளில் கனிமவளங்கள் இருக்கின்றனவா என சோதித்தறியும் உரிமம் தரப்பட்டது. யாக்மாக் என்ற சிறு நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை தான் சாமி பழங்குடியினரை இரு தரப்பாகப் பிரித்துவிட்டது. ஒருபுறம் வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற உத்திரவாதம் கிடைத்தாலும் மறுபுறத்தில் காடுகள் சூறையாடப்பட்டு அரியவகை உயிரினங்கள் அழியக்கூடிய அச்சுறுத்தலும் இருப்பதுதான் இப்பகுதியில் வசிக்கும் மக்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளது.
டோர் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிவரும் குழுவில் இணைந்துள்ளார். தான் சார்ந்த சாமி பழங்குடியினக் குடும்பத்தின் இயற்பெயரான டுவோர்டா என்ற பெயரையே ஒரு அமைப்பாக்கியுள்ளார். சுரங்க வேலைகளைத் தடுத்து நிறுத்துவதே தன்னுடைய பிரதான நோக்கமென்றும் அதற்காகத் தன்னுடைய உயிரையும் துறக்கத் தயார் என்றும் கூறுகிறார் டோர்.

காலோக் பகுதியில் மேற்கொள்ளப்படும் மாபெரும் சுரங்கப் பணிகளுக்கெதிராக 2006-ம் ஆண்டு முதல் போராடி வரும் டோர்
வடக்கு சுவீடனின் அய்ட்டிக் பகுதியில் அமைந்துள்ள பெரிய தங்க மற்றும் செம்புச் சுரங்கம். 2013-ல் 13-ஆக இருந்த சுரங்கங்களின் எண்ணிக்கையை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 27-ஆக அதிகரிக்க முயற்சித்து வருவதாக சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இயற்கையின் நளினம் சிதைக்கப்பட்டு வருகிறது, எங்கு பார்த்தாலும் வெடிச்சத்தம்தான் என்கிறார் டோர்.
பிரிட்டிஷ் நிறுவனமான பியோவுல்ஃப் மைனிங் பிஎல்சி ஆய்வு மேற்கொண்டிருக்கும் இடத்திற்கருகில் சாமி இனக்குழுவினருடன், சமூக ஆர்வலர்களும் முகாமிட்டுள்ளனர்.
2013-ல் நடந்த போராட்டத்தின் போது தாக்குதலுக்குள்ளான இளைஞரை அப்புறப்படுத்தும் போலீசு. இதுவரை ஆறுமுறை தாங்கள் போலிசை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது என்கிறார்.
ஜார்ஜ் ஸ்டென்பெர்க், பாரம்பரிய சாமி பாடகரான இவர் ஜாய்க்கர் என்றும் அழைக்கப்படுகிறார். சுற்றுலா வழிகாட்டியாக இருப்பது, மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது இந்த முகாமில் தங்கியிருப்பவர்களுக்குப் பரிச்சயமானது என்கிறார் டோர்.
ரண்டிஜார் ஏரி – பாழ்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்துவதென்பது சாமி இனத்தின் கலாச்சாரத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். நிலம் சாமி இனத்தினரின் கைகளில் இருக்கும்போது, அங்கே கனிமச்சுரங்கம், காற்றாலை போன்ற எதுவுமே இருக்கமுடியாது என்கிறார் டோர்.
சுரங்கக் கம்பெனி தற்காலிகமாக வாபஸ் பெற்றாலும், 2017-ல் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் மேலும் ஒரு ஆய்வுப்பணியை மேற்கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

டோரின் மகள் ஆஸ்டிரிட், அய்ட்டிக் பகுதியில் கழிவுகளை வெளியேற்றும் குட்டை ஒன்றில் நிற்கிறாள். அவள் அனுபவிக்கப்போகும் இயற்கைச் செல்வங்கள் இப்படி பாழ்பட்டுக் கிடக்கிறதே என்பதுதான் எனது பிரதான கவலை என்கிறார் டோரி.
தமிழாக்கம்: வரதன்
நன்றி: அல்ஜசீரா