மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !

நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது

0

முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிகளின் ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு வங்கத்தில் காவி வேகமாக பரவி வருகிறது என்கிற செய்திகளுக்கிடையே மேற்கு வங்க கல்லூரிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது மத நம்பிக்கையற்றவர்கள்கூட கட்டாயமாக மதத்தை குறிப்பிட்டே ஆகவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இந்தச் சிக்கலை களைய விதிப்படியான ஆணைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், தங்களுடைய சேர்க்கை விண்ணப்பத்தில் மதம் என்கிற இடத்தில் மதப் பிரிவுகளோடு மனித நேயம், கடவுள் மறுப்பாளர், மதசார்பற்றவர் என்ற தெரிவுகளையும் சேர்த்துள்ளன.

கொல்கத்தாவைச் சேர்ந்த நூற்றாண்டு பழமையான பெத்தூன் கல்லூரியைச் சேர்ந்த ஒரு அலுவலர், இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் பல மாணவர்கள் தங்களுடைய மத அடையாளத்தை தனிப்பட்ட ஒன்றாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்கிறார்.  பல மாணவர்கள் தங்களுடைய மத அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

படிக்க:
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
♦ விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !

“பல விண்ணப்பதாரர்கள் நம்பிக்கையற்றவர்கள் என குறிக்கவே விரும்பினர். ஆனால், அதற்கான தெரிவு ‘மதம்’ என்கிற பிரிவில் இல்லை. எனவே, கட்டாயமாக அவர்கள் மதத்தை குறிப்பிட்டே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்” என்கிறார் கல்லூரி அலுவலர்.

இந்த சிக்கலை தீர்க்கும்பொருட்டு ‘மனிதநேயம்’ என்ற தெரிவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சேர்த்திருப்பதாக பெத்தூன் கல்லூரி தெரிவித்துள்ளது.

ஸ்காட்டிஸ் சர்ச் கல்லூரி போன்ற கொல்கத்தாவின் வேறு சில கல்லூரிகளில் ‘கடவுள் மறுப்பாளர்’, ‘மத சார்பற்றவர்’, ‘மதம் இல்லாதவர்’ போன்ற தெரிவுகளையும் சேர்த்திருக்கின்றன.

மவுலானா ஆசாத் கல்லூரி, ராம் மோகன் கல்லூரி, மகாராஜா ஸ்ரீரிஸ்சந்திர கல்லூரி, மிட்னாபூர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் ‘மனிதநேயம்’ என்ற தெரிவை சேர்த்திருக்கின்றன.

“இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு” என பல மேற்கு வங்க கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

கல்லூரி சேர்க்கை (மாதிரி படம்)

பெத்தூன் கல்லூரியில் ஆங்கிலம் பயிலும் சகரிகா சென், இந்த முடிவை வரவேற்கிறார். “இது மிக முற்போக்கான முயற்சி. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடு என நான் நினைக்கிறேன். நான் இந்துவாக பிறந்திருந்தாலும் என்னுடைய மத அடையாளத்தை சொல்ல விரும்புவதில்லை” என்கிறார் இவர்.

மற்றொரு மாணவரான சமாய் சென்குப்தா,  “இது ஒரு முன்னோடியான செயல். நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது” என்கிறார்.

மேற்கு வங்க கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வழிமுறையை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தியிருந்தனர். பள்ளிகளில் சாதியை குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதுபோல, மதம் குறித்த தெரிவுக்கும் ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது !


அனிதா
நன்றி: நேஷனல் ஹெரால்டு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க