கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசை கடுமையாக விமர்சித்த மிகச் சிலரில் பேராசிரியர் ராம் புனியானியும் ஒருவர். தற்போது மீண்டும் பாஜக அரசு ஏகபோகத்துடன் பதவி ஏற்றுள்ள நிலையில், சங் பரிவாரங்கள் தங்களுடைய கும்பல் வன்முறையை அனைத்து விதங்களிலும் ஏவி விடத் தொடங்கியுள்ளனர்.
பகுத்தறிவாளராகவும், இந்துத்துவ பரிவாரங்களின் வன்முறைகளை விமர்சித்து எழுதுகிறவராகவும் உள்ள ராம் புனியானிக்கு நள்ளிரவில் தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்துத்துவ குண்டர்களின் இந்த மிரட்டல் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் பேரா. ராம் புனியானி.

இந்தியா முழுமைக்கும் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யும் ராம் புனியானி வரலாற்றை எப்படி ஒத்திசைவோடு புரிந்துகொள்வது என்பது குறித்து பயிற்சி பட்டறைகள் நடத்தியும் உரைகள் ஆற்றியும் வருகிறார். எனவே, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர்களைக் கொன்றது போல, புனியானியும் கொல்லப்படும் அச்சம் செயல்பாட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், புனியானியை தரக்குறைவாக பேசியதோடு, அடிக்கடி அவரை இந்துக்களுக்கு எதிரானவர் எனவும் திட்டியுள்ளார். புனியானி தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், அப்படியில்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
படிக்க:
♦ எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !
♦ சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !
மற்றொரு நபர், மிகவும் தரக்குறைவாக புனியானியுடன் பேசியுள்ளார். இதுகுறித்து விரிவாக போலீசில் அளித்துள்ள புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
“இது கடுமையாக தொந்திரவு செய்கிறது. என்னுடைய குடும்பம் என்னுடைய பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. அதிகாரிகள் என்னுடைய புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல” என்கிறார் புனியானி.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கடந்த மார்ச் மாதம், பேரா. புனியானி வீட்டுக்கு பாஸ்போர்ட் தொடர்பாக சீருடை அணியாத காவலர்கள் வந்து விசாரித்துச் சென்ற பின்பே, இதுபோன்ற தாக்குதல் அதிகரித்தன என்கிறார் அவர். பொதுவாக பாஸ்போர்ட் விசாரணைக்கு சீருடை அணிந்த காவலர்கள் வருவார்கள், தன் வீட்டுக்கு சீருடை அணியாத காவலர்கள் வந்தது சந்தேகத்துக்குரியது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இந்துத்துவ பாசிச அரசு, செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மதிப்புக்குரியோர் மீது தொடர் வன்முறைகள், கைது நடவடிக்கைகளை ஏவி வரும் நிலையில், பேராசிரியர் புனியானிக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டலை தட்டிக்கழிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனிதா
நன்றி: சப்ரங் இந்தியா