பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 80-ஐ எட்டியுள்ளது. Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் கடுமையான மூளைக் காய்ச்சல் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மட்டும் கடந்த சனிக்கிழமை (17.06.2019) ஒரே நாளில் 27 பேர் வெப்ப சலனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பம் காரணமாக மூளைக் காய்ச்சலும் வேகமாக அங்கு பரவிவருகிறது. அரசு மருத்துவமனையான ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 10.06.2019 அன்று மருத்துவமனையில் ஒரு குழந்தை அனுமதிக்கப்படும்போது கதறி அழும் உறவினர்கள். (படம்: நன்றி – ஃபர்ஸ்ட் போஸ்ட்)

ஆனால், உயிர்க்கொல்லி நோயை குணமாக்கப் போதுமான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனையில் இல்லை என, நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நோய் தாக்குதலுக்கு ஆளான பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

அரசு மருத்துவமனையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் சிங்கை கண்டித்து சில அரசியல் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

“என்னுடைய மகள் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். மூளைக்காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை. செவிலியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இப்போது அவசர சிகிச்சை பிரிவில் நான்கு பிணங்கள் உள்ளன” என்கிறார் முகமது அஃப்தாப்.

போதிய சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதி, இந்த மருத்துவமனையில் இல்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “சனிக்கிழமை என்னுடைய நான்கு வயது மகளை மருத்துவமனையில் சேர்த்தேன். ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டாள்” என கூறினர். காரணம், “போதிய வசதிகள் இல்லாததே” என்கிறார் சுனில் ராம்.

படிக்க:
♦ மூளைக் காய்ச்சல்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!
♦ மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !

மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்த அனைவருக்கும் 4 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது நிதிஷ் குமார் அரசு. நோயைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் அவர் பணித்திருந்தார்.

நோயாளிகளின் உறவினர்கள், போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என முன்வைக்கும் குற்றச்சாட்டை புறந்தள்ளும்விதமாக, “குழந்தைகளை காப்பாற்றும்விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாக” அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே சொல்கிறார்.

“குழந்தைகளைக் காப்பாற்ற என்னென்ன மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், என்னென்ன வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்கிற எச்சரிக்கைப்படி சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு சூழல் வந்ததாக நினைவுகூர்கிற அமைச்சர், நோய் பரவக் காரணங்கள் கண்டறிய குழு ஒன்றை நியமித்திருப்பதாக தெரிவிக்கிறார்.

இரவில் வெறும் வயிற்றில் உறங்குதல், அதிக வேர்வை காரணமாக நீரிழிப்பு ஏற்படுதல், வெறும் வயிற்றில் லிச்சி பழத்தை உண்ணுதல் போன்றவை மூளைக்காய்ச்சல் ஏற்பட சில காரணங்கள் என மாநில அரசு கூறுகிறது. அதிகப்படியான காய்ச்சல், வலிப்பு மற்றும் தலைவலி ஆகியவை வைரஸ் மூலம் பரவும் மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகளாகும்.

ஏற்கெனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் போதிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால், 80 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது தவிர்க்கப்பட்டிருக்கும். வெப்பத்தின் காரணமாக இந்த நோய் பரவும் நிலையில், மக்களுக்கான முன்னெச்சரிக்கைகளையும் செய்யத் தவறியிருக்கிறது பீகார் அரசு.

பீகார் அரசில் பங்கேற்று துணை முதல்வர் பதவி வரை அனுபவிக்கும் பீகார் மாநில பாஜகவும், மத்திய மோடி அரசும் இந்தப் பச்சைப் படுகொலைக்குத் துணை நிற்கின்றன.


அனிதா
நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க