27.04.2019

பொன்பரப்பியில் தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு  இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டு இருந்தோம். தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தாற்போல  ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள் அனுமதியை மறுத்திருக்கிறது போலீசு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான காரணங்களைக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட இடங்களில் போலீசு கூறியுள்ள காரணங்கள் :

திருச்சி போலீசு கூறியுள்ள காரணம்

“திருச்சிராப்பள்ளி மாவட்ட பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தொகுதி  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக திருச்சிராப்பள்ளி தொகுதியில் 12.04.2019, 13.04.2019, 14.04.2019 ஆகிய நாட்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி மனு வரப்பெற்றுள்ளது.

காவல் துணை ஆணையர் கடிதத்தில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தக்கோரும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தால் மேற்படி தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் மனுதாரர் கோரியுள்ள 9 இடங்களில் 12.04.2019 முதல் 14.04.2019 வரை தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது ”

திருச்சி, விக்னேஷ் ஓட்டல் அருகில் 29.04.109 அன்று மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது போலீசு கூறிய காரணம்

“பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் 23.05.2019 வரை நடைமுறையில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தாங்கள் மனுவில் கோரியுள்ள படி ஆர்ப்பாட்டம் நடத்தும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களுக்கு 29.04.2019-ம் தேதி மாலை 18.30 மணிக்கு திருச்சி ஜங்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.”

சென்னைப்போலீசு கூறியுள்ள காரணம்

“சென்னை நகரில் பொது இடங்களில் குழுமி போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன்படி குறைந்தது ஐந்து தினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் , மனுதாரர் 25.04.2019 அன்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 22.04.2019 அன்று விண்ணப்பித்துள்ளார். நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன்படி ஐந்து முழுதினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரிய மனு பெறப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட காரணத்தினால், பொதுமக்கள் நலன், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தினாலும் மனுதாரர் 25.4.2019 அன்று மாலை 4.00 மணி  முதல் மாலை 5 மணிவரை , நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. ”

தருமபுரி மாவட்டப் போலீசு கூறியுள்ள காரணம்

“தாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது தொடர்பாக பரிசீலனை செய்ததில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதாலும், தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுவதாலும், தாங்கள் 25.04.2019-ம் தேதி மாலை 04.00 மணிக்கு தந்தி அலுவலகம் அருகில் நடத்தக்கோரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.”

விருதாச்சலம் போலீசு கூறியுள்ள காரணம்

“விருதாச்சலம் உதவி கண்காணிப்பாளர் கடிதத்தில் விருதாச்சலம் உட்கோட்ட காவல்நிலைய எல்லைகளில்30(2) காவல் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் உள்ள அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் ஜாதியினருக்கிடையில் கட்சி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும்  கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது என்றும், மேற்படி பொன்பரப்பி பிரச்சினை தொடர்பாக உட்கோட்ட எல்லையான பெண்ணாடம் காவல் நிலைய எல்லை செளந்திரசோழபுரம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையில் ஜாதி மோதல் ஏற்பட்டு வழக்கு பதிவு செய்து,  தற்போது  மேற்படி கிராமம் விருத்தாசலம் காவல்நிலைய எல்லை மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுத்தை சிவகுமார் (எ) சிவக்குமார் வயது 40, த/பெ ராஜாங்கம் என்பவர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சாதியினரைப்பற்றி அவதூறாகப்பேசி காணொலி வெளியிட்டதில் பல்வேறு இடங்களில் சர்ச்சை பரவியதால் மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இரு ஜாதியினருக்கிடையே கருத்து மோதல்கள் உருவாகி மாவட்டத்தில் அசாதாரண  சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது என்றும், எனவே  பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட இயலாது என்று காவல்துறையினரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிக் கொடுத்துக்கொண்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மனுதாரருக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  ”

திருப்பூர் மாவட்டப் போலீசு கூறியுள்ள காரணம்

“தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருவதால் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும்பட்சத்தில் அந்த அமைப்பை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி  இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட  வாய்ப்பிருப்பதாக இரகசிய தகவல் உள்ளதாலும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னதாக காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்படவில்லை என்பதாலும் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள இடம் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இருப்பதாலும், அவ்விடம் பேருந்து நிறுத்தம்  இருப்பதாலும், இரயில் பயணிகள் மற்றும் பேருந்தில் பயணம் செல்வோர் குமரன் சிலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டி இருப்பதால்  பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படும் என்பதாலும், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு மாநகர காவல் சட்டம்1888, சட்டப்பிரிவு 41 அமுலில்  உள்ளதாலும், மேற்படி இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.”

கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்று. மேற்கூறியுள்ளதைப் போன்ற காரணங்களைச் சொல்லி  ஜனநாயக உரிமையை மறுக்கக்கூடாது என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால் எவ்வித சட்டத்துக்கும் உட்படாமல் போலீசு செயல்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசு அதைச்செய்யாமல் குற்றவாளிகளோடு கூட்டு சேர்ந்து இருப்பதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குக் காரணம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது பொய்.

ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒரு காரணத்தைப் புனைந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது  மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டும் அனுமதி கொடுக்கக்கூடாது என்ற நவீன தீண்டாமையை போலீசு நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் பெயர் நீக்கம், வீடு தேடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் வாகனத்தை அடித்து நொறுக்கியது, தலித் மக்களை வாக்களிக்க விடாமல் செய்தது போன்ற எத்தனையோ வன்முறைகளுக்கு மத்தியில் தேர்தல் நிறுத்தப்படவில்லை. அதை நடத்தியே முடித்தது அரசு.  கேட்டால் அது ஜனநாயக கடமை என்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு மட்டும் ஜனநாயக உரிமை இல்லை.  அதை மறுக்கும் இந்த போலீசுக்கும் பொன்பரப்பியில் தலித் மக்களை ஓட்டுப் போடவிடாமல் தடுத்தும் தாக்குதல் நடத்தியும்  அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தவர்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

படிக்க:
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

விவசாயியின்  வாழ்வை அழிக்கும் ஹைட்ரோகார்பன், கெயில் – மீனவர்களின் வாழ்வை அழிக்கும் சாகர் மாலா- மாணவர்களின் வாழ்வை அழிக்கும் நீட் – வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வை அழித்த ஜிஎஸ்டி, சிறுபான்மை தலித் மக்களை கொன்றுகுவிக்கும் காவி பாசிசம் இப்படி எதையும் பேசக்கூடாது என்கிறது போலீசு.

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது. இந்த அராஜகத்துக்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டு போராடுவதே இப்போது நம் முன் உள்ள கடமை.


தோழமையுடன்,
சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க