ஆவணப்பட இயக்குநர் ஆன்ந்த் பட்வர்த்தன் பாபர் மசூதி இடிப்பு குறித்து இயக்கிய ‘ராம் கி நாம்’ என்ற ஆவணப்படம் கரசேவர்களின் வெறியை உலகத்துக்கு எடுத்துக்காட்டிய முக்கியமான ஆவணமாக இன்றளவும் உள்ளது. அதன் பின் குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலை குறித்தும் இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகள் குறித்து ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். தன்னுடைய ஆவணப்படங்களை இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான பிரச்சார ஊடகமாகவும் பயன்படுத்தி வருகிறார் இவர்.
மோடி பிரதமராக முன்நிறுத்தப்பட்ட காலத்திலும் மோடி ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளிலும் இந்துத்துவ சக்திகள் கொலைத் திட்டங்களை நாடு முழுவதும் அரங்கேற்றின. பகுத்தறிவாளர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்துத்துவ செயல்திட்டங்களை விமர்சிப்பவர்கள், இந்துத்துவத்தால் ‘எதிரிகள்’ என முன்னிறுத்தப்படுகிறவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்துத்துவ பாசிச சக்திகளின் கொலைவெறியாட்டங்களை ‘Reason’ என்ற பெயரில் எட்டு பகுதி ஆவணப்படமாக எடுத்துள்ளார் ஆனந்த் பட்வர்த்தன்.
சர்வதேச அளவிலும் தேசிய அளவில் இவருடைய ‘Reason’ ஆவணப்படம் திரையிடப்பட்ட நிலையில், எட்டு பகுதிகளின் முதல் இரண்டு பகுதிகள் யூ ட்யூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முதல் பகுதி இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரின் பதிவு செய்யப்பட்ட உரையுடன் தொடங்குகிறது. “அனைத்துக்கும் ஒரு காரணம் உள்ளது. இறுதி உண்மையை நம்பும் மதத்தை போல் அல்லாமல், முடிவில்லா உண்மைகள் மற்றும் காரணங்களைத் தேடக்கூடியது அறிவியல்” என்கிறார் தபோல்கர்.
இந்துத்துவ அடிப்படைவாதிகளால் ஆகஸ்ட் 20-ம் தேதி, 2013-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். இவருடைய படுகொலையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இடதுசாரி செயல்பாட்டாளர் கோவிந்த் பன்சாரே -இன் படுகொலையும் இந்துத்துவ கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகார தாக்குதலுக்கு உதாரணங்களாகும். இதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது ‘Reason’ ஆவணப்படம்.
மேலும், இந்து தீவிரவாத அமைப்புகளான சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் மற்றும் அதிகரித்துவரும் உயர் தேசியவாதம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் முசுலீம்கள் -தலித்துகள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்களையும் புலனாய்வு செய்கிறார் பட்வர்த்தன்.
கடந்த செப்டம்பரில் நடந்த டொராண்டோ சர்வதேச ஆவணப்பட விழாவில் ‘Reason’ ஆவணப்படம் முதன்முறையாக திரையிடப்பட்டது. நவம்பரில் ஆம்ஸ்டர்டமில் நடந்த 31-வது சர்வதேச ஆவணப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை இந்தப் படம் பெற்றது.
படிக்க:
ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் மகாராஷ்டிரா நிர்மூலன் சமிதி அமைப்புடன் இணைந்து தபோல்கர் தன் வாழ்நாள் முழுக்க மூடநம்பிக்கைகளை எதிர்த்த பிரச்சாரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. 2013-ம் ஆண்டு புனேயில் காலையில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த தபோல்கர் இந்துத்துவ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
“நான்கு மணிநேரம் எனக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை” என்கிறார் தபோல்கரின் மனைவி சைலா. “நமது மனசாட்சியின் குரலை ஒலிக்க வேண்டும் என அப்போது நான் முடிவெடுத்தேன்” என்று இந்த ஆவணப்படத்தில் அவர் கூறுகிறார்.
இரண்டாம் பகுதி இடதுசாரி செயல்பாட்டாளர் கோவிந்த பன்சாரே குறித்து பேசுகிறது. தபோல்கரை போல பன்சாரே, பிப்ரவரி 16-ம் தேதி, 2015ல் காலை பயிற்சிக்கு சென்றிருந்த போது, அடையாளம் காணக்கூடிய இருவரால் சுடப்பட்டார். பின் நான்கு நாட்களுக்குப் பின் மரணமடைந்தார். மகாராஷ்டிர அரசும் சிபிஐ-யும் இந்த இரண்டு வழக்குகளிலும் கொலையாளிகளைப் பிடிக்க முனைப்பு காட்டவில்லை.
இந்த ஆவணப்படத்தில் தபோல்கரின் கொலை குறித்து பன்சாரே பொதுக்கூட்டத்தில் பேசுவதும் பதிவாகியுள்ளது. “மகாத்மா காந்தியை யார் கொன்றார்கள்? அதே சித்தாந்தம்தான் தபோல்கரையும் கொன்றது” என்கிறார் பன்சாரே. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளே தபோல்கரின் கொலைக்குக் காரணம் என்பதை தனது பேச்சில் சுட்டிக்காட்டுகிறார் பன்சாரே.
அனிதா
நன்றி: ஸ்க்ரால்