கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்க அரங்கு கூட்டம் – கலைநிகழ்ச்சி!

08.04.2019 திங்கள், மாலை 6 மணி         பெரியார் திருமண மாளிகை, லால்குடி.

ன்பார்ந்த நண்பர்களே !

கார்ப்பரேட் – காவி பாசிசம்  எதிர்த்து நில் ! என்ற அரசியல் முழக்கத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தேர்தலைக் குறிவைத்து எல்லாக் கட்சிகளும் மாநாடு நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த மாநாடு நாடே எதிர் கொண்டிருக்கும் கார்ப்பரேட் – காவி பாசிச அபாயத்தை சுட்டிக் காட்டி அதனை முறியடிக்க அறைகூவல் விடுத்தது.

மாநாட்டை நடக்கவிடாமல் தடுப்பதற்கு காவல்துறையும் பாரதிய ஜனதா கட்சி யினரும் என்னென்னவோ செய்து பார்த்தனர். பல பொய்க்காரணங்களை சொல்லி அனுமதி மறுத்தது காவல்துறை. நீதிமன்றம் அனுமதித்த பின்னரும் மாநாட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்து பொய் வழக்கில் சிறை வைத்தது. பல இடங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்தவர்களிடம் தகராறு செய்தனர். மாநாட்டுக்கு வரும் மக்களை பேருந்துகளில் ஏறி புகைப்படம் எடுத்து மிரட்டியது காவல்துறை. இத்தனை மிரட்டல்களுக்குப் பின்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டுக்கு திரண்டு வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை .

ஏனென்றால் அந்த அளவுக்கு எல்லா தரப்பு மக்களும் மோடி அரசை வெறுக்கின்றனர். இந்துக்களின் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மோடி அரசுதான், ஆகப்பெரும்பான்மையான மக்கள் அனைவரின் எதிரி என்பது ஐந்தே ஆண்டுகளில் புரியாத மக்களுக்கெல்லாம் புரிந்து விட்டது.

உணவுப்பொருள் கொள்முதலைக் குறைப்பது, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி உள்ளிட்ட விவசாயிகள் மீதான தாக்குதல்கள். தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு, ஆட்குறைப்பு, ஒப்பந்தக் கூலிமுறை போன்ற தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள். கல்வி கார்ப்பரேட்மயமாதல், ஆதிக்க சாதியினருக்கு இட ஒதுக்கீடு, தொடக்கக் கல்விக்கே பொதுத்தேர்வு என்பன போன்ற வழிமுறைகள் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கல்வியிலிருந்து விரட்டும் குலக்கல்வித் திட்டம். பணமதிப்பழிப்பு, பெட்ரோல் வரி மற்றும் டோல் பிளாசா கொள்ளை, ஜி.எஸ்.டி முதலான சிறுதொழில்கள், சிறுவணிகர்கள் முதல் எல்லா தரப்பு மக்கள் மீதுமான தாக்குதல்கள். லவ் ஜிகாத், பசுக்கொலை எனப் பலவாறாக குற்றம் சாட்டி சிறுபான்மை மக்கள் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்.

கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் போன்ற அறிவுத் துறையினரின் படுகொலைகள், பீமா கோரேகான் போன்ற பொய் வழக்குகள், சபரிமலை பிரச்சினை உள்ளிட்ட கலவரங்கள். கல்வி நிறுவனங்களையும், கல்வித்திட்டத்தையும் காவி மயமாக்கும் நடவடிக்கைகள். இவைதான் மோடி அரசின் சாதனைகள்,

இந்த ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு வெறுக்கிறார்களோ அந்த அளவுக்கு பன்னாட்டு முதலாளிகளும், தரகு முதலாளிகளும் இதனை நேசிக்கிறார்கள். ஏனென்றால், அரசாங்க கஜானாவின் சாவியை அம்பானி, அதானி போன்ற பனியா, மார்வாரி முதலாளிகளிடம் மோடி ஒப்படைத்திருக்கிறார். மோடி பதவிக்கு வந்தபோது இந்த கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்குத் தரவேண்டியிருந்த வாராக்கடன் 2,19,000 கோடி. நான்கே ஆண்டுகளில் இது 8,97,000 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த மூன்றே ஆண்டுகளில் மோடி இவர்களுக்கு வழங்கியிருக்கும் கடன் தள்ளுபடி மட்டும் 2.4 லட்சம் கோடி.

மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரைப் போல மொத்தம் 23,000 வங்கிக் கொள்ளையர்களை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார் உத்தமர் மோடி. இவர்களில் கணிசமானவர்கள் குஜராத் முதலாளிகள். இந்திய மக்கள் தொகையின் பாதிப்பேருடைய சொத்து ஒன்பது முதலாளிகளின் சொத்துக்குச் சமம் என்கிறது 2019 -ல் வெளிவந்திருக்கும் ஆக்ஸ்ஃபாம் ஆய்வு.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

மோடியின் குஜராத் மாடல் இந்து ராஷ்டிரம் என்பதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம். இது பார்ப்பனியமும், முதலாளித்துவக் கொடுங்கோன்மையும் இணைந்த வீரிய ஒட்டுரகம்.

மோடியைப் போன்ற பாசிஸ்டுகள் இன்று உலகம் முழுதும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், 2007-க்குப் பின்னர் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சிக்கியுள்ளது. அந்த நெருக்கடியின் சுமையை மக்களின் மீது வைப்பதற்கும், எதிர்க்கின்ற மக்களை ஒடுக்குவதற்கும் பல நாடுகளில் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். இவ்வாறு நமது நாட்டில் தோற்றுப் போன அரசுக்கட்டமைப்பின் இடத்தில் திணிக்கப்படுவதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம்.

ஆகவே, பாசிசம் என்பதை வெறும் ஆட்சி மாற்றமெனக் கருதக்கூடாது. இது அரசுக் கட்டமைப்பிலேயே கொண்டு வரப்படும் மாற்றம்.

புதிய தாராளவாதக் கொள்கைகளின் கீழ் ஒழுங்குமுறை ஆணையங்கள், நிதி ஆயோக், ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களிடம் அதிகாரம் கைமாறிவிட்டது.

(படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இந்நிலையில் பா.ஜ.க.வின் இடத்தில் வேறொரு கூட்டணி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களால் புதிய தாராளவாதக் கொள்கைகளை மாற்ற முடியாது. அப்படி யாரேனும் மாற்ற முனைந்தால், மாற்ற முனைபவர்கள்தான் மாற்றப்படுவார்கள். கிரீஸிலும் வெனிசூலாவிலும் நாம் காண்பது இதைத்தான்.

வலுவான அமைப்பு கட்டமைப்பையும் சமூக அடித்தளத்தையும் கொண்டுள்ள கார்ப்பரேட்- காவி பாசிசம் ஒரு தேர்தல் தோல்வியால் வீழ்ந்துவிடாது. இந்த அரசுக் கட்டமைவுக்கு வெளியேதான் பாசிசத்தை முறியடிப்பதற்கான வழியை நாம் தேடவேண்டும். தேர்தல் அரசியலுக்கு வெளியே நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம். மக்களின் போராட்ட உறுப்புகளை அதிகார உறுப்புகளாக உருவாக்குவோம்.

நிகழ்ச்சி நிரல் :

தலைமை:

தோழர் செழியன்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

அறிமுக உரை:

தோழர் ராஜா,
ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

உரை:

தோழர் இந்திரஜித்,
மாநிலக்குழு உறுப்பினர், CPI திருச்சி.

தோழர் பூவை புலிகேசி,
வழக்கறிஞர், திராவிடர் கழகம்,
தலைமை நிலைய சொற்பொழிவாளர், பூவாளூர்.

தோழர் மரிய கமல்,
லால்குடி சட்டமன்ற ஒன்றிய செயலாளர், வி.சி.க.

தோழர் மணியரசன்,
மக்கள் அதிகரம் செம்பரை.

சிறப்புரை:

தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
திருச்சி,
தொடர்புக்கு: 94454 75157.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க