சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 5


காட்சி – 8
இடம் : விருந்து மண்டபம்
உறுப்பினர்கள் : சிட்னீஸ், சிவாஜி, சர்தார்கள், நடனமாது.

(நடனம் நடக்கிறது. ஆசனங்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. முகப்பில் பெரிய ஆசனம். சிட்னீஸ் உலவியப்படி இருக்க சர்தார்கள் வருகின்றனர்.)

சிட்னீஸ் : வாருங்கள் வாருங்கள் மராட்டிய சர்தார்களே வந்து அமருங்கள். உங்கள் வருகையை மாவீரன் சிவாஜி ” மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சர்தார் – 1 : சந்தோஷம் விருந்தை இந்த மண்டபத்திலேயே நடத்திவிட உத்தேசமா?

சிட்னீஸ் : ஆமாம்! அந்தப் பெரிய மண்டபத்தை ஆயுதக் காட்சிச் சாலையாக்கிவிட்டார்.

சர்தார் – 2 : இருவரிசைகள் உள்ளன. சரி, அதோ ஒரு ஆசனம் இருக்கிறதே, முகப்பில் தனியாக. அது ஏன்? அது யாருக்கு?

சிட்னீஸ் : அந்த ஆசனத்தில்தான். அஞ்சா நெஞ்சன் சிவாஜி அமரப் போகிறார்.

சர்தார் – 1 : அமரட்டும். ஆனால், அந்த ஆசனம் இருவரிசைகளிலேயே ஏதேனும் ஒன்றோடு சேர்த்துப் போடப்படாமல் தனியாக, இரு வரிசைக்கும் மேலாக, உயரமாகப் போடப்படுவானேன்?

சிட்னீஸ் : விருந்துக்கு அவர் தலைமை தாங்குபவர் என்ற முறையிலே, இது போல் அமைத்தோம்.

சர்தார் – 1 : அதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

சர்தார் – 2 : இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் விருந்துக்கு வரச் சம்மதித்திருக்கமாட்டோம்.

சர்தார் – 1 : ஏன் இப்படி எங்களை வரவழைத்து அவமானம் செய்ய வேண்டும்?

சிட்னீஸ் : அவமானமா? இந்த ஆசன அமைப்பு முறையா உங்களை அவமானம் செய்கிறது?

சர்தார் – 1 : மானாபிமானம் விஷயமாய், மகானுபவரே! எங்களுக்குக் கொஞ்சம் அக்கறை உண்டு. அவ்வளவுதான்.

சிட்னீஸ் : மராட்டியத்தை வாழ்விக்க வந்த மாவீரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாத மராட்டிய சர்தார்களா, இப்படி ஆட்சேபனை கூறுவது?

சர்தார் – 2 : ‘போ, இந்தக் களத்துக்கு; தாக்கு, அந்தப் படையை! அதன் அளவைப் பற்றி அத்தவேண்டாம். தாண்டும் அந்த அகழியை’ என்று அவர் கட்டளையிட்டபோது ஏன் என்று கேட்டதில்லை. ஆகுமோ என்று யோசித்ததில்லை. சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தால். ஆனால் சிட்னீஸ் சாம்ராஜ்யம் தர்ம சூன்ய ராஜ்யமாக இருக்கவுமா சம்மதிக்க முடியும்?

சர்தார் – 1 : மிக மிக சாமான்யர்களுக்கும் விளங்கக் கூடிய கலாச்சாரத்தையே மறந்து விட்டார்களே இப்போதே. அவர் எங்கள் நெஞ்சுக்கு உரம் ஊட்டியவர்தான். ஆனால் எமது குலத்துக்குமா நஞ்சு ஊட்ட இடம் தரவேண்டும்?

சர்தார் – 2 : சிவாஜி வீரர், தீரர், தியாகி, தேசோத்தாரகர். எல்லாம் சரி. ஆனால், அவர் உயர்ந்த ஜாதியினரல்ல. குடியானவர் குலம். பிரபு, கோர்பாதி, நிம்பால்கர், சவாந்து போன்ற உயர்குல மக்கள் கூடியுள்ள இந்த இடத்திலே அவர் தலைமை வகிப்பது முறையாகாது. குலதர்மத்துக்கு இது தகாது.

சர்தார் – 1 : விருந்துக்குத் தலைமை தாங்க, அந்த உயர்ந்த ஆசனத்தில் அவர் அமர்வதற்கு நாங்கள் சம்மதித்தால், எங்கள் குலங்களை விட அவர் பிறந்த குலம் மேலானது என்று நாங்கள் ஒத்துக் கொண்டதாக அல்லவா அர்த்தப்படும்?

சர்தார் – 2 : அது எங்ஙனம் சாத்தியப்படும்? எப்படி அதை ஒப்புக் கொள்ள முடியும்? நாங்கள் அனைவரும் சிவாஜியினுடைய வீரத்தை ஒத்துக் கொள்கிறோம். போரிலே அவர் புலி; ஆட்சேபிப்பார் இல்லை. அவருக்காக வாள் ஏந்தி வையகத்தின் கோடி வரை சென்று போரிடவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்கள் குலத்தைவிட அவர் பிறந்த குலம் மேலானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது நான்.

சர்தார் – 1 : நானும் தான்!

சர்தார் – 2 : நானும் தான்!

(சிட்னீஸ் கோபமும் சோகமும் கொண்டு)

சிட்னீஸ் : முடிவான பேச்சா இது?

சர்தார் – 1 : ஆமாம்! ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். குலதர்மத்தை இழக்க மாட்டோம். இது விருந்தல்ல ; விஷமூட்டுமிடம். எங்களுக்கு இங்கு வேலையில்லை.

(எல்லோரும் போகின்றனர். சிட்னீஸ் கோபத்தோடு தட்டுகளை வீசி எறிகிறான்)

சிட்னீஸ் : விருந்து மண்டபம் விவாத மண்டபமாகிவிட்டது. குதூகலிக்க வேண்டிய கூடத்திலே, கோபமும், கொந்தளிப்பும், மூண்டன. சிவாஜியின் வீர உருவம்.

(சிவாஜி அப்போது சிட்னீஸ் அறியாவண்ணம் பின்புறமாக வந்து சிட்னீஸ் பேசுவதைச் சோகமாகக் கேட்டல்)

அவருடைய வெற்றிகள் . அவர் உருவாக்கிய புதிய மராட்டியம் எதுவுமே அந்தச் சர்தார்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குலம் மட்டுமே தெரிகிறது. குலபேதமெனும் தேள் கொட்டிய குரங்குகள். விருந்து மண்டபத்திலே இந்த விபரீதம் நேரிட்டது தெரிந்தால் வீரத்தலைவன் விசாரத்தில் ஆழ்ந்து போவாரே.

(சிவாஜி வர, அவர் முன் மண்டியிடுகிறான்)

சிவாஜி விசாரம் எழாமல் இருக்க முடியுமா சிட்னீஸ்? எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறோம், சோர்ந்து கிடந்த ” மராட்டியத்துக்குப் புத்துயிர் அளிக்க, விமோசனமில்லை. விடுதலை இல்லை என்று எண்ணி ஏங்கிக் கிடந்த நாட்டிலே, விட்டுக்கோர் வீரனைக் கூட்டினோம். விரோதிகளை முறியடித்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றபோது எந்த சர்தார்கள் நம் கண் காட்டிய வழி செல்லக் காத்து கிடந்தனரோ அவர்களே அல்லவா இன்று விதண்டாவாதம் பேசுகின்றனர். நண்பா! விருந்து மண்டபத்திலே நடந்த விவாதத்தை நான் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். விருந்து மண்டபத்திலே விஷப்புகையை மூட்டி விட்டனர். வீரன் தான், ஆனால் குலம் என்று கேட்கின்றனர். நிம்பார்க்கார் குலமாம்! கோர்பாத்குலமாம் – சவாந்து குலமாம்! இவைகளெல்லாம் நான் களத்திலே கடும் போரிடக் கிளம்பிய போது எங்கே போயின? குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதியிருந்தது. ஒரு குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதி இருந்தது. ஆனால் ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது. இந்த நிலையில் நாடு இருக்கிறது.

படிக்க:
ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை
நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?

சிட்னீஸ் : வீரத் தலைவனே! விசாரத்தை விடுங்கள். அவர்களின் விதண்டா வாதத்தை முறியடிக்க முடியாமலா போகும், மலைகளைத் தூளாக்கிய நம்மால் ?

சிவாஜி : வீரம் பேசுகிறாய் சிட்னீஸ்? விஷத்தைக் கக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். பார்த்தாயே? நீதானே பார்த்தாய்?

சிட்னீஸ் : பார்த்தேன்; சிந்தித்தேன்; ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

சிவாஜி : என்ன?

சிட்னீஸ் : மராட்டிய மண்டலம் உருவாகி விட்டது. புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது. எனினும் தாங்கள் மட்டும் இன்னும் பழைய சிவாஜியாகவே இருக்கிறீர்கள். அதனால் தான் பழமையில் படிந்து போயுள்ள அந்த சர்தார்கள், குலதர்மம் பேசுகிறார்கள். அவர்களிடம் கோபித்துப் பயனில்லை. வாதாடியும் பயனில்லை. அவர்கள் புண்ணிய ஏடுகளை பொதி பொதியாகக் கொண்டு வந்து கொட்டுவர், தமது கட்சிக்கு ஆதரவு தேட. ஆகவே அஞ்சா நெஞ்சனே! தாங்கள் மகுடா பிஷேகம் செய்துக் கொண்டு மகாராஜாவாகிவிட வேண்டும்.

(சிவாஜியின் முகத்திலே லேசான மலர்ச்சி ஏற்படுகிறது)

மகாராஜா ஆன உடனே நிம்பால்கரும், கோர்பாது, சவாந்தும், பிரபுவும், காயஸ்தரும், பிறரும் சகல குலத்தவரும் தாமாகவே தங்களை மேலான குலம் என்று ஏற்றுக் கொள்வர். ஏனெனில் மகிடாபிஷேகமானால், தாங்கள் மாகராஜாவாகிறீர். க்ஷத்திரியர் ஆகிவிடுகிறீர். க்ஷத்திரிய குலமானதும், மற்ற குலத்தவர் ஒரு குறையும் கூறுவதற்கில்லை. இதுதான் சரியான வழி. இன்றைய சம்பவம் காட்டும் பாடம்.

சிவாஜி : பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும்!

சிட்னீஸ் : ஆமாம்! குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். பரத மண்டலமே பூரிப்படையும்; வம்பர்களின் வாய் தானாக அடையும்.

சிவாஜி : உன் யோசனைப்படியே செய்வோம். பலருக்கும் இந்த அபிலாஷை இருக்கிறது.

சிட்னீஸ் : செய்தி கேட்டதும் மராட்டியமே துள்ளி எழும் மகிழ்ச்சியால். நான் சென்று அந்தக் காரியத்தைக் கவனிக்கிறேன்.

(சிட்னீஸ் மகிழ்ச்சியுடன் ஒடுகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க