காங்கிரஸ் அரசின் ஊழல் முறைகேடுகளால் மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை அறுவடை செய்து, மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ம் ஆண்டு பதவி ஏறியது.

ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் பெரு நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களை கூறுபோடுவதிலும், மக்கள் பணத்தை வாரித் தருவதிலும் மோடி அரசு, புதிய சாதனை செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்த ஊழல்கள், முறைகேடுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்…

சாராய அதிபர் விஜய் மல்லையா, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு வாங்கிய ரூ. 9000 கோடி வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாமல் மார்ச் 2, 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். ஓடும் முன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக இந்த வங்கி மோசடியாளரே தெரிவிக்கிறார். தற்போது லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.

கடன் தகவல் முகமை (சிபில்) அளித்த தகவலின்படி, வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 5,275. அவர்கள் வாங்கிய கடன் ரூ. 56, 521 கோடி.

2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை இந்தோனேஷிய சுரங்கத்திலிருந்து நிலக்கரி மற்றும் மின்சார உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் விலை முறைகேடு செய்ததாக அதானி குழுமம், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம், எஸ்ஸார் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த நிறுவனங்கள் அதிகப்படியான பணத்தை வெளிநாட்டு போலி நிறுவனங்களில் பதுக்கியதாகவும் சொல்லப்பட்டது. இந்த முறைகேட்டில் 40 நிறுவனங்கள் ஈடுபட்டதாகவும் முறைகேடு செய்த தொகை ரூ. 290 பில்லியன் எனவும் செய்தி வெளியானது.

சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, வரி ஏய்ப்பு சொர்க்கமான பிரிட்டீஷ் வெர்ஜீனியா தீவுகளில் ஒரு நிறுவனத்துக்கு அகஸ்டா வெஸ்ட்லெண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்க 1.57 மில்லியன் டாலரை ‘கமிஷன்’  தந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சர்ச்சையில் முதலமைச்சரின் மகன் அபிஷேக் சிங்கும்  பேசப்பட்டார். 6.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹெலிகாப்டரை வாங்கிய பிறகு, இவர் ஒரு போலி நிறுவனத்தை தொடங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 114 பில்லியன் மோசடி செய்தது, இந்திய வங்கி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசடியாக இது கருதப்படுகிறது.  இந்த முறைகேடு பிரபல நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடிக்கு தொடர்புடையதாக வெளியே வந்தது. டிசம்பர் 2017-ம் ஆண்டின் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மொத்த கடனில் 12.11 சதவீதமாக இருந்தது. இந்த நீரவ் மோடி, பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர். இந்தியாவிலிருந்து தப்பியோடி இவரும் தற்போது லண்டன் சொகுசு வாழ்க்கையில் சுபிட்சமாக இருக்கிறார்.

வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனம் 2011-ம் ஆண்டு 14 வெவ்வேறு வங்கிகளில் ரூ. 3,420 கோடியை கடனாக பெற்றது. 2013-ம் ஆண்டின் மத்தியில் இந்த நிறுவனம் மோசடி செய்யத் தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம், வங்கிகள் இந்த நிறுவனத்தை வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் என அறிவித்தன.

2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிபிஐ-யும் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவும் அந்த நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தை சோதனை இட்டன.  அந்த புள்ளியிலேயே புலனாய்வு நிறுத்தப்பட்டது, மத்தியில் அரசும் மாறியது. வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஜதின் மேத்தா, கவுதம் அதானியின் நெருங்கிய உறவினர்.  கவுதம் அதானி மோடிக்கு நெருக்கமானவர் என உலகறியும். வின்சம் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை தற்போது ரூ. 7000 கோடியைக் கடந்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன், ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருவாய் 16,000 மடங்கு உயர்ந்தது. நிறுவனங்களின் பதிவேட்டில் அளித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்தது.

ஜெய் ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2012-2013ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.6230 நட்டம் என்றும், 2013-2014-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.1724 நட்டம் என்றும் கணக்குக் காட்டி இருந்தது. மோடி ஆட்சி அமைத்த 2014 – 2015-ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் மொத்த வருமானம் ரூ.50,000 என்றும் அதில் இலாபம் ரூ.18,728 என்றும் கணக்குக் காட்டி இருந்தது. அதிலும் கடந்த 2015- 2016-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் திடீரென ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் அவரது நிறுவனத்தின் வருமானம் 16,000 மடங்கு உயர்ந்திருக்கிறது.

டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை, விவசாய விளைபொருட்கள் விற்பனை நிறுவனமாகப் பதிவு செய்துள்ளார் ஜெய் ஷா. கடந்த 2015- 2106-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் கே.ஐ.எஃப்.எஸ். என்ற வங்கியல்லாத நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.15.78 கோடி கடன் பெற்றிருக்கிறது. இந்த நிதி நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ள ராஜேஷ் கந்த்வாலா நடத்திவருகிறார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். ஜெய் ஷா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.1.4 கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்நிறுவனத்தின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஏப்ரல் 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரஞ்சு விமான கட்டுமான நிறுவனமான டஸால்ட் நிறுவனத்திலிருந்து இந்தியா தயார் நிலையில் 36 ராபேல் போர் விமானங்களை வாங்கும் என அறிவித்தார். அசலான திட்டம் என்னவெனில், 18 தயார் நிலையில் இருக்கும் விமானங்களையும் 108 விமானங்களை உதிரி பாகங்களாக வாங்கி இந்திய நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தில் பொருத்துவது என்பதாகும்.

ஆனால், நவம்பர் 2016-ம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பிரெஞ்சு நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பாரீசில் பிரதமர் அறிவிப்பு சில வாரங்கள் முன்புதான், அதாவது மார்ச் 2015-ம் ஆண்டுதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஏவியேஷன் ஏப்ரல் 24, 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

  1. 126 விமானங்களுக்குப் பதிலாக 13 விரிவாக்க வசதிகள் செய்யப்பட்ட 36 விமானங்கள், ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41.42% உயர்வுடன் வாங்கப்படும்.
  2. பாதுகாப்பு துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த பேரம் பேசும் குழு விரிவாக்கப்பட்ட வசதிகளின் காரணமாக உயர்த்தப்பட்ட அதிக விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  3. இவர்கள் பேரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, பிரதமர் அலுவலகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பேரத்தில் ஈடுபட்டதை இந்தக் குழு கடுமையாக எதிர்த்தன.
  4. ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலை தடுக்கும் விதிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் விதிகளும் மீறப்பட்டதோடு, ஒரு கடிதம் இருந்தால் போதும் என்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டன.
  5. இந்த ஒப்பந்த பண பரிமாற்றத்தை கண்காணிக்கும் வகையில் பிரெஞ்சு அரசு காப்போலை கணக்கு எதையும் தொடங்கவில்லை.
  6. பேரம் பேசும் குழுவில் இருந்த பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள், ஐ.மு.கூ அரசின் 126 ஜெட் விமாங்களை வாங்கும் ஒப்பந்தத்தைவிட, நரேந்திர மோடி அரசின் 36 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் சிறப்பானதல்ல என்ற முடிவை தெரிவித்தனர்.  அதோடு, 36 விமானங்களில் முன்னதாக 18 விமானங்கள் தயாரித்து அனுப்பும் காலமும் முந்தைய ஒப்பந்தத்தை விட அதிகமானது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
  7. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் வகையில் விமானங்களை வாங்கும்போது தொழிற்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும் கைவிடப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவை வலுப்படுத்தும் வாய்ப்பை தவற விட்ட நிலையில் ‘மேக் இன் இந்தியா’ என்பது வெற்று முழக்கமாகிவிட்டது.

IL&FS Ltd என்ற நிறுவனம் கட்டுமானம், நிதி மற்றும் சமூக, சுற்றுச்சூழல் சேவைகளை முதலீடுகளை அளித்துவரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரூ. 91,000 கோடி கடனில் தத்தளிக்கிறது. அரசு துறை வங்கிகளிடம் ரூ. 57,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது இந்நிறுவனம். செபி, ரிசர்வ் வங்கி, அரசு போன்றவை இந்த பிரச்சினையை தீர்க்க முடியாமல் தள்ளாடுகின்றன.  பரஸ்பர நிதியில் முதலீடு செய்தவர்களும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களும் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்னர் பாஜக மிகப் பெரும் தொகை மதிப்பிலான நிலத்தை பதிவு செய்துள்ளது.  பீகாரின் பாஜக தலைவர்களால் இதுபோன்ற 10 பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பதிவுகள் பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயரில் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளின்படி, அவசர கதியில் நிலங்களை வாங்க பாஜக முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. ரு. 8 லட்சத்திலிருந்து ரூ. 1.16 கோடி மதிப்பிலான நிலம் வரை முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2016 காலக்கட்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் ராஸ்நெப்ட் என்ற எண்ணெய் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கியுள்ளன. ராஸ்நெப்ட் நிறுவனம் குஜராத்தில் உள்ள எஸ்ஸார் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை வாங்கியுள்ளது. எஸ்ஸார் எண்ணெய் நிறுவனம் கடனில் மூழ்குவதை காப்பாற்றும் பொருட்டு இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் லிமிடெட் (DHFL) நிறுவனம், மக்களின் பணமான ரூ. 31,000 கோடியை அமைப்பாக்கப்பட்ட முறைகேட்டின் மூலம் அபகரித்துக்கொண்டது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 8,795 கோடி மட்டுமே. ஆனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ. 96,880 கோடியை கடனாக பெற்றது இந்நிறுவனம். 32 அரசு வங்கிகளிடமும் ஒரு தனியார் மற்றும் ஐந்து வெளிநாட்டு வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளது.

இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவெனில், தனது முறைகேட்டை மறைக்க பாஜகவுக்கு இந்த நிறுவனம் ரூ. 19.5 கோடியை நிதியாகக் கொடுத்துள்ளது. இதில் பெரும் இழப்புகளை சந்தித்தது அரசு வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், பாங்க் ஆஃப் பரோடாவுமே. முறையே ரூ. 11,000 கோடி, ரூ. 4,000 கோடியை இந்த வங்கிகள் கடனாக கொடுத்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 380 கி.மீ. தள்ளியிருக்கிறது மாலி கிராமம். அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி பவர் லிமிடெட் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கான கட்டுமான பணிகளை 2000 ஏக்கரில் தொடங்க நினைத்தது. அதில் மாலி உள்ளிட்ட ஒன்பது கிராமங்களும் தனியார் மற்றும் அரசு சொந்தமான நிலங்களும் அடங்கும்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைக் கொண்டு கட்டாவில் 1600 மெகா வாட் மின் திறன் கொண்ட மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. திட்டம் நிறைவேற்றப்படும்போது, இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை உயர் அழுத்த கம்பிகள் மூலம் வங்காள தேசத்துக்கு அதானி குழுமம் விற்கும்.

இதற்காக ஜார்க்கண்ட் அரசு தனது மின்சார கொள்கையை அக்டோபர் 2016-ம் ஆண்டு மாற்றியமைத்து, அதானியிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டது. அந்த அரசின் தணிக்கையாளர்களாலேயே இது ‘முன்னுரிமை அளித்தல்’ என குறிக்கப்பட்டு, இந்த திட்டத்தால் ரூ. 7,410 கோடி அதானி குழுமம் ஆதாயம் அடையும் என்றனர்.

நரேந்திரமோடி வங்காள தேசத்துக்கு ஆகஸ்ட் 2015-ம் ஆண்டு பயணம் சென்று திரும்பியவுடன், இந்த திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டது. மின்சாரத்தை விற்பனை செய்யும் அஜெண்டாவுடன் மோடியுடன் பயணித்த தொழிலதிபர்களுள் அதானியும் ஒருவர்.

கார்ப்பரேட்டுகளின் ‘காவலனாக’ மோடி தனது ஐந்தாண்டுகளில் ஆற்றிய கடமைகள் ஒருசிலவற்றை மட்டுமே மேலே தொகுத்திருக்கிறோம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால்  நாட்டின் பெரும்பகுதியான மக்கள் சார்ந்திருந்த சிறு, குறு தொழில்களை அழித்த மோடி அரசு,  பெரு நிறுவனங்களுக்கு நாட்டையே பட்டா போட்டு கொடுத்திருக்கிறது. இது காவல்கார அரசு அல்ல, கொள்ளையடிக்கும் அரசு.

கலைமதி


தவறாமல் பாருங்கள்…

பெரிய சிலை பட்டேலு உள்ள பாத்தா ரஃபேலு

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க