சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 11
காட்சி : 16
இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, கேசவப்பட்டர், பாலச்சந்தரர்.
(காகப்பட்டர் சுவடியைப் பிரித்துப் பார்த்து விட்டுப் பிறகு)
காகப்பட்டர் : டே ரங்கு! இங்கே வாடா!
ரங்கு : ஸ்வாமி கூப்பிட்டேளா?
காகப்பட்டர் : ஆமாண்டா முன்பு உனக்கு ஒரு பைத்தியக்காரச் சந்தேகம் மனதை குடைஞ்சிண்டிருந்துதே.
ரங்கு : அதுவா ஸ்வாமி? தங்களுடைய வியாக்யானத்தைக் கேட்ட பிறகு சந்தேகம் பஞ்சு பஞ்சாய்ப் பறந்தே போச்சு.
காகப்பட்டர் : போய்விட்டதல்லவா? அப்படிப்பட்ட மேன்மையான, மகிமையான வாழ்வு நம்முடையது என்பதைத் தெரிந்து கொள்ளாதவா நம்ம குலத்திலே அத்தி பூத்தது போலத் தான். உன் போல மண்டுகள் அதிகம் கிடையாதுடா.
ரங்கு : ஸ்வாமி! அடிக்கடி மண்டூ, மண்டூண்ணு என்னைச் சொல்லி …
காகப்பட்டர் : கேலி செய்கிறேனேன்னு கோபமா? பைத்தியக்காரா! உன் மேலே உள்ள அபாரமான ஆசையினாலே அது போலச் சொல்றேண்டா. வேறொண்ணுமில்லே. அது சரி! நம்ம சாஸ்திராதிகளைப் படிக்கிறியே, அது புரியறதோ நோக்கு.
ரங்கு : என்ன ஸ்வாமி இது? சாட்சாத் காகப் பட்டருடைய பிரதம சீடனாக இருக்கேன். என்னைப் போய் சாஸ்திரம் புரியறதான்னு கேட்கறதுன்னா..
காகப்பட்டர் : மத்தவா கேட்டா சொல்லுடா இதை இப்ப கேட்கறது நானல்லவோ. சாஸ்திராதிகள் புரியறதோ?
ரங்கு : ஆஹா ! நன்னா புரியறது. மத்தவாளுக்குப் புரியவைக்கவும் முடியறது.
காகப்பட்டர் : சம்சயங்கள் ஏற்பட்டால் விளக்க முடியுமோ?
ரங்கு : ஏதோ எனக்குத் தெரிந்த அளவிலே…
காகப்பட்டர் : சரி பதி பக்தியின்னா அதற்கு என்னடா பொருள் ?
ரங்கு : தன்னுடைய பதியிடம் பக்திப் பூர்வமாக நடந்து கொள்வது என்று பொருள்.
காகப்பட்டர் : அதுதானே?
ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அதுதான்! ஏதேனும் விசேஷமான பொருள் உண்டோ ஒரு சமயம் ?
காகப்பட்டர் : பதிபக்தி தன்னுடைய புருஷனிடம் மாறாத குறையாத பக்தியுடன் நடந்து கொள்வதுதான். இதோ பார். துரோபதைக்குப் பதிகள் ஐவர். பதிபக்தி தத்துவத்தின்படி துரோபதை ஐவருக்கும் கட்டுப்பட்டு – பய பக்தியுடன் விஸ்வாசதோடு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா !
ரங்கு : ஆமாம்
சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….
காகப்பட்டர் : இப்படி ஒரு சம்பவம் நேரிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசித்துப்பார். தர்மன் தன்னோடு தேவாலயம் வரும்படி அழைக்கிறான்; அர்ச்சுனனோ ஆரணங்கே! ஆடிப்பாடி மகிழலாம் வா , நந்தவனத்துக்கு என்று அழைக்கிறான்; பீமனோ அருமையான காய்கறிகளைக் கொண்டு வந்து எதிரே கொட்டி விட்டு, பதிசொல் கடவாத பாவாய்! உடனே சமைத்துப்போடு , அகோரமான பசி எனக்கு என்று வற்புறுத்துகிறான். நகுலன் நாட்டியம் பார்க்கக் கூப்பிடுகிறான். சகாதேவன் சொக்கட்டான் ஆடக் கூப்பிடுகிறான் என்று வைத்துக் கொள். துரோபதை பதிபக்தியைக் காப்பாற்றியாக வேண்டும். பதிகளோ ஐவர் . என்னடா செய்வது?
ரங்கு : சிக்கலாக இருக்கே ஸ்வாமி !
காகப்பட்டர் : என்னடா செய்யலாம். ஒரு புருஷனை மணந்து கொண்ட நிலையிலே உத்தமிகள் மொத்தக் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். துரோபதைக்கோ..
ரங்கு : ஐவர் கணவர். அவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்யச் சொல்லி தேவியை அழைக்கிறா.
காகப்பட்டர் : இதிலே துரோபதை பாரபட்சம் காட்டக் கூடாது.
ரங்கு : ஆமாம் பதி பக்தி கெட்டுவிடும்.
காகப்பட்டர் : தன் பர்த்தாவிலே யாருடைய பேச்சையும் தட்டி நடக்கக் கூடாது.
ரங்கு : ஆமாம் கஷ்டமாய் இருக்கே ஸ்வாமி?
காகப்பட்டர் : என்னடா இது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைக் காதாலே நீ கேட்கற போதே கலக்கமடையறே. அந்தப் புண்ணியவதி இப்படிப்பட்ட சிக்கல்களை எவ்வளவோ வாழ்க்கையில் கண்டிருப்பா? எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.
ரங்கு : ஆமாம் எப்படி முடிந்தது?
காகப்பட்டர் : நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா. ரங்கு! சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….
படிக்க:
♦ நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !
♦ பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !
ரங்கு : ஆமாம் ஸ்வாமி! திண்டாட்டமாத்தான் இருக்கும்.
காகப்பட்டர் : எவனாவது ஒரு விதண்டாவாதி, நான் கேட்ட இதே கேள்வியை உன்னைக் கேட்கிறான் என்று வைத்துக் கொள்.
ரங்கு : கேட்பா ஸ்வாமி கேட்பா. இப்பவே பலபேர் கேட்டுண்டுதான் இருக்கா.
காகப்பட்டர் : நீ என்ன பதில் சொல்வே?
ரங்கு : நானா?
காகப்பட்டர் : ஆமாம்? பதில் சொல்லாது ஊமையாகி விடுவாயோ?
உன்னை யார் பிறகு மதிப்பா ?
ரங்கு : குருதேவா! நமது புராண சாஸ்திரங்களை நிறைய கரைத்துக் குடித்தவன் என்று கர்வம் கொண்டிருந்தேன். நிஜமாச் சொல்றேன்….. என்னாலே நீங்க கேட்ட சம்சயத்துக்குச் சமாதானம் கூறச் சக்தியில்லே .
காகப்பட்டர் : ஐவருக்கும் பத்தினி பதிபக்தியும் தவறக் கூடாது.
ரங்கு : ஆமாம்! பழச் சாறும் பருக வேணும்; பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்கே.
காகப்பட்டர் : பைத்தியக்காரா இப்படிப்பட்ட சிக்கலான சமயத்திலே துரோபதை ‘ஏ’ கண்ணா உன்னையன்றி வேறு கதி ஏது. என் கற்பும் கெடலாகாது; ஐவருக்கும் மனம் கோணலாகாது என் செய்வேன் என்று பஜித்தாள். அந்த சமயத்திலே கோபால கிருஷ்ணன் குழலை ராதையின் கிரகத்திலே வைத்து விட்டு , ருக்மணியின் இல்லம் வந்திருக்க, ருக்மணி, நாதா தங்களுடைய மதுரமான குழலைக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிற சமயம் பரந்தாமன் சிரித்தார். சிரித்துவிட்டு, கீழே கிடந்த மலரை எடுத்து ஐந்து பாகமாக்கி ஆகாயத்திலே வீசினார். உடனே ஐயனின் அற்புதத்தை என்னென்பது? தருமருடன் தேவாலயம் செல்ல துரோபதை அர்சுனனுடன் நந்தவனத்தில் துரோபதை. பீமனுடன் சமையலறையில் துரோபதை. சகாதேவனுடன் துரோபதை. இவ்விதமாக ஐந்து பேருடனும் ஏக காலத்திலே துரோபதை சென்ற அற்புதம் நிகழ்ந்தது.
ரங்கு : ஆஹா, அருமை அருமை குருதேவர்.
காகப்பட்டர் : பதிபக்தியும் நிலைத்தது; சிக்கலும் தீர்ந்தது அல்லவா?
ரங்கு : ஆமாம்
காகப்பட்டர் : எப்படி ?
ரங்கு : கண்ணன் அருள்!
காகப்பட்டர் : புத்திக்கூர்மை வேண்டுமடா புத்தி தீட்சண்யம் வேண்டும். நமது புராணதிகளிலே ஏதேனும் சந்தேகம் எவனுக்கேனும் பிறந்தால், உடனே புத்தி தீட்சண்யத்தை உபயோகித்து, இப்போது நான் சொன்னது போல ஒரு விளக்கக் கதை கட்ட வேண்டும். உடனே தயங்காமல்.
ரங்கு : ஸ்வாமி! இது தாங்கள் கட்டிய கதைதானா?
காகப்பட்டர் : ஆமாம்! கட்டப்படாதோ? என்னடா இது? வியாசர் பாரதம் செய்தார். நான் துரோபதம் எனும் புதிய காவியத்தைச் செய்து காட்டினேன். தவறோ?
ரங்கு : தவறோ, சரியோ ஸ்வாமி. பிரமாதமா இருக்கு வியாக்யானம். விசித்திரமானதா இருக்கு..
காகப்பட்டர் : நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அனந்தம். அவைகளிலே ஏதேனும் எவருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டு பழிச்சு பேசினா, ரங்கு! அவாளிடம் வீணான விவாதம் பேசிண்டிருக்கப்படாது. ஆண்டவனுடைய லீலைகள், விசித்திரம் அனந்தம். சாமான்யாளாகிய நம்மால் அவைகளின் முழு உண்மையை, ரகசியத்தின் மகிமையைத் தெரிந்துக் கொள்வது முடியாத காரியம் என்று சொன்னால்
தீர்ந்தது.
ரங்கு : ஆமாம்! புண்ணிய ஏடுகளைச் சந்தேகிப்பது பாபம் என்பதிலே பாமரனுக்கு நம்பிக்கை இருக்கிற வரையிலே . ..
காகப்பட்டர் : நமது யோகத்துக்கு ஈடாக வேறெதுவும் இராது !
ரங்கு : ஸ்வாமி! யாரோ வரா. நம்மவா போலயிருக்கு. யாரா இருக்கும்?
(கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வருதல், காகப்பட்டரிடம் ஒலையைத் தர, அதைப் படித்தான பிறகு…)
காகப்பட்டர் : மராட்டிய மண்டலத்து மறையோர்களே! மட்டற்ற மகிழ்ச்சி உமது தூதால் எனக்கு உண்டாகிறது.
கேசவப்பட்டர் : நாங்கள் வந்திருக்கும் காரியத்தைப் பற்றியல்ல ஸ்வாமி நாங்கள் மகிழ்வது; எப்படியோ ஒன்று, தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிடைத்ததே, தன்யாளானோமே என்பதைப் பற்றியே பரம சந்தோஷம் எங்களுக்கு.
பாலச்சந்திரப் பட்டர் : ஆரியகுலத் தலைவரின் ஆஸ்ரமத்தைக் கண்டு தரிசிக்கும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று ஆயாசப்படும் ஆரிய சோதராள் மராட்டிய மண்டலத்திலே அனந்தம்.
காகப்பட்டர் : அப்படியா? மெத்த சந்தோஷம்.
கேசவப்பட்டர் : ஸ்வாமி! எங்கு பார்த்தாலும் அகாரியாளுடைய செல்வாக்கே பரவிண்டு இருக்கும் இந்தச் சமயத்திலே, அகாரியாளுடைய ராஜ்யங்களே தலை தூக்கிண்டு ஆடும் இந்தக் காலத்திலே, புனிதமான கங்கைக் கரையிலே, கைலாயமோ, வைகுந்தமோ என்று யாவரும் வியந்து கூறத்தக்க வகையிலே இந்த மகோன்னதமான ஆஸ்ரமத்தை அமைத்துண்டு ஆரிய தர்மத்தை அழியாது பாதுகாத்து வரும் தங்களைக் கலியுக பிரம்மா என்றே நாங்களெல்லாம் கொண்டாடுகிறோம்.
காகப்பட்டர் : நமக்குள்ளாகவோ இவ்வளவு புகழ்ந்து கொள்வது? நாம் ஒரே குலம், ஒரே சதை, ஒரே ரத்தம்.
கேசவப்பட்டர் : அப்படி சொல்லிவிடலாமோ? ஆரிய குலம்தான் நாங்களும், இன்னும் அநேகர். ஆனால் என்ன கெதியில் இருக்கிறோம் மராட்டிய மண்டலத்திலே? எமக்கு மதிப்பு உண்டோ ! மார் தட்றா ! மராட்டிய ராஜ்யம் ஸ்தாபித்தாளாம். அவாளுடைய வீரத்தால்தான் விடுதலை கிடைத்ததாம்.
பாலச்சந்திரப் பட்டர் : விதண்டாவாதிகள் நமது சாஸ்திரத்தைக் கேலி செய்றா.
காகப்பட்டர் : அப்படியா அவ்வளவு மூடுபனியா அங்கு? அஞ்ச வேண்டாம், அங்குள்ள அஞ்ஞானத்தைப் போக்குவோம். மேலும் கேசவப்பட்டரே தாங்கள் கொண்டு வந்துள்ளது ஓலை அழைப்பு அல்லவா? ரங்கு நம்மை அழைக்கிறார்கள், மராட்டிய மண்டலத்துக்கு வந்து போகும்படி.
ரங்கு : நம்மையா ஸ்வாமி உபன்யாசங்க புரியவா?
மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.
காகப்பட்டர் : அசடே அதற்கல்ல. மராட்டிய மண்டல மாவீரன் சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்ள வேணுமாம். அதனை நடத்திக் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறாளடா.
ரங்கு : நம்மை காசியிலிருந்து மராட்டியத்துக்கு! தங்கள் கீர்த்தி, குருஜீ அவ்வளவு தூரம் பரவி இருக்கிறதா?
கேசவப்பட்டர் : கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கணும். இது விஷயமா ஆனந்தப்படுறதும் பெருமையா நினைக்கிறதும் மட்டும் போதாது.
காகப்பட்டர் : டே, ரங்கு பேசாம இருடா… பெரியவா சூட்சமம் இல்லாம பேசமாட்டா.
கேசவப்பட்டர் : மராட்டியத்துக்கு இப்ப உங்களை அழைக்கிறதிலே ஒரு சூட்சமம் இருக்கத்தான் செய்கிறது. சிவாஜி மாவீரன் சந்தேகமில்லே. இருந்தாலும் நாமோ வில் வீரன் ஸ்ரீராமச்சந்திரன் காலம் முதற்கொண்டே ஏன், அதற்கு முன்னாலே இருந்தே கெளரவிக்கப்பட்ட குலம்.
காகப்பட்டர் : ஆமாம் அதிலே என்ன சந்தேகம். யுகயுகமாக நிலைத்து நிற்கும் உண்மையல்லவோ அது!
கேசவப்பட்டர் : அப்படித்தான் ஐதீகம். ஆமாம், மராட்டியத்திலே எமக்கு இப்போ மதிப்பு கிடையாது.
காகப்பட்டர் : அப்படியா?
கேசவப்பட்டர் : ஆமாம் சில பேர் நாம் ஆதிக்கம் செலுத்துவது கூடாதுங்கறா! ஏன் என்றால் யுத்தத்திலே சேர முடியாதவான்னு கேலியும் பேசறா.
காகப்பட்டர் : அப்படிப்பட்ட அஞ்ஞானிகளும் அங்கே இருந்திண்டிருக்காளோ?
ரங்கு : தாங்கள் போனால் சூரியனைக் கண்ட பனி போல் அஞ்ஞானிகள் இருக்குமிடம் தெரியாம போயிடுவா.
கேசவப்பட்டர் : மராட்டிய வீரர்களிலே ஒரு தந்திரசாலி தான் எங்களைத் தூது அனுப்பியவன். பெயர் சிட்னீஸ். காயஸ்தகுலம் அவன். எப்படியாவது காகப்பட்டரை வரவழைக்க வேண்டுமென்று திட்டம் போட்டவன்.
காகப்பட்டர் : ஏன்?
கேசவப்பட்டர் : சிவாஜியின் பட்டாபிஷேகம் தாங்கள் வராவிட்டால் நடைபெறாதே.
கேசவப்பட்டர் : ஆமாம்.
காகப்பட்டர் : பக்கத்து அரசனோ ?
கேசவப்பட்டர் : இல்லை, உள் நாட்டிலே நாங்கள்தான் எதிர்த்தோம். சிவாஜி சூத்திரன். அவன் எப்படி க்ஷத்திரிய தர்மப்படி ஜொலிக்க ஆசைப்படலாம்? சாஸ்திரம் சம்மதிக்குமோ? வேத விதிப்படியா? என்றெல்லாம் எதிர்த்தோம்.
காகப்பட்டர் : ஓகோ! இந்த ஓலையிலே அது பற்றி ஒன்றையும் காணோமே?
கேசவப்பட்டர் : எப்படி இருக்கும்? நாங்கள் தான் எதிர்த்தோம். எங்களையே தூது அனுப்பிவிட்டான். அந்த தந்திரசாலி. தங்கள் சம்மதம் கிடைத்து விட்டால் எங்கள் எதிர்ப்புகளை மட்டம் தட்டிவிடலாம் என்ற நினைப்பு.
காகப்பட்டர் : அப்படிப்பட்ட ஆசாமியா? ரங்கு கொண்டுவா ஏடு.
ரங்கு : ஸ்வாமி நாம் போயி நம்மளவாளுக்கு வேண்டிய சகாயம் செய்து… .. .
படிக்க:
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
காகப்பட்டர் : மண்டு மராட்டியத்துக்கு நாம ஏண்டா போகணும்? கேசவப்பட்ரே! விஷயம் விளங்கிவிட்டது. மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.
கேசவப்பட்டர் : ஓலையே அது போலத் தீட்டினால் …
காகப்பட்டர் : ஆகா! தருகிறேன். கொண்டு போய் வீசும், அவன் முகத்திலே! நமது ஆசியும் ஆதரவும் இல்லாமல் என்ன செய்ய முடியும்.
கேசவப்பட்டர் : அதுமட்டுமில்லை. ஸ்வாமி காகப்பட்டரே, ”முடியாது, பட்டாபிஷேகம் பாப காரியம்” என்று சொல்லி விட்டார் என்பது தெரிந்தால்..
காகப்பட்டர் : பிறகு அவன் பட்டம் சூட்டிக் கொள்ள முடியவே முடியாது.
கேசவப்பட்டர் : பரத கண்டமே அவனைப் பாபி என்று சபிக்கும்.
காகப்பட்டர் : படட்டும்…. ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை! ஒலை தயாரானதும் நீர் புறப்படலாம். இதற்குள் டேய், ரங்கு அவாளுக்குப் பாலும், பழமும் கொடு, சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும்.
(தொடரும்)
நன்றி: Project Madurai
முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்