
உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 8
தடியை முன்னே ஊன்றுவதும் அதன் மேல் மோவாயை அழுத்திக்கொண்டு கால்களை அதனருகே இழுப்பதுமாக இன்னும் இரண்டு சாட்கள் அவன் வெண்பனிப்பாதையில் தளர் நடை போட்டான். பாதங்கள் மரத்துப் போய்விட்டன. அவை எதையும் உணரவில்லை. ஆனால், ஒவ்வோர் அடி வைப்பிலும் உடல் சுரீரென்று வலித்தது. பசியின் கொடுந்தொல்லை அடங்கி விட்டது. வயிற்றில் இசிவும் குடல்வலியும் நின்றுவிட்டது. வெற்றான இரைப்பை கட்டியாகிவிட்டது போலவும் பாங்கின்றி புரண்டு உள்உறுப்புகள் எல்லாவற்றையும் நசுக்குவது போலவும் ஊமை நோவு நிலையாக ஏற்படலாயிற்று.
அலெக்ஸேய் இளைப்பாறும்போது இளம் பைன்மரப் பட்டைகளைக் கட்டாரியால் உரித்து, அவற்றையும் பிர்ச், லின்டன் ஆகிய மரங்களின் இலை மொக்குகளையும் மென்மையான பாசியையும் உணவாகக் கொண்டான். வெண்பனிக்கு அடியிலிருந்து பாசியைத் தோண்டி எடுத்து இராத்தங்கலின் போது கொதிநீரில் வேகவைப்பான். வெண்பனி உருகிய இடங்களில் சிவப்பு பில்பெரிப் புதர்களின் மெருகேறிய இலைகளை சேகரித்து அவற்றால் “தேநீர் தயாரித்துப் பருகுவது அவனுக்கு மிக்க இன்பம் அளிக்கும். சூடான நீர் உடலுக்கு வெப்பம் ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது போன்ற பிரமையைக் கூட உண்டாக்கும். புகை நெடியும் புல் வாடையும் வீசிய அந்தச் சுடு கஷாயத்தைப் பருகி அலெக்ஸேய் எப்படியோ முழு அமைதி அடைவான். இப்போது வழி அவ்வளவு முடிவற்றதாகவும் அச்சுறுத்துவதாகவும் அவனுக்குத் தோன்றியது.
ஆறாவது இரவை அவன் கிளைகள் பரந்த பிர் மர விதானத்தின் அடியில் மீண்டும் கழித்தான். அருகே இருந்த கீல் நிறைந்த பழைய அடிக் கட்டையைச் சுற்றி நெருப்பு மூட்டினான். இந்த அடிக்கட்டை இரவு முழுவதும் கணகணவென்று எரிய வேண்டும் என்று அவன் கணக்கிட்டான். இன்னும் இருட்டவில்லை. பிர்மர உச்சியில் ஓடிச் சாடியது கண்ணுக்குத் தெரியாத அணில். அது கூம்புக் கனிகளைக் கறவித் தோலுரித்தது. வெற்றென பிய்ந்த கூம்புக்கனிகளை அவ்வப்போது கீழே எறிந்தது. அலெக்ஸேயின் மனத்தினாலோ உணவைப் பற்றிய சிந்தனை இப்போது நிலையாகக் குடிகொண்டிருந்தது. எனவே கூம்புக் கனிகளில் அணிலுக்கு என்ன கிடைக்கிறது என்று அறிய அவனுக்கு ஆவல் உண்டாயிற்று. ஒரு கூம்புக் கனியை எடுத்து, கடிபடாத செதில் ஒன்றைப் பிய்த்து அகற்றினான். செதிலுக்கு அடியில் ஒற்றைச் சிறகுள்ள, தினை அளவான விதை இருக்கக்கண்டான். செடார் மரத்தின் மிகச்சிறு கொட்டை போலிருந்தது அது. பற்களுக்கு இடையில் அதை வைத்து நசுக்கினான். செடார் எண்ணெயின் இனிய மணம் வாயில் உண்டாயிற்று.
செதில்கள் விரியாத சில பச்சைப் பிர் கூம்புக்கனிகளைச் சுற்றிலுமிருந்து உடனேயே பொறுக்கிச் சேர்த்து, அவற்றை நெருப்பிற்கு அருகே போட்டு, கிளைகளை நெருப்பில் செருகினான் அலெக்ஸேய். கூம்புக்கனிகளின் செதில் பிரிந்தும் அவற்றிலிருந்து விதைகளைக் குலுக்கி எடுத்தான், உள்ளங் கைகளால் தேய்த்து அவற்றின் சிறகுகளை ஊதிப் போக்கினான், சிறு விதைகளை வாயில் போட்டுக் கொண்டான்.
படிக்க:
♦ வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
♦ சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ
நெருப்பில் இன்னும் சில கிளைகளைப் போட்டுவிட்டு, பிர் கூம்புக்கனிகளை மறுபடி சேகரிப்பதில் முனைந்தான். செடார் எண்ணெயின் மணம் நெடுங்காலமாக அவன் மறந்திருந்த குழந்தை பருவக் காட்சியை அவன் நினைவில் எழுப்பியது…
பழக்கமான பொருள்களால் செம்மை நிறைந்த சிறு அறை. தொங்கும் விளக்கிற்கு அடியே மேஜை. அம்மா உற்சவ உடை அணிந்து சர்ச்சிலிருந்து திரும்பியவள், பெட்டியிலிருந்து காகிதப் பொட்டலத்தை எடுத்து, செடார் கொட்டைகளைத் தட்டில் கொட்டுகிறாள். குடும்பத்தினர் – அம்மா, பாட்டி, இரு அண்ணன்கள், கடைக் குட்டி அலெக்ஸேய் – எல்லோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொள்கிறார்கள் கொண்டாட்ட தின்பண்டமான கொட்டைகளை உடைக்கும் சடங்கு தொடங்குகிறது…
காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின…
பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன்.
காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின. நெருப்பின் பக்கத்தில் அணையும் தருவாயில் கண்சிமிட்டிக் கொண்டிருந்த கங்குகளைச் சிந்தனையுடன் நோக்கியவாறு முடங்கியிருந்தான் பட்டினியான, நோயுற்ற, களைப்பால் செத்துச் சாவடைந்த மனிதன். பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன். இருளில் அவன் முன்னே கண்டுகொள்ளமுடியாத, எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை.
“பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன். தனது ஏதோ பழைய நினைவால் தூண்டப்பட்டு வெடிப்புக்கண்ட உதடுகளால் அவன் புன்னகைத்தது நெருப்பின் கடைசிச் செவ்வொளிர் தென்பட்டது.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை