சென்னையில் உள்ள ஒரு பிரதான ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது 5 பதின்வயது சிறுவர்கள் (வயது 15-17க்குள் இருக்கும்) கிரிக்கெட் பயிற்சியை முடித்து விட்டு விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி சீருடையில் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே வந்தனர். அவர்களில் 2 பேர் நான் அமர்ந்திருந்த இருக்கையிலும், 3 பேர் வேறு இருக்கையிலும் அமர்ந்தனர்.

எனது அருகில் அமர்ந்த இருவரும் அன்றைய தினம் நடைபெற்ற பயிற்சியைப் பற்றியும், வேறு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த 3 பேரில் ஒருவனைப் பற்றியும் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.

“அவன் நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு வரான்டா.. டாப் ஆர்டர்ல உனக்கு ரொம்ப டஃப் கொடுப்பான்டா. அந்த பசங்கள எல்லாம் வளர விடக்கூடாது… பாத்துக்க மச்சி”

“அவனுக்கெல்லாம் நான் பயப்படலடா… ‘கோச்’சும், ‘கிளப்’பும் நமக்குதான் சப்போர்ட். கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு… நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது”

மாதிரிப் படம்

“பின்ன ஏண்டா, அவனுங்க கூட ஜாலியா பேசுறே?”

“அவனுங்கள தேவைப்படுற நேரத்துல யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்றனும்டா. பகைச்சுக்கிட்டா தேவையில்லாத பிரச்சனையாகிடும்.”

“அப்ப இவனுங்களையெல்லாம் கண்டுக்கத் தேவையில்லைன்னு சொல்றியா?”

“தமிழ்நாடு கிரிக்கெட்டே நம்மகிட்டதான்டா இருக்கு. யாருக்கும் பயப்பட தேவையில்ல”

அவர்களின் உரையாடல் நிறைவடைவதற்கு முன்பே ரயில் வந்தது. இந்த உரையாடலை நடத்தியவர்களின் மொழி, தோற்றம், உடல் மொழி அனைத்தும் பார்ப்பனர்களை நினைவுபடுத்தியது. அவர்களில் ஓரிருவர் ’உயர்’ சாதிகளாகவும் இருக்கலாம். உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு சாதி வன்மத்துடன் உள்ளார்களே… இவர்கள் வளர்ந்தால் எப்படி இருக்கும்? எனத் தோன்றியது.

அந்த சிறுவர்கள் அதே பாணியில் இருபிரிவுகளாக வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்தனர். நான் இம்முறை அந்த 3 சிறுவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தேன். ஏதோ தனிப்பட்ட விசயங்களை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் திடீரென தனது போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

“மச்சி.. இன்னைக்கு செம ஆட்டம்டா… வச்சிப் பிரிச்சு எடுத்துட்டேன்.. அவனவன் மூஞ்சில அல்லு இல்ல…” எனத் தொடங்கி, அன்றைய ஆட்டத்தின் சிறப்பை சத்தமாக கத்திப் பேசினான்.

வேறு இருக்கையில் அமர்ந்த அந்த இரு சிறுவர்களும் இவன் பேச்சை முகம் சுழித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

படிக்க:
மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !

பின்னர் போனை வைத்த அவனிடம், அருகில் அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் கேட்டனர், “ஏண்டா இவ்ளோ கத்தி பேசுற…?”

“நான் யாருக்கும் போன் பேசல மச்சி… சும்மா சீன் போட்டேன்… அவனுங்க ரெண்டு பேரு மூஞ்ச பாத்தியா? காத்து போன பலூனாட்டம் சுருங்கிடுச்சி … கடுப்பாகட்டும்…”

“ஏண்டா, இந்த தேவையில்லாத வேலை…”

“அவனுங்க எல்லாம் ஒரு ஆளாடா; கிரிக்கெட்டே விளையாட தெரியாம நல்ல பேட், கிட்ஸ் (Kits) மட்டும் எடுத்துட்டு வந்து சீன் போடுறாங்க..”

“அவனுங்கள பத்தி நீ ஏன்டா திங்க் பண்றே?”

“மச்சி… எனக்கும் ரஞ்சி, டிஎன்பிஎல், ஐபிஎல், இந்தியன் டீம்ல ஆடணும்னு ஆசைதான். என்னதான் நமக்கு திறமை இருந்தாலும் நம்மால அதெல்லாம் முடியாது.. அவனுங்களுக்கு திறமையே இல்லன்னாலும் சான்ஸ் கிடைக்கும்… நம்ம கிளப்ல விளையாடி அடுத்த லெவலுக்கு போன எல்லாரும் அவங்க ‘ஆளுங்க’ தான்.”

“டேய் … நம்ம கோச் நம்ம அடுத்த லெவலுக்கு கொண்டு போறேன்னு சொன்னாரே டா…”

மாதிரிப் படம்

“அடப் போடா… கோச் நமக்கு ஒரு மாதிரியும், அவங்க ஆளுங்களுக்கு வேற மாதிரியும் ட்ரைன் பண்றான்… நம்மலாம் இந்த மாதிரி அவனுங்கள கலாய்ச்சி சந்தோசப்பட்டுக்கிட்டாதான் உண்டு”

“மச்சான்… அதெல்லாம் இல்லடா… கோச் நல்லவரு… என்ன அண்டர் 17 செலக்சனுக்கு அனுப்புறதா சொன்னாரு..”

“வெள்ளந்தியா இருக்கியேடா… நடந்தால் பார்ப்போம், அந்தாள அதிகம் நம்பாத… அவ்வளவுதான் சொல்வேன்… பாத்துக்கோ…”

விரக்தியோடு சொல்லி சிரித்தனர் அச்சிறுவர்கள்.

நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது… ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலைய படிக்கட்டுகளில் ஏறினேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மனிதர்களுக்குள் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் மனிதம் மரித்துப்போகும்.

படிக்க:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

அந்த இரு சிறுவர்கள் மீதும் எனக்கு கோபம் வரவில்லை; இந்த இளம் வயதில் சாதிய நஞ்சை அவர்களுள் விதைத்த அவர்களின் பெற்றோர்கள், சமூகம், கல்விமுறை, சாதி வெறியை கண்டிக்காத ஆசிரியர்கள், திறமையை மதிக்காமல் சாதி அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ போன்றவற்றின் மீதுதான் கோபம் வருகிறது.

ஒவ்வொரு பயணமும் நமக்குப் பல்வேறு அனுபவங்களை கற்றுத் தருகிறது. இன்றைய அனுபவம் என்றும் மறக்க முடியாதது.

அஹமது சமூக ஆர்வலர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க