அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 3

வார்த்தைகளின் படிகத்தன்மை தொடர்ச்சி …

தேம்பியழுதபடியே தன்னைப் பள்ளியிலிருந்து விரட்ட வேண்டாமெனக் கெஞ்சிய சூரிக்கோ என்ற சிறுவனோ குழந்தைக்கே உரிய தாராள மனப்பாங்குடன் என்னை இரண்டு கரங்களாலும் கட்டிப் பிடித்தபடி, முப்பத்தெட்டு குழந்தைகளிலேயே முதலாவதாக, தன் வாழ்வின் முதல் பாடவேளையிலேயே என்னை மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தான். நான் பின்னால் மற்ற எல்லாக் குழந்தைகளிடமும் இதையே தான் எதிர்பார்க்க ஆரம்பிப்பேன். ”மாமா, நீ நல்ல ஆசிரியர். எனக்கு உன்னைப் பிடித்துள்ளது” என்று அச்சிறுவன் என் காதில் முணுமுணுக்கிறான்.

இதற்குப் பின் கெட்ட ஆசிரியராக இருக்க முடியுமா என்ன!

இவ்வளவு தாராளமாக, நம்பகமாக, எதிர்பாராவிதமாக, இன்னும் நான் ஒன்றும் சாதித்து விடும் முன்னராகவே நீ ஏன் என் மீது உன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாய்? நிச்சயமாக, உனக்கேற்ற ஆசிரியராக இருக்க நான் மிகவும் பாடுபடுவேன், முயற்சி செய்வேன், உன்னுடைய நம்பிக்கைகளை மெய்ப்பிப்பதற்காக நான் இரவும் பகலும் உழைப்பேன், உனக்காக உன்னோடு சேர்ந்து வளருவேன். சரி, துவக்கத்திலேயே, உனது பள்ளி வாழ்க்கையின் முதல் நிமிடங்களிலேயே எனது ஆசிரியர் மனசாட்சியின் தூய்மைக்கான பொறுப்பை ஏன் என் மீது சுமத்துகிறாய்!

இத்தருணத்தில் குழந்தைகள் என்னைப் பார்க்காமல் இருந்தால் நல்லது .

”பெஞ்சைப் பார்த்து தலையைக் குனியுங்கள்…. கண்களை மூடுங்கள்!… உங்களுக்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கக் கூடிய ஏதாவது ஒன்றை, உங்கள் குறும்புகளில் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்.”

நான் சுதாரித்துக் கொண்டு, குழந்தைகள் தம் தலையைக் கரங்களால் பிடித்துக் கொண்டு, கண்களை இறுக்க மூடியபடி தம் குறும்புகளை நினைத்துக் கொள்வதைப் பார்க்கிறேன். சத்தம் போடாமல் மெதுவாக குழந்தைகளின் வரிசைகளிடையே நடந்தபடியே கிசுகிசு வெனச் சொல்கிறேன்:

”பெரும் சிரிப்பேற்படுத்தக் கூடியதை…. உங்களது குறும்புகளிலிருந்து…. சிரிப்பானவற்றை… இடைவேளையின் போது எனக்கு அவற்றைச் சொல்லுங்கள்…”

திடீரென ஒரு சலசலப்பு கேட்டது. மூலிகை மருந்துகள் அடங்கிய நீரூற்று ஒன்று பூமியைப் பிளந்து கொண்டு மேலே வருவதைப் போலிருக்கிறது. இந்த அடக்கமான, அமுக்கமான சிரிப்பை விவரிப்பதே கடினம். இது சிறிது சிறிதாகப் பெருகி வெடிச்சிரிப்பாக உருவெடுத்தது. முப்பத்தெட்டு குழந்தைகள் தலையைக் குனிந்தபடி, கண்களை மூடிக்கொண்டு கலகலவென சிரிக்கின்றனர். பின் அனைவரும் அமைதியானர்கள். ”படிகத் தன்மையுள்ள கண்ணாடிக்குத் திரும்பி வர வேண்டும்.”

”நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நாம் இப்போது வார்த்தைகளைப் பார்த்தோம், இனி வாக்கியங்களைக் கவனிப்போம்….. தலையை உயர்த்துங்கள்!… நேராக நிமிருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை அகற்றுகிறேன். அங்கே ஒரு படம் உள்ளது. அதில் ஒரு சிறுவன் புத்தகம் படிக்கிறான்.

”இப்படத்தைப் பார்த்து வாக்கியத்தை அமையுங்கள். இச்சிறுவன் எதைச் செய்கிறான்?”

”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.”

தாம்ரிக்கோ வாக்கியத்தை உருவாக்க வேண்டுமென எண்ணவில்லை. படத்தைப் பார்த்து அவள் என் கேள்விக்குப் பதில் சொன்னாள், அவ்வளவு தான். இப்போது, ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்” எனும் இப்பதிலை வாக்கியம் என்போம்.

”இவ்வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம்.”

குழந்தைகள் ஒரே குரலில் சொல்லும் பதில்களை என் கரங்களால் நான் ஒழுங்குபடுத்துகிறேன். திரையை மூடிவிட்டு மூன்று நீல நிற முக்கோண அட்டைவில்லைகளை (வார்த்தைகளின் அடையாளங்களை) எடுக்கிறேன்.

இவ்வாக்கியத்தை எழுத்தைக் குறிக்கும் அட்டைவில்லைகளின் உதவியால் ”எழுதுகிறேன்”. சிறுவன் (அனைவருக்கும் தெரியும்படியான ஓரிடத்தில் ஒரு அட்டைவில்லையை வைக்கிறேன்)… புத்தகத்தை (அருகே அடுத்த அட்டை வில்லையை வைக்கிறேன்)… படிக்கிறான் (பின் மூன்றாவது அட்டைவில்லையை வைத்து இறுதியில் முற்றுப் புள்ளியுடன் கூடிய அட்டைவில்லையை வைக்கிறேன்).

”எங்கே இந்த வாக்கியத்தைப் படியுங்கள்”. நான் ஒவ்வொரு அட்டைவில்லையாக சுட்டிக் காட்ட குழந்தைகள் படிக்கின்றனர்”: ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்”.

இப்போது ஒரு சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இந்த அட்டையில்லை ‘சுவாரசியமான’ எனும் சொல்லைக் குறிக்கிறது. எங்கே திரும்பச் சொல்லுங்கள். சரி, இப்போது இந்த வார்த்தையை வாக்கியத்தின் எந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்?”

ஆரம்பத்தில் வைத்தால் நன்றாயிருக்கும் என்று யாரோ பதில் சொன்னார்கள். சரி, பார்ப்போம்:

சுவாரசியமான சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.

வேறு பதில்களும் வந்தன:

சிறுவன் புத்தகத்தை சுவாரசியமான படிக்கிறான்.

சிறுவன் சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கிறான்.

சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான் சுவாரசியமான.

மற்ற அட்டைவில்லைகளின் இடையில் சிவப்பு நிற அட்டைவில்லை இடம் மாறிக் கொண்டே இருக்கிறது. எல்லா மாதிரிகளையும் முயற்சி செய்த பின் ”சுவாரசியமான” எனும் சொல்லை இரண்டாவது இடத்தில் வைக்குமாறு குழந்தைகள் எனக்கு ஆலோசனை கூறுகின்றனர். பின் நான் கேள்விகளைத் தொடுக்கிறேன்:

”இந்த வாக்கியத்தில் எவ்வளவு சொற்கள்?.. இந்த வாக்கியத்திலிருந்து கடைசிச் சொல்லை எடுத்து விட்டால்” – நான் கடைசி அட்டைவில்லையை எடுக்கிறேன் – ”என்ன மிஞ்சும்?”

குழந்தைகள் ”படிக்கின்றனர்”: ”சிறுவன் சுவாரசியமான புத்தகத்தை”.

”இது நன்றாக இல்லை, வார்த்தையை பழைய இடத்திலேயே திரும்ப வையுங்கள்!” யாரோ ஆலோசனை கூறுகின்றனர்.

அதை வைத்து விட்டு மூன்றாவது சொல்லை எடுக்கிறேன். குழந்தைகள் ”படித்துவிட்டு” சிரிக்கின்றனர்.

”நன்றாக இல்லை!”

அட்டைவில்லையைத் திரும்ப வைக்கிறேன். இரண்டாவது சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இது ‘மிகவும்’ எனும் சொல். இச்சொல்லை எந்த சொற்களுக்கு இடையில் வைத்தால் நன்றாக இருக்கும் சொல்லுங்கள். என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.”

ஒவ்வொருவரையும் விரைவாக அணுகுகிறேன்: ”நன்றி!….. நல்லது!… நன்றி!..” இதில் கிட்டத்தட்ட யாருமே தவறிழைக்கவில்லை. போன்தோ திடீரென என் கையைப் பற்றிக் கொண்டு, சிரித்தபடியே “நான் உங்களை விட மாட்டேன்” என்கிறான்.

“சரி, அப்படியெனில் என்னைப் பிடித்துக் கொள், சேர்ந்து வகுப்பறையைச் சுற்றுவோம்.”

போன்தோ என் பின்னால் வருகிறான். “மிகவும்” எனும் சொல்லை “சிறுவன்” எனும் சொல்லிற்கும் “சுவாரசியமான” எனும் சொல்லிற்கும் இடையில் வைக்கும்படி நீங்கள் கூறினீர்கள்.”

நான் வேண்டுமென்றே வேறு அட்டைவில்லைகளை நகர்த்தி விட்டு அவற்றின் இடையே புதியதை வைக்கிறேன். போன்தோவுடன் சேர்ந்து ஒரு புறமாக விலகி நின்று சற்று பேச்சை நிறுத்துகிறேன். ஒரு சிறுமி மட்டுமே நான் செய்ததைக் கவனிக்கிறாள்.

”நீங்கள் வார்த்தையைச் சரியானபடி வைக்கவில்லை!” மாயா கரும்பலகையை நோக்கி ஓடுகிறாள், “இதை இங்கே வைக்க வேண்டுமே தவிர அங்கல்ல.”

அவள் அட்டைவில்லைகளை மாற்றியமைக்கிறாள். நான் அவள் கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.

”நன்றி, மாயா, மிக்க நன்றி, நீ என் தவறைக் கண்டு பிடித்தாய்!”

இப்போது நாங்கள் மூவருமாக வகுப்பின் முன் நிற்கிறோம்.

”சரி, நாம் இன்று என்ன செய்தோம் என்று பார்ப்போம் வாருங்கள்.”

”நாங்கள் உங்கள் காதில் முணுமுணுத்தோம்…”

”கண்களை மூடிக் கொண்டு பெஞ்சில் தலையைக் கவிழ்த்த படி இருந்தோம்…”

”அட்டைப்பெட்டியில் வார்த்தைகளைச் சேகரித்தோம்…”

”நீங்கள் மெதுவாக கிசுகிசுவென கூறிய வார்த்தைகளை நாங்கள் கண்டுபிடித்தோம்…”

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

”பிறகு வாக்கியம்…”

”வாக்கியத்தில் நாங்கள் ’சிவப்பு’ வார்த்தைகளைச் சேர்த்தோம்…”

”எங்கள் குறும்புகளை நினைத்துப் பார்த்தோம்…”

”சிரித்தோம்…”

நான்: ”தாய் மொழிப் பாட வகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்ததா?”

”மிகவும்… ஆம்… பிடித்திருந்தது…”

இனிய மணியொலி கேட்கிறது. முதல் பாடம் முடிந்து விட்டது. ‘

”அடுத்த பாடம் கணிதம்! எங்கே, குழந்தைகளே, எழுந்திருங்கள்!…”

எல்லா சிறுவர்களையும் பார்த்துச் சொல்கிறேன்: ”வகுப்பறையில் உள்ளே வரும்போதும் வெளியே போகும் போதும் முதலில் சிறுமிகளுக்கு இடம் விடுங்கள்!.. இப்போது ஓய்வெடுங்கள்!”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க