டந்து கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் முக்கிய ஸ்பான்சரான விவோ கைபேசி நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்திற்கு கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக மட்டும் சுமார் 2,199 கோடி செலவிட்டுள்ளது விவோ நிறுவனம். இந்தத் தொகையானது இதற்கு முந்தைய ஸ்பான்சர் செலவிட்ட தொகையை விட ஆறு மடங்கு அதிகமானதாகும்.

மலைக்கச் செய்யும் இந்த விளம்பர முதலீடு போதிய பலன் தருமா? என்கிற சந்தேகம் துவக்கத்தில் நிலவியது. எனினும், விவோவின் திறன்பேசிகளுடைய விற்பனை கடந்த ஆண்டில் இருந்து அதிகரித்துள்ளது. விளம்பரத்தில் போட்ட காசை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதில் அந்நிறுவனம் வெற்றியடைந்துள்ளதையே இந்த விற்பனை அதிகரிப்பு உணர்த்துகின்றது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2019) 45 இலட்சம் திறன்பேசிகளை விற்றுள்ளது விவோ. விற்பனையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, அந்நிறுவனம் சென்ற வருடங்களின் காலாண்டுகளில் எட்டிய விற்பனை அளவை விட கூடுதல் என்கிறது சந்தை ஆய்வு நிறுவனமான கனாலிஸ். தற்போது ஸியோமி மற்றும் சாம்சங் திறன்பேசிகளை அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது விவோ.

சென்ற 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திறன்பேசிகளின் விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்விரண்டு காலகட்டங்களிலும் விவோ நிறுவனத்தின் திறன்பேசிகளுடைய விற்பனை மட்டும் 108.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது கனாலிஸ். ஐபிஎல் போட்டிகளை சுமார் 700 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் செயலியின் மூலம் பார்க்கிறார்கள். இதில் சுமார் 200 மில்லியன் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் செயலியின் மூலம் பார்க்கிறார்கள்.

ரசிகர்களின் பார்வையில் தங்கள் நிறுவனத்தின் வணிக இலட்சினை அதிகம் தென்படும் விதமாக விளம்பரங்களை திட்டமிட்டது விவோ. ரசிகர்களில் ஒருவரைத் தெரிவு செய்து அவருக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்குவது, விவோ-ஐபிஎல் என்கிற ஹாஷ்டாக் மூலம் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் என குறுகிய காலத்தில் அதிக மக்களின் கவனத்திற்கு விவோ நிறுவனம் சென்றடைந்துள்ளது.

இதற்கிடையே ஏழாயிரத்தில் இருந்து பதினான்காயிரம் விலைகளில் புதிய மாடல் திறன்பேசிகளையும் அறிமுகம் செய்துள்ளது விவோ. மேலும், தனது விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமீர் கானை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் செய்த விளம்பரங்களின் மூலம் அதிகரித்த விற்பனை மற்றும் அதனூடாக கிடைத்த வருமானத்தைக் கொண்டு தனது போட்டி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஸியோமியை சமாளிக்கும் உத்திகளையும் அந்நிறுவனம் வகுத்து வருகின்றது.

கிரிக்கெட்டின் மூலம் தேசத் வெறியை தூண்டி கல்லா கட்டுவது வழக்கமாக முதலாளிகள் செய்வதுதான். உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது நாடெங்கும் பற்றியெரியும் தேசிய வெறியை நாம் பார்த்திருக்கிறோம். அதுவும் பாகிஸ்தானுடன் போட்டியில் வென்றால் வேண்டுமென்றே இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வம்பிழுப்பது என இந்துத்துவக் கும்பல் கடந்த காலங்களில் கிரிக்கெட்டை தனது அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தியதையும் பார்த்திருக்கிறோம்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
அடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு !

ஐபிஎல் கிரிக்கெட்டின் தேசிய வெறியை பிரதேச வெறியாக சுருக்கியுள்ளது. என்றாலும், அடுத்த சில மாதங்களில் துவங்க இருக்கும் உலகக் கோப்பை போட்டியின்போது மீண்டும் கிரிக்கெட் தேசிய வெறியர்களின் கருவியாக மாறும். அதே கருவியைப் பயன்படுத்தி கல்லா கட்டுகிறது ஒரு சீன நிறுவனம்.

பொதுவாக சீன அபாயம் என கூவும் இந்துத்துவ கும்பலின் உள்ளங்கவர் கள்வன் மோடியின் ஆட்சியில் ஒரு சீன நிறுவனம் இந்திய தேசிய வெறியின் கைக்கருவியான கிரிக்கெட்டை வைத்தே கல்லா கட்டுவது நமக்கு ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றது.  அதாவது, பாஜக பேசும் தேச பக்தியின் வீச்சு வாக்குச் சாவடியின் வரம்புக்கு உட்பட்டதே. சந்தை நலன் கார்ப்பரேட் நலன் என்று வந்தால் அனைத்தையும் அடமானம் வைக்க தயங்க மாட்டார் திருவாளர் ஐம்பத்தாறு இன்ச்.


சாக்கியன்
நன்றி : scroll