மிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. முக்கியமாக தலைநகரமான சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்திருப்பதை தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் 3,872 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இன்று வெறும் 261 மில்லியன் கனஅடியாக குறைந்துவிட்டது. சென்னைக்கு தினமும் 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ‘மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்’. தண்ணீர் தட்டுப்பாட்டால் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் வினியோகிக்கப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து வரும் குடிநீர், கடல் குடிநீர், கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றை லாரிகள் மூலம் வினியோகம் செய்து வருகின்றனர்.

(படம் – வினவு செய்தியாளர்)

கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகளும் வறண்டு வருவதால் எப்போது வேண்டுமானாலும் அவை நின்று விடும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. இப்பொழுதே லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் 1 லாரிக்கு 500 காலி குடங்களுடன் பெண்கள் சூழ்ந்துவிடுகின்றனர்.

சென்னையில் 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக சொன்னாலும் பல்வேறு பகுதிகளில் லாரி தண்ணீர் கிடைப்பதில்லை என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படிக்க:
திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்
♦ தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

குடிப்பதற்கு தண்ணீரின்றி ‘கேன் வாட்டர்’ வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ‘கேன் வாட்டர்’ விநியோகிப்பவர்களும் விலையை ஏற்றிவிட்டதாக தெரிவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையின் விளைவு, பால் உள்ளிட்ட பொருட்களின் விலையும் ஏறக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சென்னை நகருக்குள் 1 நாள் விட்டு 1 நாள் ஓரளவு தண்ணீர் கிடைத்தாலும் தண்ணீர் பஞ்சம் முழுவதுமாக தீர்ந்தபாடு இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஏனெனில் சென்னைக்கான தண்ணீர் தேவை மிகவும் பெரியது. தற்போது விநியோகிக்கப்படும் தண்ணீரானது ‘யானைப் பசிக்கு சோளப்பொரியை போடுவது’போல் இருக்கிறது. தனியார் தண்ணீர் வியாபாரம் சென்னையில் கொடிகட்டிப் பறக்கிறது. 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரியில் இருந்து மினி தண்ணீர் பாட்டில் வரை சிட்டிக்குள் குவிகிறது. இருப்பினும் எத்தனை நாளைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியும்? ஏற்கனவே இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது கூடுதல் சுமையாகிறது. தண்ணீர் வசதியுடன் கூடிய வீட்டில் வாடகையும் உயர்வதால் சென்னை மக்கள் பலரும் புறநகரை நோக்கி படையெடுக்கும் அவலத்தை சந்திக்கிறார்கள்.

சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இல்லையா?

செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்துதான் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருகிறார்கள். ஆனால் அப்பகுதி மக்கள் தற்போது குடிக்க ஒரு குடம் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். கடல் போல் பரந்து விரிந்து இருந்த செம்பரம்பாக்கம் ஏரி தற்போது வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

முன்னொரு காலத்தில் விளைந்த நிலம் இப்போது சீர் கெட்டு நிற்கும் அவலநிலை. இடம் -பாரதி நகர் (படம் – வினவு செய்தியாளர்)

செம்பரம்பாக்கம் ஏரியின் வடிகால் பகுதியான தண்டலம், பாரதிநகர் தொடங்கி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சுற்றுசுவர்வரை வாழை, நெல் விளைந்த நன்செய் நிலங்கள் இப்போது தேசிய நெடுஞ்சாலையாகவும் அடுக்குமாடி கான்கிரீட் காடுகளாகவும் உருமாறிவிட்டன. இங்கே கூலி விவசாயிகளாக இருந்தவர்கள் இப்போது தனியார் கம்பெனிகளில் கீழ்மட்ட வேலைகளில் வாரக் கூலிகளாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், குடிக்க தண்ணீர் கேட்டு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தனியார் தண்ணீர் கம்பெனிகளின் வருகையால் பாதிக்கப்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த; ஊர் பெரியவரான வேலாயுதம் சொல்கிறார். “இதோ மூன்று அடி அகல சாக்கடையாக சுருங்கிப் போய் இருக்கும் இந்த வாய்க்காலில்தான் செம்பரம்பாக்கம் ஏரி நீர் 15-க்கு 15 அடி அகலத்திற்கு நீர் கரை புரண்டு ஓடும். அது மட்டுமல்ல எங்கள் பசங்களும் இதில் குளித்து விளையாடினார்கள். இப்போது எல்லாம் கனவு போலிருக்கிறது.

ஊர் பெரியவர் ஐயா வேலாயுதம் (வலது)

எங்கள் வீட்டு கிணறு தரையிலிருந்து 3 அடி ஆழத்தில் நீரை கையாலேயே அள்ளினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எப்போது இந்த பகுதியில் பைபாஸ் போட்டார்களோ அப்போதே விவசாயம் முதற்கொண்டு எல்லாத்தையும் இழந்துவிட்டோம். சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பிறகு தனியார் தண்ணீர் கம்பனிகள் இங்கு மூலைக்கு மூலை கிளம்பிவிட்டன. பத்தடிக்கு ஒரு தண்ணீர் எடுக்கும் கம்பனிகள் பெருகிவிட்டது.

இன்று எங்களை சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றுக்குள் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் இயங்குகின்றன. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னர் லாரிகள் இரவு பகல் என 24 மணிநேரமும் தண்ணீரை உறிஞ்சி பாலைவனமாக  மாற்றிவிட்டார்கள்.

நீரை உரிஞ்சும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமல்ல. ஹோட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் என எல்லா இடங்களுக்கும் தண்ணீரை அனுப்புகிறார்கள். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது.

”இப்போது ஊரில் இருக்கும் பொதுக் கிணற்றிலும் நீர் வற்றியதால் தெருக் குழாயில் தண்ணீர் வருவதில்லை. முதலில் குடிப்பதற்கு மட்டும் கேன் தண்ணீர் வாங்கிய நாங்கள் துவைப்பதற்கும் தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.

கூலி வேலைக்கு போகும் பெண்களும், ஆண்களும் குளிக்க கூட வழியின்றி வேலைக்கு செல்கிறார்கள். சோறு இல்லை என்றாலும் தினமும் குளித்து முடித்து சுத்தமாக இருக்கும் நாங்கள் இப்போது வியர்வை நாற்றத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

படிக்க:
பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !
♦ ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

எங்க ஊரில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தோம். அதிகாரிகள் எங்கள் பிரச்சினையை ஏதும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்த ஒரு மணிநேரத்தில் அதிகாரிகளும் போலீசும் வந்து சமாதானமாக போகச் சொன்னார்கள்.

நாங்களோ தண்ணீரை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு பூட்டு போடாமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று உறுதியாக இருந்ததால், அதிகாரிகள் வேறுவழியின்றி தண்ணீர் கம்பெனியை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

தண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெரு குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம். வீட்டுப் பெண்களும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்த சந்தோஷத்தில் கூலி வேலைக்கு நேரத்திற்கு போகிறார்கள்.

இந்த நிம்மதியை இனிமேலும் நாங்கள் இழக்க மாட்டோம். அந்த தண்ணீர் கம்பெனிகளை திறக்கச் சொல்லி கோர்ட்டு உத்தரவு போட்டாலும் அதனை திறக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் பெரியவர் வேலாயுதம்.

வினவு களச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க