மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக என்ன தகுதி வேண்டும்? போலி கல்வி சன்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, போலியாக டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக்கூறி சர்ச்சையில் சிக்கினார். அவர் படித்திருப்பது வெறும் பள்ளிப்படிப்பு மட்டுமே என்பது பின்னர் உறுதியானது.

‘போலிச் சான்றிதழ் புகழ்’ அமைச்சர்கள் ரமேஷ் பொக்கிரியால் நிஷான்க் மற்றும் ஸ்மிருதி இரானி.

இந்த முறை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியிருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால் நிஷான்க். மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.

தன் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ பட்டத்தை பெருமையுடன் போட்டுக்கொள்ளும் ரமேஷ் பொக்கிரியால், இந்தப் பட்டத்தை கொழும்புவில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறுகிறார். ஒருமுறை இவருடைய ‘இலக்கிய’ சேவையை பாராட்டியும் மற்றொரு முறை ‘அறிவியல்’ பங்களிப்புக்காகவும் ‘டாக்டர்’ பட்டத்தை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கிறதாம்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, இந்தப் பல்கலைக்கழகம் வெளிநாட்டு பல்கலைக்கழகமாகவோ, உள்நாட்டு பல்கலைக்கழகமாகவோ பதிவு செய்யப்படவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் 2017-ம் ஆண்டே வெளியானபோதும், மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பொக்கிரியால், தனது வேட்பு மனுவில் போலி பட்டங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

படிக்க:
♦ என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ?
♦ மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !

கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் உத்தரகாண்ட் அரசிடம் பொக்கிரியாலின் கல்வித்தகுதி குறித்து கேட்கப்பட்டது. ஆனால் பதிலாக பூர்த்தி செய்யப்படாத தன்விவரக்குறிப்பும் தகவல்களுமே கிடைத்தன.

அதோடு, அவருடைய தன்விவரக் குறிப்பில் அவருடைய பிறந்த தேதி ஆகஸ்டு 15, 1959 என்றும் பாஸ்போர்டில் ஜூலை 15, 1959 என்றும் உள்ளது. இந்த விவகாரம் வெளியானபோது ‘ஜோதிட’ காரணங்களால் இந்த தேதி வித்தியாசம் ஏற்பட்டதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவு, உயர்கல்வி ஆகிய இரண்டு முக்கிய பொறுப்புகளைக் கொண்டது. நாட்டின் ஒட்டுமொத்த கல்வி துறைகளுக்கும் இந்த அமைச்சகம் தலைமையேற்று வழிநடத்தும். மோடியின் ஆட்சியில் இந்த அமைச்சரகத்தில் அமர வைக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களும் போலிக் கல்வி சான்றிதழ் சர்ச்சைகளில் சிக்கியவர்கள். தங்கள் கல்வித் தகுதியை பொய்யாக கூறிவருகிறவர்கள்.

கல்வியின் தரத்தை அறியாத ஸ்மிருதி இரானி அமைச்சராக இருந்தபோது பல்கலைக்கழக வளாகங்கள் போர்க்களங்களாக மாறின. தற்போது மீண்டும் ஒருமுறை அப்படியொருவர் கையில் மனிதவள மேம்பாட்டுத்துறை சிக்கியுள்ளது.


அனிதா
நன்றி: இந்தியா டுடே, த ஸ்டேட்ஸ்மேன்