மக்கள் அதிகாரம் தோழர் வைத்திலிங்கம் மீது கொலைவெறித் தாக்குதல்!
அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம்!

டந்த 3.4.2019 அன்று மாலை தனது இரு சக்கர வாகனம் களவு போனது தொடர்பான புகார் மனு குறித்து விசாரிக்க அறந்தாங்கி காவல் நிலையம் சென்றுள்ளார் தோழர் வைத்திலிங்கம்.

அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபு மிக அலட்சியமாக பதிலளித்ததோடு மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார். ஏன் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள் என கேட்டவுடனேயே ஓங்கி அறைந்து, கொட்டடிக்கு இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார் உதவி ஆய்வாளர் பிரபு. இதில் ஒரு பல் உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கி இருக்கிறது.

விடாமல் தாக்கியதுடன் சாதியைக் கேட்டுள்ளார், சொல்ல மறுத்தவுடன் மேலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். வலி தாங்க முடியாமல்தான் ஒரு எஸ்.சி என கூறியவுடன் பள்ளனா? பறையனா? எனக் கேட்டுத் தாக்கியுள்ளார். இத்தாக்குதல் நடக்கும் போது அங்கிருந்த திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் அலாவுதீனுக்குத் தகவல் தர, அலாவுதீன் காவல் நிலையம் வந்து உதவி ஆய்வாளர் பிரபுவை எச்சரித்து அழைத்து வந்துள்ளார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான தோழர் வைத்திலிங்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆயினும் போலீசு மருத்துவர்களிடம் பேசி மருத்துவத்தைத் தடுத்து புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். அங்கும் அவரை மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இவ்வளவு அக்கிரமத்தையும் செய்துவிட்டு நடந்ததை பொதுவெளிக்குக் கொண்டு சென்றாலோ புகார் செய்தாலோ பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவோம், என மிரட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதற்கு பதிலாக குற்றவாளி எஸ்.ஐ பிரபுவின் ரௌடித்தனத்தையும், தீண்டாமைக் குற்றத்தையும் டி.எஸ்.பி மூடி மறைக்கும் செயலிலேயே குறியாக இருக்கிறார்.

படிக்க:
கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !
♦ சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

காவல் நிலைய காமிரா பதிவுகள், மருத்துவமனை ஆவணங்கள் இவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், உழைப்பாளிகள் ஆகியோரின் இயல்பான வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே காவல்துறைதான் என்பது பல்லாயிரக்கணக்கான சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குற்றக்கும்பலுக்கு அடியாளாக இருப்பதும் காவல்துறைதான்.

தோழர் வைத்திலிங்கத்தைத் தாக்கிய எஸ்.ஐ பிரபு, அவருக்கு உடந்தையாக இருப்போர், மருத்துவ உதவி மறுத்த மருத்துவர்கள் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய அநீதி கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராடுவதன் மூலமே காவல்துறை அராஜகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


தகவல் :
மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை,
தொடர்புக்கு : 75026 07819

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க