லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 5
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை
வாழ்த்தி ஆற்றிய உரை (1919 மே, 6)
முதியோர் கல்வித்துறையில் கடந்த 18 மாதங்களாக ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் சோவியத்தின் செயல்பாடுகள் வேறு எதிலும் ஏற்பட்டதில்லை என்பது நிச்சயம். இந்தத் துறையில் நீங்களும் நானும் பணியாற்றுவது, வேறு துறைகளைவிட எளிதாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் பணியில் நாம் பழைய தடைகளையும், பழைய முட்டுக்கட்டைகளையும் அகற்றிவிட்டோம். அறிவு வேண்டும், இலவசக் கல்வியும், சுதந்திரமான வளர்ச்சியும் வேண்டும் என்று பெரும்பாலான தொழிலாளர்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். அவர்களின் மிகப்பெரும் கோரிக்கைகளை நிறைவு செய்ய சிலபல செய்வது எளிதாக உள்ளது. ஏனெனில் பொதுமக்களின் வலிமைமிக்க நிர்பந்தத்தால் அவர்களின் பாதையில் குறுக்கே நின்ற புற முட்டுக்கட்டைகளை எளிதாக அகற்ற முடிகிறது.
படிக்க :
♦ பேராசிரியர் சாய்பாபா …!
♦ மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து
நம்மை ஏகாதிபத்தியப் போருடன் பிணைத்து அந்தப் போரின் விளைவாக ஏற்பட்ட அளப்பரிய சுமையைத் தாங்குமாறு ரஷ்யாமீது திணித்த, வரலாற்றுரீதியான பூர்ஷுவா அமைப்புகளையும் ஒழிக்க முடிந்தது. இருந்தபோதிலும் வெகுஜனங்களுக்கு மறுபோதனை அளிப்பதும், கல்வியை ஸ்தாபன ரீதியாக ஏற்பாடு செய்வதும், அறிவைப் பரப்புவதும் அறியாமை மரபுகளை பத்தாம்பசலிப் போக்கை, காட்டுமிராண்டித் தன்மையை, மிருகத்தனத்தை ஒழிப்பதும் மிகவும் கடுமையான பணி என்பதை உணர்ந்தோம். இந்தத் துறையில் முற்றிலும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டு போராட்டம் நடத்தவேண்டும்.
இந்த விஷயத்தில் மக்களின் தலைமைப் பகுதிகள் நீண்டகால வெற்றிகளையும் உறுதியான முறையான செல்வாக்கையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இந்தச் செல்வாக்கிற்கு மக்கள் சுயவிருப்புடன் தலைவணங்குவர். ஆனால் நாம் நம்மால் இயன்ற அளவு பணிபுரியாத குற்றத்துக்கு ஆளாகி உள்ளோம். முதியோர் கல்வியைப் பரப்புவதற்கான முதல் நடவடிக்கைகளை எடுக்கும்போது நாம் இரு தடைகளோடு மோத வேண்டியுள்ளது. முதியோர் பழைய கட்டுப்பாடுகள் மரபுகளைத் துறந்த சுதந்திரமான கல்வியை வரவேற்கிறார்கள் . இந்த இரு தடைகளும் பழைய முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து வழிவழி வந்தவை. அந்த அமைப்பு இன்னும் நம்மைத் தொத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பந்தங்கள் சங்கிலிகளால் நம்மைக் கீழே இழுத்துக் கொண்டு வருகின்றது.
முதலாவது: பெருந்தொகையாக இருக்கும் பூர்ஷுவா படிப்பாளிகள் உள்ளனர். அவர்கள் தமது சொந்த தத்துவ இயல் கலாச்சாரக் கொள்கைகளைச் சோதனை செய்வதற்கு இந்தப் புது வடிவிலான தொழிலாளர் விவசாயிகளின் கல்வி அமைப்புகளை வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவற்றில் அவர்கள் மிகவும் அபத்தமான கற்பனையான பொருத்தமற்ற கருத்துகளை புதிய கருத்துகள் பாட்டாளி வர்க்கக் கலை கலாச்சாரம் என்று புகழ்ந்து புகுத்துகின்றனர்.(114) இது இயல்பே, ஆரம்ப நாள்களில் இதை மன்னித்தும் விடலாம். ஒரு விரிவான இயக்கத்தை இதற்காகக் குறை கூறலாகாது. ஆனால் நாள் பல செல்லச் செல்ல நாம் இவற்றை ஒழிக்க முயல வேண்டும்; அப்பணியில் நாம் வெற்றி காண்போம்.
இரண்டாவது : தடையும் முதலாளித்துவத்திலிருந்து மரபாக ஏற்பட்டதே. குட்டி பூர்ஷுவா உழைக்கும் மக்களின் விரிவான பகுதிகள் தமது அறிவுத் தாகத்தால் பழைய அமைப்பைத் தகர்த்தெறிந்தனர். ஆனால், ஸ்தாபன இயல்புள்ள வேறு எதையும் நிறுவுவதற்கான யோசனை அவர்களிடம் இல்லை. படித்த நபர்களை ஒன்றுதிரட்டவும் நூல்நிலையத் துறையை உருவாக்கவும் மக்கள் கமிசார் கவுன்சிலில் விவாதித்தபோது இதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, சுருக்கமான அந்த விவாதத்திலிருந்தே இந்தத் துறையில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். வாழ்த்துரை கூறும்போது குறைகளை எடுத்துச் சொல்வது வழக்கமல்ல என்பது உண்மையே, ஆனால் நீங்கள் அந்த பொது வழக்க நிலையிலிருந்து விடுபட்டவர்கள் என்று நம்புகிறேன்.
எனவே வருத்தம் தரும் சில கருத்துகளை நான் எடுத்துக்கூறும்பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையமாட்டீர்கள் என்று நம்புகிறேன். படித்த நபர்களை ஒன்றுதிரட்டும் பிரச்சினையை நாம் எழுப்பியபோது, பூர்ஷ்வா புரட்சியின் வரையறையிலிருந்து உடனடியாகத் தோன்றாமலேயே, நமது புரட்சி மகத்தான வெற்றியடைந்தது பெரிய சாதனையாகக் காட்சியளித்தது. இது அப்போதிருந்த சக்திகளுக்கு வளர்ச்சியடைவதற்கான சுதந்திரத்தை அளித்தது. ஆனால் அப்போதிருந்த சக்திகள் குட்டி பூர்ஷுவாக்களே. அவர்களது குறிக்கோள் அனைவருக்கும் அவனவன் அவனவனுக்கே கடவுள் என்ற சாபக் கேடான முதலாளித்துவ கோஷமாகவே இருந்தது. இது கோல்சக் பூர்ஷுவா சக்திகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த இடமளித்தது.
எழுத்தறியாத மக்களுக்குக் கல்வி போதிக்க நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பரிசீலித்தால் நாம் மிகச் சிறிய அளவே பணியாற்றி உள்ளோம் என்ற முடிவுக்கு வருவோம். தொழிலாளி வர்க்கச் சக்திகள் ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவது இந்தத் துறையிலான நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். இது வெறும் காகிதத்தளவில் நின்றுவிடக்கூடிய சொல்லடுக்கு அன்று. மாறாக மக்கள் மிக அவசரமாகத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பதும், ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும். இதைத்தான் நமது ஆணை கூறுகிறது.(115) ஆனால் இந்தத் துறையில் எதுவுமே செய்யப்படவில்லை.
மக்கள் கமிசார் கவுன்சிலில் இன்னொரு பிரச்சினை, அதாவது நூல்நிலையங்கள் பற்றிய பிரச்சினை வந்தபோது தொழில் துறையில் பின் தங்கி நிற்கும் நிலை காரணமாக மிகச் சில புத்தகங்களே இருப்பது பிரதானக்குறை என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குறைகள் இருப்பது உண்மையே. நம்மிடம் எரிபொருள் இல்லை, நமது தொழிற்சாலைகள் செயலற்றுக் கிடக்கின்றன. நம்மிடம் உள்ள காகிதம் மிகக் குறைவு. எனவே நூல்களை வெளியிட முடியாது. இவையாவும் உண்மை. ஆனால் இருக்கும் நூல்களை நாம் ஒன்றுதிரட்ட முடியவில்லை என்பதும் உண்மை. இந்த இடத்தில் நாம் ஒரு விவசாயியின் பாமரத்தன்மையால் செயலற்ற தன்மையால் பாதிக்கப்படுகின்றோம், ஒரு விவசாயி ஒரு நிலப்பிரபுவின் நூல்நிலையத்தை உடைக்கும் பொழுது தன்னிடமுள்ள புத்தகத்தை எவராவது எடுத்துக் கொண்டுபோய் விடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
காரணம் வெறுக்கத்தகாத அரசாங்க உடைமையைத் தொழிலாளர் விவசாயிகளின் பொதுவான உடைமையை நியாயமாகப் பங்கீடு செய்வதை அவன் அறியான். இதற்கு அறியாமையில் கிடக்கும் விவசாயிகளைக் குறை கூறுதல் சரியன்று. புரட்சியின் வளர்ச்சியைப் பொருத்தவரை அது முற்றிலும் நியாயமானதே! அதோடு அது ஒரு தவிர்க்கவொண்ணாத கட்டமும் ஆகும். விவசாயிகள் நூல் நிலையங்களைக் கைப்பற்றி அவற்றை ஒளித்து வைத்திருக்கலாம், அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது. ஏனெனில் ரஷ்யாவிலுள்ள எல்லா நூல்நிலையங்களையும் ஒன்றிணைத்தால் படிக்க விழையும் ஒவ்வொருவருக்கும் தேவையான நூல்கள் கிடைக்கும்.
படிக்காதவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்பதை அவர்கள் அறியார். தற்போது நாம் ஸ்தாபனக் குலைவு, குழப்பம், மோசமான வாரியப் பூசல்கள் ஆகியவற்றின் மீத மிச்சங்களை எதிர்த்துப் போராட வேண்டும், இதுவே நமது பிரதான கடமை. எழுத்தறிவின்மையைப் போக்கப் படித்தவர்களை ஒன்று திரட்டுவது உடனடிக் கடமை. ஏற்கெனவே உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி நாடெங்கும் பரவலாக நூல்நிலையங்களை நிறுவ வேண்டும், உள்ள புத்தகங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும், போட்டி அமைப்புகள் இன்றி தனியே ஒருமுகப்படுத்தப்பெற்ற திட்டமிட்ட அமைப்பை நிறுவ வேண்டும். இந்தச் சிறிய விஷயம், நமது புரட்சியின் அடிப்படையான கடமைகளில் ஒன்றைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறினால், ரஷ்யக் குழப்பம், திறமையின்மை ஆகியவற்றை அகற்றி அந்த இடத்தில் உண்மையிலேயே முறையான ஒருமுகப்பட்ட அமைப்பை நிறுவுவதில் தவறினால், இந்தப் புரட்சி பூர்ஷுவா புரட்சியாகவே இருக்கும். ஏனெனில் கம்யூனிஸத்தை நோக்கி அணி வகுத்துச் செல்லும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பிரதான சிறப்பு அம்சம் இந்த ஸ்தாபனமே. பூர்ஷுவாக்களைப் பொருத்தவரை அவர்கள் விரும்பியது பழைய அமைப்பை உடைத்து, விவசாயப் பண்ணைகள் வளர்வதற்குச் சுதந்திரமளித்து, முந்திய புரட்சிகளைப் போல மீண்டும் முதலாளித்துவத்தை நிலைநாட்டுவதேயாகும்.
நாம் நம்மைக் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைத்துக் கொள்கிறோம். எனவே புறத்தடைகளை அகற்றி பழைய அமைப்புகளைத் தகர்த்துவிட்ட இன்று நாம் மகத்துவம் மிக்க உண்மையான தொழிலாளி வர்க்கப் புரட்சியின் முதற்கடமையான இலட்சோப இலட்சம் மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதில் இறங்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் துறையில் நாம் பெற்றுள்ள பதினெட்டு மாத அனுபவம் கலாச்சாரமற்ற நிலை, அறியாமை, அநாகரிகம் போன்று இதுகாறும் நம்மை வாட்டி வந்த நிலையிலிருந்து சரியான பாதைக்கும் வெற்றிக்கும் அழைத்துச் செல்லவேண்டும். (புயல் போன்ற கையொலி)
◊ பிராவ்தா இதழ்96-ல் வெளியிடப்பட்டது. (மே 7, 1919)
◊ தொகுப்பு நூல்கள், பாகம் 29, பக். 335-38.
அடிக்குறிப்புகள்:
114: புரேலெத்கல்த் (தொழிலாளி வர்க்கக் கலாச்சார அமைப்பு என்று சொல்லப்படுவதன் உறுப்பினர்களால் தொழிலாளி வர்க்கக் கலாச்சாரம் என்பதன் பெயரால் பரப்பப்படும் மார்க்சிய – விரோத கருத்துகளை லெனின் குறிப்பிடுகிறார். புரோலெத்கல்த் உறுப்பினர்கள் உண்மையில் கடந்த காலத்தின் கலாச்சார பிதுரார்ஜிதத்தை மறுத்தனர். தம்மைத்தாமே எதார்த்தத்திலிருந்து முறித்துக்கொண்டு ”பரிசோதனைக் கூட முறையின்” மூலமாக ஒரு விசேஷ தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தை உண்டு பண்ண முயற்சித்தனர். மார்க்சியத்திற்கு உதட்டளவில் ஆதரவு தெரிவித்த பிரதான புரோலியத் கல்டின் சித்தாந்தவாதியான போக்தோனோவ், தன் நோக்கு கருத்து முதல்வாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் ஆதரவளித்தார். அதன் பலஅமைப்புகளின் தலைமையாக விளங்கிய பூர்ஷூவா அறிவுத்துறையினருடன் கூடவே, சோவியத் அரசின் கலாச்சார வளர்ச்சியை உண்மையில் ஊக்குவிக்க விரும்பிய இளம் தொழிலாளிகளும் அதில் இருந்தனர். புரோலெத் கல்ட் அமைப்புகள் 1919-ல் புகழ் பெற்று விளங்கின ; ஆனால் இருபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவை சீரழியத் தொடங்கி 1932-ல் மறைந்துவிட்டன.
”தொழிலாளி வர்க்க கலாச்சாரம்” குறித்த தமது நகர் தீர்மானத்திலும், இதர பல நூல்களிலும் லெனின் புரோலெத்கல்டின் தவறான கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
115: 1918 டிசம்பர் 10-ல் மக்கள் கமிசார் அவையினால் பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 12 இஸ்வெஸ்தியா இதழ் 272-ல் வெளியிடப்பட்ட ”படித்தவர்களை ஒன்று திரட்டி சோவியத் அமைப்பின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வது” குறித்த ஓர் ஆணையை இது குறிப்பிடுகிறது. சகல எழுதப்படிக்கத் தெரிந்தவர்களையும் பதிவு செய்வது என்றும் அவர்களைக் குழுக்களாக அமைப்பதற்காக அவர்களிடையேயிருந்து பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும் இந்தக் குழுக்களை, ”முதலில், சர்க்கார் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, பொதுவாக மக்கட் தொகையினர் முழுமைக்கும் அரசியல் கல்வி அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் இந்த ஆணை முன் மொழிந்தது.
நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
♦ லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
♦ விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்
♦ டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
♦ லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்