பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 |  பாகம் – 11

டோக்ளியாட்டி

பூர்ஷுவாக்களின் இந்தத் தாக்குதலை முறியடிப்பதற்கு வேறு வழி என்ன? ஒரே ஒரு வழிதான் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்டம்தான் அது. இதுதான் ஒரே தீர்வு. எனவே இது விஷயத்தில் நமக்கிருந்த சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். ஆர்டிட்டி டெல் பாப்பலோவை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் இதற்குள்ளாக, ரோம் படையெடுப்பு நடைபெற்ற சமயத்தில் சக்திகளின் சமவலிமை நிலை பெரிய அளவுக்கு நமக்குப் பாதகமாக மாறிவிட்டது.

கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு சிறந்த, மிகச் சரியான கொள்கை வழி நமக்கு மிகப் பெரும் வாய்ப்புகளை அளித்திருக்கக்கூடும்; போராட்டத்தை மிகவும் கூர்மையும் தீவிரமுமடையச் செய்திருக்கக்கூடும். அதிருப்தியுற்ற அனைத்து வெகுஜனப் பகுதியினரையும் ஒரு பரந்து விரிந்த போர் முனையில் அணிதிரட்டும் கொள்கையை அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி கடைப்பிடித்திருக்குமானால் நிலைமை பெரிதும் மாற்றமடைந்திருக்கும். புரட்சிகர நெருக்கடி தோன்றக்கூடிய சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவித்திருக்கும்.

ஆனால் அந்தச் சமயத்தில் சக்திகளின் பரஸ்பர வலிமை நமக்குச் சாதகமாக இல்லை. இந்தப் பிரச்சினையை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றும் கேட்கலாம். ஆரம்பத்தில் நான் கூறியதை நினைவுபடுத்தவே இவ்வாறு செய்திருக்கிறேன்: பாசிசத்துடனான போராட்டம் முடிந்துவிட்டதாக ஒருபோதும் நினைக்கக் கூடாது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

பிப்ரவரி 6-ம் தேதி பிரான்சில் என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள்.10  அப்போது உருவான நிலைமை கட்சிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. எனினும் உடனே அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டது. திறமையும் சாதுர்யமுமிக்க ஒரு ஐக்கிய முன்னணிக் கொள்கையின் மூலம் கட்சி வெகுஜனங்களுக்குத் தலைமை ஏற்றது. அவர்களுக்கு உத்வேகமூட்டி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை வழிநடத்திச் சென்றது. பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு வலிமைமிக்க தடையரணை கட்டியெழுப்பிற்று.

இதனை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பாசிசத்தில் பிளவும் வெடிப்பும் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் அந்தப் பிளவை நாம் அதிகப்படுத்த வேண்டும்; நிலைமையை நெகிழச் செய்து, போராட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும்.

ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசம் எத்தகைய திட்டத்தை மேற்கொண்டது? இச்சமயம் பாசிஸ்டுக் கட்சியில் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பமாயிற்று – சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிஸ்டுக் கட்சியைக் கட்டி உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்.

ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார். அப்போது அவர் ஓர் அனைத்து பாசிஸ்டு அமைச்சரவையை அமைப்பது குறித்து கணநேரம் கூட சிந்திக்கவில்லை. அதற்கு மாறாக நாடாளுமன்றத்தில் பல்வேறு சக்தியினரும் ஒத்துழைக்கும் அடிப்படையில் அமைந்த ஓர் அமைச்சரவையை உருவாக்கினார். சோஷலிஸ்டுகளுக்குக்கூட தமது அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார்.

படிக்க:
பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !
♦ மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

ஒருநாள் நாடாளுமன்றத்தில் பியோஸ்ஸி11 யுடனும் பல்டேசியுடனும் பேசிக் கொண்டிருந்தேன். “அரசாங்கத்தில் எங்களுக்கு இடமளிக்க முசோலினி முன்வந்திருக்கிறார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பகைவனின் பீரங்கியின் முன்னால் இருக்கிறோம். அவரது விருப்பத்துக்கு இசையத்தான் வேண்டும் போலிருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள்.

அரசாங்கத்தில் சேரவில்லை என்றால் அதற்காக அவர்களை யாரும் பாராட்ட மாட்டார்கள். பூர்ஷுவாக்கள்தான் அவர்கள் சேருவதை விரும்பவில்லை. கியோலிட்டியின் ஒத்துழைப்புத் திட்டம் அப்போது ஏற்கெனவே காலாவதியாகிவிட்டிருந்தது.

சோஷலிஸ்டுகளை அரசாங்கத்தில் சேர்ப்பதற்கு செய்யப்படும் முயற்சிகளை ஒருபுறம் பாசிஸ்டுக் கட்சியின் நடுத்தர ஊழியர்களான ஸ்குவாட்ரிஸ்டிகளும், இன்னொருபுறம் பூர்ஷுவா வர்க்கத்தில் மிகவும் பிற்போக்கான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர்.

எனினும் முயற்சி தொடர்ந்தது. பல இன்னல்களும் பிரச்சினைகளும் எதிர்ப்பட்டதன் விளைவாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய அவசியம் காரணமாக சர்வாதிகாரத்தை மேன்மேலும் வலுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பாசிசம் உள்ளாயிற்று.

நாட்டில் ஸ்திர நிலைமையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் 1922, 1923, 1924-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது; அந்தக் கால கட்டத்தைத்தான் இப்போது நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். ஸ்திர நிலைமை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் இத்தாலியில் தலைதூக்கின.

இந்நிலைமையில் பாசிசம் என்ன செய்ய முடியும்? தனது எசமானனான பூர்ஷுவா வர்க்கத்தின் ஆணைகளைத்தான் அது சிரமேல் ஏற்று நிறைவேற்ற முடியும். முதல் நெருக்கடி ஆரம்பமாயிற்று. இந்தக் காலகட்டத்தில் எப்போதும் தோன்றக்கூடிய நெருக்கடிதான் இது. பாசிசத்தின் கொள்கைக்கும் அதன் ஆரம்பகால வெகுஜனத் தளத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம். கட்சியின் அடிமட்ட ஊழியர்களும் ஆதரவாளர்களும் பழைய திட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து வந்தனர் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றும் கருத்துக்களை வளர்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்துகள் பூர்ஷுவாக்களுக்கு ஏற்புடையவையாக இல்லை.

(தொடரும்)

பின்குறிப்புகள் :

10. 1934 பிப்ரவரி 6ம் தேதி பிரான்சில் நடந்த வலதுசாரிக் கலகங்கள், காவல்படையால் ஒடுக்கப்பட்டன; பாசிஸ்டு ஆட்சி அமைப்புகள் மேலும் பரவுவதற்கான அபாயம் பற்றி பிரான்சின் இடதுசாரிகளையும் அகிலத்தையும் விழிப்படையச் செய்ய உதவின. எனவே பொதுஜன அணிக் கொள்கைக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.

11. புரூனோ பியோஸ்ஸி (1881-1944) ஒரு சீர்திருத்தவாத மக்கள் பிரதிநிதி, தொழிற்சங்கவாதி. 1920 செப்டம்பரில் தொழிற்சாலைகள் கைப்பற்றிக் கொள்ளப்பட்டபோது உலோகத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு, பியோஸ்ஸி 1943 ஜூலையில் புனரமைக்கப்பட்ட பொது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இத்தாலிக்குத் திரும்பி வந்தார். 1944 ஜூன் 6 இல், ரோம் நகருக்குச் சுற்றுப்புறத்தில், நாஜிகளால் கொலை செய்யப்பட்டார். 

கினோ பல்டேசி (1879-1934) ஒரு சீர்திருத்தவாத சட்டமன்ற பிரதிநிதி. பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தில் மிகவும் பலம்வந்த நபர்களில் இவரும் ஒருவர். பொதுத் தொழிலாளர் சம்மேளனத்திற்கும் சோஷலிஸ்டுக் கட்சிக்கும் இடையேயான செயல்-ஒற்றுமை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென பல்டேசி வலியுறுத்தினார். சீர்திருத்தவாதிகள், பொது தொழிலாளர் சம்மேளனத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உட்பட, 1922 அக்டோபரில் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவரது கோரிக்கை நிறைவேறியது. பாசிஸ்டு ஆட்சியின் முதல் ஆண்டுகளில் பல்டேசியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் முசோலினி. வர்க்கச் சங்கங்களை பாசிஸ்டுத் தொழிற்சங்கங்களோடு இணைக்கும் திட்டங்கள் சம்பந்தமாகவும் பல்டேசியின் பெயர் அடிப்பட்டது. 1924-க்குப் பின் பாசிச- எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்தார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க