‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற பெயரில் மோடி கொண்டுவந்த காப்பீட்டு திட்டம் அரசு பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதிகாரப்பூர்வ வழி என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பல பொது சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற வெற்றுத் திட்டங்களுக்குப் பதிலாக, அனைவருக்குமான சுகாதாரத்தை வழங்கும் அரசு மருத்துவமனைகளில்  போதிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர். இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமான எய்ம்ஸ்-இன் சமூக உணர்வுக்கான முன்னணி அமைப்பு அண்மையில் ‘ஆயுஷ்மான் பாரத்; உண்மைகளும் கட்டுக்கதைகளும்’ என்ற தலைப்பில் குழு விவாதத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய பல மருத்துவர்கள் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகளை தோலுரித்தனர்.

சமூக மருத்துவத்துக்கான மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் விகாஸ் பாஜ்பய்,  அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பிமா யோஜனா போன்ற திட்டங்களின் தோல்வி குறித்து ஆராய வேண்டும் என கூறினார்.  இந்தத் திட்டங்கள் அமலாக்கப்படும் போது ஏற்பட்ட போதாமைகளை மீண்டும் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பேசினார்.

“போதிய நிதி ஆதாரங்களை உருவாக்கத் தவறியதோடு, இந்தத் திட்டம் உடல்நலக்குறைவான மக்கள் குறிப்பாக ஏழைகள் என்கிற உண்மையான பிரச்சினையை கவனத்தில் கொள்ளவே இல்லை.   அரசு பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதிகாரப்பூர்வ வழியாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது இது” என்றார் அவர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறைத் தலைவரான சுப்ரதா சின்ஹா,  ஆயுஷ்மான் பாரத் அதிக செலவுகள் செய்யவேண்டியிருக்கிற புறநோயாளிகளுக்கு உதவவில்லை என்கிறார். “அதுபோல, எந்தவொரு சுகாதார திட்டத்தின் முக்கிய நோக்கமும் பொது சுகாதாரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும்.  அரசு வழங்கும் நேரடியான சுகாதார சேவையைக் காட்டிலும் காப்பீடு என்பது குறைவான பயனை அளிக்கக்கூடியது” என்பதை சுட்டிக்காட்டினார் சின்ஹா.

எய்ம்ஸ் மனநல மருத்துவ துறையைச் சேர்ந்த பேராசிரியர், டாக்டர். பிரதாப் சரண் பேசும்போது, அரசு சேவையை வழங்குவதிலிருந்து தனியார் நிறுவனங்களிலிருந்து வாங்கும் சேவைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்றார்.  இது அடிப்படை பொறுப்பை துறப்பதாகும் என்றும் அவர் விமர்சித்தார்.

படிக்க:
நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !
மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

எய்ம்ஸ் எலும்பியல் துறை பேராசிரியரான மருத்துவர் ஷா அலாம் கான், உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவும் பாகிஸ்தானும் சுகாதாரத்துக்கு போதிய நிதியை செலவழிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்த இரு நாடுகளும் போருக்கு தயாராயின. ஆனால், தங்கள் நாட்டு மக்களின் நலன் குறித்து இவர்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை என்றார்.

“இந்த அரசு அமைந்தவுடன் 2014-ல் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டிலேயே பொது சுகாதாரத்துக்கான நிதி 20% குறைக்கப்பட்டது.  பொதுசுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை” என்றார் ஷ அலாம் கான்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹர்ஜித் பாட்டீ, “நிதி ஒதுக்கீடு அரசின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை. 10 கோடி குடும்பங்களுக்கு ரூ. 6400 கோடி என ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு ரூ. 128, ஒரு குடும்பத்துக்கு ரூ. 640 என்பது மிகக் குறைவான தொகையாகும். இதை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைப் பெற முடியாது” என்கிறார்.

“சுகாதார கட்டமைப்புகளை ஒழுங்காக செய்யமுடியாமல் போன அரசின் கண் துடைப்புதான் இந்த ‘ஆயுஷ்மான்’ திட்டம்” என கடுமையாகவும் சாடினார்.

“தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அடிப்படை சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் முதலீடுகளை கடுமையாக குறைப்பதன் மூலம் புறக்கணிக்கப்படுவதால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் பாதுகாப்பு நிறுவனங்களின் சுமைகள் அதிகரிக்கின்றன.  தனியார் துறைகளின் பங்களிப்பை அதிகப்படுத்துவதன் மூலம், அதாவது RSBY மற்றும் PMJAY போன்ற திட்டங்களின் மூலம் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறது அரசு” என்கிறார் சமூக முன்னேற்றத்துக்கான கவுன்சிலைச் சேர்ந்த ஆசிரியர் இம்ரானா குவதீர்.


அனிதா
நன்றி: நியூஸ் 18

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க