தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் “வீ.ஆறுமுகம் சேர்வை” | பொ.வேல்சாமி
நண்பர்களே….
1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை. இவர் பதிப்பித்து விளக்கவுரை எழுதிய (1920) தண்டியலங்காரம் நூலை அப்படியே எடுத்து வேறு ஒருவர் பெயர் போட்டு (கொ.இராமலிங்கத் தம்பிரான்) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டதாக இலக்கணப் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி தன்னுடைய தண்டியலங்காரப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
நரிவிருத்தம், கபிலரகவல் போன்ற நூல்களுக்கு சிறந்த உரை எழுதியதுடன் சீவகசிந்தாமணி நூலை உரைநடையில் எழுதியிருக்கிறார். இத்துடன் வேறு பல நூல்களையும் இயற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அறிஞர்களின் விவாதங்களில் பங்கு பெற்றவர். திரு.வி.க., சக்கரவர்த்தி நயினார், கா.ர.கோவிந்தராஜ முதலியார் போன்ற அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்புக் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
பழந்தமிழ் இலக்கியம் சிறப்படைந்ததற்கு முக்கியமான காரணம் ஜைன சமயம் சார்ந்த புலவர்களின் பெரும் பணியே என்ற கருத்து இவரிடம் வலுவாக நிலைபெற்றிருந்தது. இந்தக் காரணத்தாலேயே இவர் சைவ புலவர்களால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருத இடமுள்ளது.
மதுரை – மேலூர் சாலையில் உள்ள தெற்குத் தெரு என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ளது செம்பூர். இன்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களும் அவரைப் பற்றி அறிந்தவர்களும் அங்கு வசிப்பதாக அறிந்தேன். இவருடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றேன். அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் சிலர் இவருடைய புலமை சார்ந்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றை எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால் இவருடைய வரலாறு ஓரளவு தெளிவாகப் புலப்படும் என்று கருதுகிறேன்.
*****
செம்பூர் வித்துவான் ஆறுமுகம் சேர்வையின் வாழ்க்கைக் குறிப்புகள் – 1913 இல் எழுதியவர் பெரும் பேராசிரியர் கா.ர.கோவிந்தராஜ முதலியார்.
நண்பர்களே…..
செம்பூர் வித்துவான் ஆறுமுகம் சேர்வையின் வாழ்க்கைக் குறிப்புகளை 20 -ம் நூற்றாண்டின் முன் பகுதியில் பெரும்புகழ்பெற்ற அறிஞர்களின் ஆசிரியரும் “வீரசோழியம்“ “தொல்காப்பிய பாயிர விருத்தி“ “சூத்திர விருத்தி“ “இறையனார் களவியல்“ போன்ற நூல்களை மிக அற்புதமான விளக்கங்களுடன் செம்மையாக பதிப்பித்த பேராசிரியர் கா.ர.கோவிந்தராஜ முதலியார் எழுதியுள்ளார்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
அவருடைய அந்தக் குறிப்புகள் சீவக சிந்தாமணி வசனம் பாகம் 1 என்ற நூலின் முன்னுரையாக 9 பக்கங்களில் அமைந்துள்ளது. அந்த நூலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …
நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.