பெருங்குடி : கிணறை சுத்தம் செய்தவர்கள் விஷவாயு தாக்கி மூவர் பலி !
பெருங்குடி : கிணறை சுத்தம் செய்தவர்கள் விஷவாயு தாக்கி மூவர் பலி!
தீயணைப்புத் துறையினர் காப்பாற்றுவதில் அலட்சியம்!
பெருங்குடி திருவள்ளூர் நகரை சார்ந்த சொந்த வீட்டு உபயோகத்திற்காக இருந்த கிணற்றில் இறங்கி சுத்தம் செய்தவர்கள் ஒருவரை காப்பாற்ற இன்னொருவர் என இறங்கி மூவர் இறந்துவிட்டனர். மேலும் மூவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
”இது எங்க ஏரியா இல்லை” என கைவிரித்த அருகில் இருந்த தீயணைப்புப்படை. 10 நிமிடத்தில் தெரிவித்து, 2.30 மணி நேரம் கழித்து ஆடி அசைந்து வந்த தீயணைப்பு படையினர்.
அருகில் இருக்கும் கழிவு நீர் குட்டையால் தான் வீட்டு கிணறுகளில் விசவாயு தாக்கம். கழிவு நீர் குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சி நிர்வாகம்.
♦ ♦ ♦
பலியான காளிதாஸ், சந்தோஸ், அன்பு – மூவரின் குடும்ப நிலவரம் :
காளிதாஸ், சந்தோஸ், அன்பு என்கிற அன்பழகன் என மூவரும் விசவாயு தாக்கி இறந்த செய்தி அறிந்து பெருங்குடி பகுதிக்கு சென்று விசாரித்தோம்.
பெருங்குடி பகுதி கள்ளுக்குட்டை என்னும் இடத்தில் திருவள்ளூர் நகரை நாங்கள் சென்றடைந்த பொழுது, மூவர் இறந்த செய்தியை மக்கள் துயரத்துடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
இறந்த காளிதாசுக்கு லட்சுமி என்கிற மனைவி, யுவராணி (15), நித்தீஸ் (13) என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் செண்டிரிங் வேலை செய்துவந்தார்.
இறந்த சந்தோஷ்-க்கு லட்சுமி என்கிற மனைவி சாதனா (6), தர்ஷினி (3) என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் போர்டு (Ford) கார் நிறுவனத்தில் ஷோரூமில் வேலை செய்து வந்தார்.
இறந்த அன்பு என்கிற அன்பழகனுக்கு தீபா என்கிற மனைவி, யோகேஷ்(14), சுதன் (12) என்கிற இரு மகன்களும் உள்ளனர். இவரும் காளிதாசை போலவே செண்டிரிங் வேலை செய்துவந்தவர்.
கிணற்றுக்குள் இறங்கியவர்களை விசவாயு தாக்கியது :
சம்பந்தப்பட்ட கிணறு இறந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமானது ஆகும். நீரை அவருடைய வீட்டு தேவைக்காக பயன்படுத்தியுள்ளார்கள். அந்த நீர் குடிக்க பயன்படாத உப்புநீர் ஆகும்.
கிணற்றில் உள்ள கழிவுநீர் சுரப்பைத் தடுக்கவும், கிணற்றில் உள்ள கழிவுகளை அகற்றவும் முடிவு செய்து, முதலில் காளிதாஸ் இறங்கியுள்ளார். அவருக்கு உதவியாக கோவிந்தசாமியும் உடன் இறங்கியுள்ளார். கிணற்றை சுத்தம் செய்ய முயலும் பொழுதே கோவிந்தசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் மேலே வந்துவிட்டார். சிறிது நிமிடங்களில் காளிதாஸ் மயக்கமடைய, பதறிப்போன சந்தோஷ் கிணற்றில் இறங்கி அவரும் மயக்கமடைய, இருவர் மாட்டிக்கொண்டார்களே என அன்பும் கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். சில நிமிடங்களில் அவரும் விசவாயு தாக்குதலுக்குள்ளானார்.
தீயணைப்பு படையின் அலட்சியம் :
சந்தோஷ் கிணற்றில் இறங்கும் பொழுதே அங்கிருந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும் உடனே தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வராததால், சிவா என்பவர் நேரடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அழைத்த பொழுது, “அது எங்க ஏரியா இல்லை. எங்க ஏரியா பேபி நகரோடு முடிந்துவிட்டது” என பொறுப்பே இல்லாமல் தெரிவித்துள்ளனர். சம்பவம் ஏற்பட்ட இடத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் உள்ள தொலைவு 10 நிமிட பயணத் தொலைவு தான்.
அந்த பகுதியின் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் தீயணைப்பு வண்டி ஆடி அசைந்து வந்த பொழுது மாலை ஐந்தாகிவிட்டது. சம்பவம் நடந்தது மதியம் 2.30 மணி. தகவல் சொன்னது மதியம் 2.40. வந்து சேர்ந்ததோ மாலை 5 மணி.
படிக்க:
♦ மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து
♦ 24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !
தீயணைப்பு படையில் வந்தவர்களும் எவ்வித முறையான கருவிகளுடன் வராமல் சாதாரணமாக செயல்பட்டுள்ளனர். உரிய நேரத்திற்குள் வந்திருந்தால், இரண்டு உயிர்களையாவது கண்டிப்பாக காப்பாற்றி இருக்கலாம் என மக்கள் ஆதங்கமாகவும், கோபமாகவும் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற சேகர் என்னும் தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கினார். இறங்கும் பொழுதே ஏணியில் இருந்து தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். அவர் இறங்கும் பொழுது அன்பு பாதி மயக்கநிலையில் இருந்ததை பார்த்துள்ளார். சேகரை காப்பாற்ற ராஜ் என்பவர் உள்ளே இறங்கி அவரை மட்டும் காப்பாற்றினார். ராஜுக்கும் விசவாயு தாக்கியதால், மேற்கொண்டு மற்றவர்களை மீட்க முடியவில்லை.
மருத்துவமனையில் ஐசியூ வார்டில் அனுமதி :
கோவிந்தராஜ், சேகர், ராஜ் மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேகரை மருத்துவமனையில் சந்தித்து பேசிய பொழுது, “கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற தீயணைப்பு படைவீரர்கள் உரிய நேரத்திற்கு வராததால்தான், நான் உள்ளே இறங்கினேன்” என்றார். உடல்நிலை குறித்து கேட்ட பொழுது “இதயம் கடுமையாக வலி எடுக்கின்றது. மேலும் மூச்சுவிடும் பொழுது ஒருவிதமான எரிச்சல் இருக்கிறது ” என்றார். மற்றவர்களுடன் பேசமுடியவில்லை.
வழக்கு நிலவரம் குறித்து !
துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் விசாரித்த பொழுது, அங்கிருந்த துணை ஆய்வாளர் “இந்த வழக்கை ஆய்வாளர்தான் விசாரணை செய்கிறார். எதுவாக இருந்தாலும், அவரிடம் கேளுங்கள்” என தட்டிக்கழித்தார்.
நாம் தொடர்ந்து கேட்டதால், சிஎஸ்.ஆர் (CSR) எண்ணையும் (279), ஐபிசி 304A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். ஆய்வாளரை தொலைபேசியில் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர் அழைப்பினை ஏற்கவில்லை. அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிள் ”இது போன்ற சம்பவம் ஆறு மாதத்திற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது” என கூறினார்.
கழிவுநீர் குட்டையை மாநகராட்சி பராமரிக்கவில்லை !
மூன்று உயிர்களின் இழப்புக்கு காரணம் கிணற்றுக்கு அருகில் இருந்த குட்டை தான் என விசாரித்த பொழுது மக்கள் தெரிவித்தார்கள். அந்த குட்டை இருக்கும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. துவக்கத்தில் இந்த குட்டையானது மழை பெய்தால் நீர் சேகரித்து வைக்கும் இடமாக இருந்தது. நாளடைவில் இதில் கழிவு நீரை கொட்டியும், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டதாலும் அந்த குட்டை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசும் குட்டையாக மாறிவிட்டது. இந்த குட்டையால் தான் நன்றாக இருந்த வீட்டு கிணறுகள் கெட்டுப்போயுள்ளன. விசவாயும் உற்பத்தியாகிறது.
மாநகராட்சி அந்த குட்டையை சுத்தமாக பராமரித்திருக்கவேண்டும் அல்லது அதை உரியமுறையில் மூடியிருக்கவேண்டும். இரண்டும் செய்யாமல் கழிவுநீர் குட்டையாக்கி அந்த பகுதியை மிகவும் சுகாதாரமற்று வைத்துள்ளது.
மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு விசவாயு மட்டும்தான் காரணமா?
அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்புப் படை காரணமில்லையா?
குட்டையை பராமரிக்கத் தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.