பணமதிப்பு நீக்கம் குறித்த மறை-புலனாய்வு செய்தி ஒன்றை கடந்த செவ்வாய்கிழமை (26-03-2019) காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மோடியின் சர்வாதிகாரத்தனமான பணமதிப்பழிப்பு அறிவிப்பால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நிலைகுலைந்து, வங்கிகளின் முன் வரிசையில் நின்ற நிலையில், பாஜகவினர் பழைய ரூபாய் நோட்டுக்களை அக்கட்சியின் தலைவர்களிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றதை வீடியோ ஆதாரமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காந்திநகர் பாஜக அலுவலகத்தில் ரூ. 5 கோடி பழைய நோட்டுக்களை மாற்ற அக்கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் கொண்டு செல்வதும், நகருக்கு வெளியே உள்ள பாஜக பிரமுகர்களின் பண்ணை வீடுகளில் நோட்டுக்களை மாற்றித்தரும் ‘சேவை’யை இவர்கள் செய்ததையும் இந்த ஆதாரம் வெளிப்படுத்தியுள்ளது.
https://youtu.be/wL2lCr6k3qc
‘மேலிடத்தின் ஆசிர்வாதம்’ தங்களுக்கு இருப்பதால் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் ரூபாய் மாற்று ‘சேவை’ செய்யும் பாஜக-வினர். ரூ. 25 கோடி அளவுக்கு புதிய நோட்டுக்களை தங்களால் பெற்றுத்தர முடியும் என்கிறார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க வந்த ‘காவலாளி’ கும்பலே, பகல் கொள்ளையை தலைமையேற்று நடத்தியிருப்பது இந்த மறை-புலனாய்வில் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
நாட்டு மக்கள் வரிசையில் நின்று லத்தி அடி வாங்கியும், நெஞ்சுவலியால் செத்து மடிந்தும் கொண்டிருக்க ‘கொள்ளை காவலாளி’ கும்பல், கருப்புப் பண முதலைகளுக்கு எளிதாக ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளது.
படிக்க:
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
♦ அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த மறை-புலனாய்வு செய்தியை வெளியிட்ட தினத்தில் மேலும் இரண்டு செய்திகளும்கூட முக்கியத்துவம் பெற்றன. ஒன்று நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் சேர்ந்தது, ராம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தது. மற்றொன்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பணமதிப்பு நீக்கத்தின் மூலம் மோடி அரசு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியதாகவும், வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடாமல் இருப்பதாகவும் கண்டித்து பேசியிருந்தார்.
மேற்கண்ட மூன்று செய்திகளையும் தேசிய ஊடகங்கள் எப்படி கையாண்டன? எந்த செய்தி இந்த ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது?
ஆங்கில தேசிய ஊடகங்கள் :
டைம்ஸ் நவ் :
நடிகரா தொண்டரா என்ற ஹேஸ் டேக்கைப் பயன்படுத்திய இந்த தொலைக்காட்சி, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதித்தது. ‘ஹாட் சீட்’ என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் நாவிகா குமார், சமாஜ்வாதி கட்சியிலிருந்து பாஜக வரை ஜெயபிரதா நான்கைந்து கட்சிகளுக்கு தாவியது குறித்து கேள்வி எழுப்பினார். “நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பதை மக்கள் அறிவார்கள். சமாஜ்வாதி கட்சியிலிருந்து நானாக வெளியேறவில்லை; மாறாக, தூக்கியடிக்கப்பட்டேன்” என தனது கட்சித் தாவலுக்கு மாபெரும் கொள்கை விளக்கத்தை அளித்தார் ஜெயபிரதா.
இன்னபிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்குப் பிறகு, அமர்சிங் காவலாளி ஆனதால், பாஜகவுக்கு ஜெயபிரதா இலவசமாக பெற்றதா? என்ற கேள்வியைக் கேட்டார் நாவிகா.
அதற்கு ஜெயபிரதா அளித்த பதில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கக்கூடியது: “மோடிக்காகத்தான் நான் பாஜகவில் இணைந்தேன். பெண்களின் மரியாதையைக் காக்க பணியாற்றியவர் மோடி, அதனால்தான் இந்தக் கட்சியில் இணைந்தேன்”.
என்டீடிவி 24*7 :
‘ரியாலிட்டி செக்’ என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் நிதி ரஸ்தான், ‘தேர்தல் பத்திரங்கள் – வெளிப்படைத் தன்மையானவையா? வெளிப்படைத் தன்மை அற்றவையா?’ என்பது குறித்து விவாதித்தார். ‘அரசியல் நிதிதிரட்டலில் வெளிப்படைத்தன்மை’, ‘பணமும் அரசியலும் முதன்மையான ஓட்டைகள்’ என்பன போன்ற துணைத் தலைப்புகளில் இந்த விவாதம் நடந்தது.
பாஜகவின் சார்பில் பேசியவர், வெளிப்படைத்தன்மையுடனேயே தேர்தல் நிதி வாங்கப்படுவதாகக் கூறினார். ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பைச் சேர்ந்த ஜகதீப் சொக்கார், “சில தகவல்களை அரசே கட்டுப்படுத்துகிறது எனில், அங்கே வெளிப்படைத்தன்மையே இருக்காது” என்றார். இந்த அமைப்பு வெளியிட்ட, அரசியல் கட்சிகளின் 50% நிதிதிரட்டல் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்டது என்ற தகவலையும் இந்தத் தொலைக்காட்சி சொன்னது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் அதிகரித்து வரும் பாபுலிசம் குறித்த கேள்வியை முன்வைத்தார் நிதி ரஸ்தான். கோட்பாட்டாளர்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது என்ற ராஜன், அரசியல்வாதிகள் வைக்கும் சில தீர்வுகள் அற்புதங்களை நிகழ்த்தும் என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், “உதாரணம் சொல்கிறேன்… மதிய உணவுத் திட்டம், தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனால் கொண்டுவரப்பட்டது. முதன்மையாக இந்தத் திட்டம் குழந்தைகள் அதிகமாக படிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தால் அதிக குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர், இதனால் கல்வியின் தரம் மேம்பட்டது”.
இந்தியா டுடே :
ராஜ்தீப் சர்தேசாயின் நிகழ்ச்சியில் ராஜன் தோன்றினார். காங்கிரஸ் அறிவித்த ஏழை வீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 நிதியுதவி அளிக்கு ‘நியாய’ வாக்குறுதி குறித்து அவர்கள் விவாதித்தனர். ராஜன் அளித்த பதில்களின் சாராம்சத்தை ‘காங்கிரசின் வாக்குறுதி சாத்தியமானதா?’ ‘மக்கள் செல்வாக்குள்ள திட்டங்கள் விளையாடுகின்றன’, ’இந்தியாவின் பங்கீட்டு பொருளாதார பொறி’ போன்ற தலைப்புகளுடன் வெளியிட்டார்கள்.
ரிபப்ளிக் டிவி :
அன்றைய நாளில் நடிகையின் பாஜக பிரவேசம் முதல் முன்னாள் ஆளுநரின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு வரை பல விசயங்களை ஊடகங்களில் விவாதித்திருந்தாலும், பாஜகவின் ஊடக அடியாளான அர்னாப் கோஸ்வாமி விவாதித்த தலைப்பு: ‘அயோத்தி குறித்து காங்கிரசின் நிலைப்பாடு என்ன?’, ‘காங்கிரஸின் ராம் அரசியல்’ என்ற தலைப்பிட்டு விவாதித்ததோடு, காங்கிரசின் ராம பக்தி பொய் என்ற ஹேஸ் டேக்கையும் டிரெண்ட் செய்தது இந்த தொலைக்காட்சி.
இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூர், மணி சங்கர் அய்யர், போன்றோர் மதம் குறித்து, ராமர் குறித்தும் சொன்ன கருத்துக்களை எடுத்து ஒளிபரப்பினார்கள்.
தரூரின் படத்தின் கீழே அவர் சொன்னதாக, “இந்துக்கள் பிளவுபட்டவர்கள் என்கிறார்’ என்றும் மணி சங்கர் அய்யர், ‘ராமர் அங்குதான் பிறந்தார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டவர் என்றும் போட்டார்கள்.
விவாதத்தை நடத்திய அர்னாப், ‘இதுதான் மக்களை காயப்படுத்துகிறது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறும் நீங்கள், ராமர் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என தனது தீர்ப்பை எழுதி முடித்தார்.
இந்தி தொலைக்காட்சிகள் :
ஏபீபி நியூஸ் :
இந்தத் தொலைக்காட்சியும் ஜெயபிரதாவின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள், அவர் சிக்கிய சர்ச்சைகள் குறித்து விலாவாரியாக விவாதித்தது.
ஆஜ் தக் :
பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் வகுக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்தது இந்தத் தொலைக்காட்சி. இரண்டு வாரங்களில் பாஜகவை விமர்சிக்க பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ் கையிலெடுத்ததாகக் கூறியது அந்தத் தொலைக்காட்சி. ரபேல் ஒப்பந்த முறைகேட்டை குறிப்பிட்டு, காவலாளிதான் திருடன் என முன்னெடுத்தது, புல்வாமா தாக்குதலில் நுண்ணறிவு பிரிவின் தோல்வி, பால்கோட் தாக்குதல் குறித்த நம்பகத்தன்மை என பாஜகவை குறிவைத்து காங்கிரஸ் பல பிரச்சினைகளை எழுப்பியதையும் சுட்டிக்காட்டியது. மோடி ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும்போதும், ராகுல் பிரச்சினைகளை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பதையும் தொலைக்காட்சி சொன்னது.
ஜீ நியூஸ் :
தொலைக்காட்சி ஊடகங்களில் குஜராத் படுகொலைகள் நடந்த காலத்திலிருந்தே மோடியின் ‘சொம்பாக’ விளங்கும் ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் அதன் ஆசிரியர் சுதிர் சவுத்ரி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேட்டி எடுத்தார்.
காங்கிரசின் ‘நியாய்’ திட்டம் ஆட்டத்தை மாற்றுமா? என்கிற தலைப்பில் அந்தப் பேட்டி ஒளிபரப்பப்பட்டது. ஏழைகளை ஏமாற்றுவதற்காகத்தான் குறைந்தபட்ச வருவாய் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் அருண் ஜெட்லி. மோடி அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமலாக்க, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தை தவிர மற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்கின்றன என்றார்.
பாஜகவின் மூத்த கரசேவகர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜேட்லி, “பாஜகவில் கட்சிக்குத்தான் வாய்ப்பே தவிர, தனிநபர்களுக்கு அல்ல” என்றார்.
இறுதியாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றவர், “அரசின் முகம் நேர்மையானது, அது மற்றவர்களை நேர்மையானவர்களாக மாற்றுகிறது. அதுபோல, தேச பாதுகாப்பில் தீவிரமாக உள்ளது” என்று கூறி முடித்தார்.
என்டீடிவி இந்தியா :
‘பிரைம் டைம்’ நிகழ்ச்சியில் ராவிஸ் குமார், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கைவிடப்பட்ட கால்நடைகளால் விவசாயிகள் எத்தகைய பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள் என்பதைக் காட்டினார். தங்களுடைய வயல்களைப் பாதுகாக்க வேலியிடுவதற்காக இலட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் வருத்தப்பட்டனர். வேலிபோட பயன்படும் இரும்பின் விலை 50% அதிகரித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். யூரியா உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜெயபிரதா குறித்து சிறு செய்தி தொகுப்பும், சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணையவிருக்கும் செய்தியையும் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
கட்டுரையாளர் : கௌரவ் விவேக் பட்நாகர்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : த வயர்