நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : மோடிக்கு பாஜகவின் ஒரு தலைவர் கடிதம் !
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ‘ரே-பெரலி’ தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கியவரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பிரதமருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மோடியை நன்றிகெட்டவர் எனக் குற்றம் சாட்டும் அஜய் அகர்வால், தனது கடிதத்தில், “குஜராத் தேர்தல் நடந்த காலத்தில், ஜங்புராவில் உள்ள மணிசங்கர் ஐயரின் இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய சந்திப்பை நான்தான் அம்பலப்படுத்தினேன். நான் அவ்வாறு செய்திராவிடில், பாஜக அந்த தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கும்.” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “பிரதமர் மோடி தனது தேர்தல் பேரணிகளில், இந்த சந்திப்பை தேசிய பாதுகாப்போடு இணைத்துப் பேசினார். இதன் காரணமாகத்தான் தோல்வியைச் சந்திப்பதற்குப் பதிலாக குஜராத் தேர்தல்களில் வெற்றி பெற முடிந்தது.” என்றார்.
படிக்க :
♦ பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
இதன் மூலம் பாஜகவின் குஜராத் தேர்தல் வெற்றியில் தமது பங்களிப்பை சங்க பரிவாரத்தின் பல தலைவர்களும், அங்கீகரித்துள்ளனர் என்றும் கூறுகிறார் அனில் அகர்வால். அதற்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே தம்மிடம் பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அஜய் அகர்வால், கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ரே பெரலியில் போட்டியிட்டார். பாஜக-விலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டவர்களிலேயே அதிக வாக்குகள் பெற்றவர் அவர். இருப்பினும், இந்தமுறை அவருக்கு ரே பெரலியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
आरएसएस के सह-सरकार्यवाह श्री दत्तात्रेय होसबोले व रायबरेली लोकसभा से 2014 में भाजपा प्रत्याशी रहे सुप्रीम कोर्ट एडवोकेट अजय अग्रवाल की ऑडियो क्लिपिंग |https://t.co/Q9XHQaCWye
— Ajay Agrawal (@AJAY_K_AGRAWAL) April 10, 2019
அஜய் அகர்வால், மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் பாஜக சொல்லிக் கொள்வது போல 400 இடங்களைக் கைப்பற்ற முடியாது என்றும், 40 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள தயாராக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 28 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எனக்குத் தெரியும். பாஜக அலுவலகத்தில், நூற்றுக்கணக்கான தடவை நாங்கள் இணைந்து உணவு அருந்தியிருக்கிறோம். மோடியால் இப்போது நான் நடத்தப்பட்ட விதத்தில் இரட்டைத்தன்மை இருக்கிறது”.
“ரே பெரலியில் நடந்த தேர்தல் வரலாற்றில் பாஜகவிற்கு மிக அதிகமாக சுமார் 1,73,721 ஓட்டுக்கள் பெற்றுத் தந்து, (ராஜுவ்) காந்தி குடும்பத்தின் கோட்டையில் பாஜகவுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறேன்.” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கடிதத்திலேயே கடந்த காலத்தில் பல்வேறு பாஜக வேட்பாளர்கள் அத்தொகுதியில் பெற்ற குறைவான ஓட்டுக்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “கறைபடிந்த பின்னணி கொண்ட வேட்பாளர் ஒருவர் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் கண்டிப்பாக 50,000 ஓட்டுக்களைத் தாண்டி பெற முடியாது” என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல்ரீதியாக அத்வானி தியாகம் செய்யப்பட்டார் என்று குற்றம்சாட்டுகிறார் அகர்வால்.
“நாட்டு மக்கள் அனைவரும் அத்வானி, ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் குஜராத் தேர்தலில் தோல்வியின் அறிகுறிகள் கண்கூடாக தெரிந்ததன் விளைவாக, ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் கோலி சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.” என்கிறார் அகர்வால்
குஜராத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, மூன்று மூத்த பாஜக தலைவர்கள், “ஏன் இவ்வாறு குஜராத்தில் இவர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். இதில் தோல்வியடைந்திருந்தால் இவர்களின் (மோடி, அமித்ஷா) ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். தவறு செய்து விட்டீர்கள்” என்று தன்னைக் கடிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், “அவர்கள் அனைவரும் நான் மோடிக்காக மிகப்பெரிய வேலையைச் செய்திருக்கிறேன் என்றனர். ஆனால் அவர் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கமாட்டார் என்றும் கூறினார்கள்” என்று கூறியிருக்கிறார் அகர்வால்.
மோடிக்கு எழுதிய தனது கடிதத்தில், “பணமதிப்பழிப்பு சமயத்தில் கீழ்மட்டத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்து பல கடிதங்கள் மூலம் உங்களது கவனத்திற்குக் கொண்டு வர முயற்சித்தேன். ஆனால் அதனை விசாரிப்பதற்குப் பதிலாக, என் மீது உங்கள் கோபத்தைக் குவித்தீர்கள். நீங்கள் என்னைப் போலவே பிற பாஜக ஊழியர்களை அடிமையாக பயன்படுத்தினீர்கள். நாங்கள் உங்களது முறைகேடுகளால், எங்கள் வீடுகளை விட்டுவிட்டு நாளொன்றுக்கு 24 மணிநேரம் உழைத்தோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையை நீங்கள் கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
படிக்க:
♦ உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
மேலும், “நீங்கள்தான் (மோடி) இந்த நாட்டிலேயே மிகவும் அறிவார்ந்த நபர் மற்றும் உங்களுக்கு எவ்வித ஆலோசனையோ உதவியோ யாரிடமிருந்தும் தேவையில்லை. அதனால்தான் நீங்கள் பணமதிப்பழிப்பை யாரையும் கலந்தாலோசிக்காமல் மக்கள் மீது திணித்தீர்கள். அரசாங்கம் தயாராக இல்லாத சூழலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நிர்பந்திக்கப்பட்டனர். பலரும் மரணமடைந்தனர். பணமதிப்பழிப்பின் காரணமாக குறைந்தது ரூ. 5 லட்சம் கோடியாவது திரும்பாது என்று நினைத்தீர்கள். ஆனால் 99 சதவீத பணம் உள்ளே வந்துவிட்டது. மிக அதிகமான கள்ளப்பணம் சில நபர்கள் மூலம் வங்கிகளின் கூட்டோடு மாற்றப்பட்டன. அது குறித்து எந்த ஒரு விசாரணையும் விளக்கமும் இன்றுவரை கொடுக்கப்படவில்லை” என்றும் மோடியைக் குற்றம் சாட்டியிருக்கிறார் அகர்வால்.
அகர்வாலின் இந்தக் கடிதம் குறித்து தி வயர் இணையதளம் அவரிடம் கேட்கையில், “பணமதிப்பழிப்பு சமயத்தில் பாஜக ஊழியர்கள் விதிமீறி செயல்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பணமதிப்பழிப்பு முடிவே மிகவும் முட்டாள்தனமானது” என்றார் அகர்வால். கட்சியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அகர்வால், “கட்சி யாருடைய சொத்தும் அல்ல. நான் அங்கிருந்து விலகப் போவது இல்லை” என்று பதிலளித்தார்.
அஜய் அகர்வால் சொன்னதுபோல சட்டப்படி நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 சீட்டுகள் கூட மோடி வென்றிருக்க முடியாது என்பது உண்மைக்கூட இருக்கலாம். ஆனால் அந்த நேர்மையான தேர்தல் என்பதை கானல் நீராகக் கூட காண முடியாத நிலையில்தான் இன்று இந்த நாடு நின்று கொண்டிருக்கிறது !
நந்தன்
நன்றி : தி வயர்