செய்தி : அமித் ஷர்மா, சானல் நியூஸ் 24 எனும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். நேற்று இரவு அவர் உத்திரப் பிரதேசம் ஷாமிலி மாவட்டத்தில் தடம் புரண்ட ரயில் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறார்.
அதைக் கண்ட ரயில்வே போலீசார் அவரை கடுமையாகத் தாக்கியதோடு அவர் முகத்தில் சிறுநீர் கழித்தும் இழிவுபடுத்தியிருக்கின்றனர்.
நீதி : ஆதித்யாநாத் குறித்து விமர்சித்தால் சிறையில் அடைப்பார்கள். மோடி ஆட்சியில் ரயில் தடம் புரண்ட செய்தியை சேகரிக்கச் சென்றால் சிறுநீர் கழிப்பார்கள். சாதாரணச் செய்திகள் சேகரிப்பதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.! ரஃபேல் ஊழல் போன்ற பெரும் செய்திகள் சேகரித்தால் கொலையே செய்தாலும் செய்வார்கள்.
♠ ♦ ♣
செய்தி : மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளதார ஆலோசகரான அரவிந்த் சும்பரமணியன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். அதன்படி 2011 முதல் 2017 வரையிலான பொருளாதார வளர்ச்சி என்பது 4.5 சதவீதம்தானே ஒழிய ஏழு சதவீதம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
நீதி : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அரசால் மட்டுமே பொருளதார வளர்ச்சியை இப்படி புனைந்து அதிகப்படுத்த முடியும். ஏட்டில் வளர்ச்சி, களத்தில் வறுமை – இதுதான் பாஜக அரசின் சாதனை!
♠ ♦ ♣
செய்தி : அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து அக்கட்சி தலைமையகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய போஸ்டரால் கட்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நீதி : ஏ – 1 அக்கியூஸ்டு ஜெயாவால் தலைமை தாங்கப்பட்ட கட்சியில், அடுத்த ஏ 1 யார் என்று போட்டி தொடங்கி விட்டது.
♠ ♦ ♣
செய்தி : அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பிய போது அவர், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தேர்தலுக்காக மட்டுமே ஏற்பட்டது.
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சி பதிலளிக்க கூடாது. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று கூறியுள்ளார்.
நீதி : அடிமைகள் அடித்துக் கொள்வது குறித்து ஆண்டைகள் கருத்துச் சொல்வது சரியில்லை என்கிறார் தமிழிசை
♠ ♦ ♣
செய்தி : “நாம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்புகிறபோது அவர்கள் 100 சதவீத வரி விதித்தனர். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது நாம் வரி போடுவதில்லை.
எனவே நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் இதையும் ஏற்க முடியாது, ஏனென்றால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இப்போது அவர்கள் இதைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
நீதி : ஒரு தொலைபேசி அழைப்பிற்கே 50% வரி குறைத்தால் நேரில் கூப்பிட்டு மிரட்டினால் மோடி என்ன செய்வார்?
♠ ♦ ♣
செய்தி : நாடாளுமன்றத்தை சுற்றிவரும் தரகர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு புதிய எம்.பி. -க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நீதி : சரிதான், அம்பானி, அதானி, டாடா, இன்ன பிற முதலாளிகளுக்கான தரகர்கள் நாடாளுமன்றத்திலேயே அதுவும் அமைச்சர்களாக இருக்கும் போது வெளியே தரகர்களுக்கு என்ன வேலை?
♠ ♦ ♣
செய்தி : டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று மிக நீண்ட வெப்ப அலை வீசியது. தாங்க முடியாத அனல் காற்றில் சிக்கி மக்கள் தவித்தனர். திங்களன்று 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவிய போது, 68 பேர் அடங்கிய குழு தமிழகத்தின் கோவை நகரில் இருந்து வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் நேற்று முன்தினம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 5 பேர் பலியாகினர்.
நீதி : புனித பயணம் சென்ற வயோதிகர்களுக்கு அதுவே இறுதி பயணமாக ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் குறித்த எச்சரிக்கையோ, பாதுகாப்பு வசதிகளோ செய்வதற்கு குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து இந்து ராஷ்டிரத்தை நிர்மாணிக்கும் காவி ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை
♠ ♦ ♣
செய்தி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தமிழக உள்ளாட்சிகளுக்கான நிதி குறித்து கோரிக்கை விடுத்ததுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நீதி : இன்னும் பதினெட்டு மாத ஆட்சியை பங்காளிச் சண்டை இல்லாமல் எப்படி நடத்துவது என்று ஆண்டையிடம் அடிமைகள் உத்திரவைப் பெறுவதில் என்ன செய்தி முக்கியத்துவம் உள்ளது?
♠ ♦ ♣
செய்தி : தஞ்சையில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்து கோயில்களுக்கான பெண்தெய்வச் சிற்பங்களுடன், விதவிதமான போஸ்களில் இருக்கும் படங்களை முஜிபுர் ரஹ்மான் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இவை, சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்து மத தெய்வங்கள் தொடர்புடைய சிற்பங்களை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதற்காக இந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதி : எனில் ஆபாசமான வடிவில் இருக்கும் அந்த சிற்பங்களையும், அருங்காட்சியகத்தையும் மூடிவிட வேண்டியதுதானே?
♠ ♦ ♣
செய்தி : பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்று திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். பாஜக -வில் அமைச்சர் பதவி வழங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவரை இருந்த அமைச்சர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
கடந்த 5 ஆண்டுகளில் இணை அமைச்சர், பொது அமைச்சர் என்று கொடுத்தார்கள், ஆனால் அந்த அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர் பதவியை வெறுமனே வாங்கி வைத்துவிட்டு, டம்மியாக இருப்பதில் என்ன பயன்?
நான்கூடத்தான் எம்.எல்.ஏ., நான் டம்மியாகத்தானே இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடிகிறது? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தனது தொகுதியிலேயே எதுவும் செய்யமுடியவில்லை. இதுவே ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்குமா?” என்றார் கருணாஸ்
நீதி : ஜெயலலிதா இருந்தாலும் இவர்கள் டம்மிதான். இப்போதாவது பேட்டி அளிக்கிறார்கள். ஜெயா இருந்தால் “ஜெயா போற்றி..” புராணத்தை தவிர ஒரு வார்த்தை கூட இந்த அடிமைகள் வாயில் இருந்து வர முடியுமா?
♠ ♦ ♣
செய்தி : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கிளப்பும் வீடியோவைப் பதிவிட்டதாகப் புகார் கூறி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதி : இனி ஆதித்யநாத் பற்றி புகார் செய்திகள் தந்தால் கைது செய்ய மாட்டார்கள். அங்கயே நாலு சாத்து சாத்தி கை கால்களை உடைத்து அனுப்பி விடுவார்கள். அதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?
