மோடி அலை எல்லாம் ஓய்ந்துவிட்ட நிலையில், நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் காவி அலையை உருவாக்கும்படி இந்துத்துவ சாமியார்களுக்கு கட்டளையிட்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசுவ இந்து பரிசத்தின் உதவியுடன் இந்த வெளிப்படையான திட்டத்தை பெருந்திரளாக உருவாக்க திட்டமிடுகிறது அக்கட்சி.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது ராமர் கோயிலைக் கட்டுவோம் என அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாத பாஜக மீது இந்துத்துவ சாமியார்கள் அதிருப்தியில் இருந்தனர். இவர்களை அமைதிப்படுத்தும்பொருட்டு, இந்த முறை ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ராமர் கோயிலைக் கட்டுவோம்; அதற்காக தேர்தல் பணி செய்யுங்கள் என சாமியார்களை கேட்டுக்கொண்டுள்ளது சங் பரிவாரம்.
படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !
♦ விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்ஜி மகராஜ் என்ற சாமியார், தங்களைப் போன்ற சாமியாருக்கு உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் நேரடியாக செய்தி அனுப்பியுள்ளதாகவும் இதில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும்கூட, பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம் என வாக்குறுதி அளித்திருப்பதாகவும் கூறுகிறார்.
“ஆர்.எஸ். எஸ்.-உடன் தொடர்புள்ள முக்கியமான சாமியார்கள் அனைவருக்கும் ராஜ்நாத்தின் செய்தி அனுப்பப்பட்டுள்ளது” என்கிற மகராஜ், விஎச்பி-யின் சாமியார்களை மட்டுமே கொண்ட மத்திய குழுவின் உறுப்பினர் ஆவார்.
1992-ம் ஆண்டு முதல் விஎச்பி-யில் இணைந்திருக்கிற மகராஜ், மத்திய பிரதேசத்தின் பழங்குடிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் ‘காவி’ப் பணியைச் செய்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்த்த பிராந்தியத்தின் ஆர்.எஸ். எஸ். பொறுப்பாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் கலந்துகொண்டதாகவும் அதில் ராஜ்நாத்தின் செய்தி உறுதிபடுத்தப்பட்டதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

அடுத்த பாஜக ஆட்சியில் நிச்சயம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற சங் பரிவாரத்தின் உறுதிமொழியை நாட்டின் பிற பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மூலம் இந்துத்துவ சாமியார்கள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறார் மகராஜ்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் உத்திரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த அர்த் கும்பமேளாவை ஒட்டி சாமியார்களை வைத்து இரண்டு நாள் சிறப்பு கூட்டத்தை கூட்டியிருந்தது விஎச்பி. முதன்முறையாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பல சாமியார்கள் புறக்கணித்தனர். ராமர் கோயில் கட்டுவதாகச் சொல்லி தங்களை பாஜக ஏமாற்றிவிட்டதாக புறக்கணிப்புக்கான காரணமாக அவர்கள் சொல்லியிருந்தனர்.
மோடி அலை பல்லிளித்துவிட்ட நிலையில், மக்களை ஒருங்கிணைக்க ‘இந்து’ என்கிற பெரும்பான்மை உணர்வை கட்டியெழுப்பி அதை வாக்கு வங்கியாக மாற்றத் திட்டமிட்டது பாஜக. அந்தத் திட்டத்துக்கு காவி சாமியார்களின் உதவி அவசியம் என்பதால், அவர்களை ‘குஷி’ப்படுத்த ‘ராமர் கோயில்’ அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ள மூத்த தலைவர்கள் இரவும் பகலுமாக சாமியார்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியைச் சேர்ந்த சாமியார் சஞ்சீவி மகராஜ் சொல்கிறார்.
சாமியார்களின் அமைப்பான அகில பாரத சாதுக்கள் சமிதி, நாட்டிலுள்ள இந்துத்துவ தலைவர்கள் அனைவருக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இந்துத்துவ அமைப்புகள் அனைத்தும் வேறுபாடு பார்க்காமல் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 1986-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.-க்காக தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இதன் தற்போதைய தலைவராக உள்ள சரஸ்வதி, 2004-ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்-ஆக பணியாற்றியவர். இவர் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில், சாமியார்கள் தங்களை பின்பற்றும் மக்களிடம் பாஜகவுக்கு ஆதரவளிக்கும்படி கேட்க வேண்டும் என்றும் பாபர் மசூதி இடிப்பினால் இந்த அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை உறுதி செய்ய தாங்கள் எடுத்த முயற்சிகளையும் அந்தக் கடிதம் விவரிக்கிறது.
எந்த அரசியல் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் இந்துக்களை ஒருங்கிணைக்கும்படி வெளிப்படையாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
“முசுலீம்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கும் கட்சியை ஆதரிப்பதா அல்லது ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக நான்கு மாநில ஆட்சியை இழந்த கட்சியை ஆதரிப்பதா என்பதை சாமியார்கள் முடிவு செய்யட்டும்” என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், “அடிமைச் சின்னத்தை, 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி அழித்தபோது, நம்மீது தொடுக்கப்பட்ட குற்ற வழக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட அரசியல் தலைவர்கள், ராமர் கோயிலை கட்டுவதற்கும் பொறுப்பேற்றுள்ளனர்” என முடிகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின்போது அமைச்சரைப் போன்ற செல்வாக்குடன் வலம் வந்த அகிலேஷ்வரானந்த் கிரி என்ற சாமியார், “சாமியார்கள் குழுவாக கிராமம் கிராமமாக சென்று நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார். சாமியார்களின் கூட்டமைப்பு எழுதிய கடிதம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கும் இவர், “இது வேண்டுகோள் அல்ல, மத ரீதியிலான கட்டளை; உண்மையான சாமியார்கள் இதை நிறைவேற்றுவார்கள்” என்கிறார்.
மீண்டுமொரு தேர்தல் வெற்றியின் மூலம் பாஜக அரியணை ஏறினால், அது நாட்டுக்கு எத்தகைய பேரழிவாக அமையும் என்பதை சங்பரிவாரங்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் சொல்கின்றன. வளர்ச்சி முழக்கங்களால் ஒன்றுமே நடக்கவில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கும் மக்கள், பரிவாரங்களின் திட்டங்களுக்கு துணை போக வாய்ப்புகள் குறைவே. ஆனாலும் காவி அலையை உருவாகவிடாமல் தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
கட்டுரையாளர்: Dhirendra K Jha
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : கேரவன்